கவுண்டமணி வழியில் சூரி? அவர் 49ஓ, இவர் 99 ஓ…!
தமிழ்சினிமாவில் ஜெயிக்கிற ஒவ்வொருத்தருமே ‘தனி ஒருவன்’தான்! இன்டஸ்ரியிலிருக்கும் சக மனிதர்களின் குழி தோண்டல்… குப்புறத்தள்ளல்களுக்கு நடுவில்தான் ஒருவர் ஜெயிக்க முடிகிறது. கருத்து சொல்கிற அந்தஸ்து வருவதற்கும் காலம் பிடிக்கும். வாழை பழத்தில் குண்டூசி செருகிய மாதிரி கருத்து சொல்வது கலைவாணர் ஸ்டைல். வாழைப்பழமே நசுங்கி பஞ்சாமிர்தம் ஆகிற அளவுக்கு அதன் மீது கடப்பாரை செலுத்துவது கவுண்டமணி ஸ்டைல். இருந்தாலும் பின்னவர் ஸ்டைலுக்குதான் பெருத்த மரியாதை. நாம் சொல்ல வருவதும் அப்படியொரு நடிகர் பற்றிதான்.
இன்று கருத்து சொன்னால், காதை பிடிச்சு திருகி “தேவையா உனக்கு இதெல்லாம்?” என்று கேட்க லட்சோப லட்சம் பேர் குறடு திருப்புளியுடன் காத்திருக்க, தனக்கேயுரிய அழகுடன் கொஞ்சம் கருத்து சொல்லியிருக்கிறாராம் சூரி. கத்துக்குட்டி படத்தில்தான் இந்த திருப்பம். தஞ்சை மாவட்டத்திலிருக்கும் விவசாயிகள் தங்களை அச்சுறுத்தி வரும் ஒரு விஷயம் தொடர்பாக இந்த படத்தில் பேசியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவணன். ஜுனியர் விகடன் இதழில் நிருபராக பணியாற்றிய சரவணன், அதே சமூக அக்கறையோடு இந்த படத்தை இயக்கியிருந்தாலும், படம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிற ரகமாம்!
படத்தை இரண்டாவது முறையாக பார்த்த வைகோவும், முதன் முறையாக பார்த்த பாரதிராஜாவும் இவ்வளவு முக்கியமான கருத்தை இவ்வளவு பிரமாதமா சொல்லியிருக்கிறாரே என்று சரவணனை வியந்ததுடன், சூரிக்கு ஒரு ஸ்பெஷல் ‘லைக்’கும் போட்டிருக்கிறார்கள். எல்லா கருத்துக்களையும் அழகாகவும், நகைச்சுவையோடும், அதே நேரத்தில் மனதில் பதிகிற விதத்திலும் சொல்லியிருக்கிறார் சூரி என்பது அவர்களின் பாராட்டு.
படம் அக்டோபர் 1 ந் தேதி புலியோடு மோதுகிறது. விவசாயிகள் என்றாலே ஏதாவது ஒன்றுடன் மோதப் பிறந்தவர்கள்தானே?