பழசை மறந்தார் கவுதம்மேனன்! பாசக்கரம் நீட்டுவாரா சூர்யா?
போதி மரத்தடி புத்தனையே ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டை போட்டு தலையாட்ட வைத்துவிடுகிற வழி தெரிந்தவர் கவுதம் மேனன். அப்படியாப்பட்ட நெளிவு சுளிவு ஆசாமிக்கே, “நெக்ஸ்ட் டோரை பாருங்க” என்று சொல்லியனுப்பியவர் சூர்யா. அவருக்கு கதை வரல. சொன்ன கதை எதுவும் எனக்கு பிடிக்கவும் இல்ல என்பது போல வெளிப்படையாக ஒரு அறிக்கை விட்டு, தன் தொடர்பு எல்லையிலிருந்தே தூக்கியடித்தார் கவுதம் மேனனை.
அதற்கப்புறம் அவர் ‘என்னை அறிந்தால்’ படத்தையும், இவர் ‘அஞ்சான்’ படத்தையும் முறையே நாட்டுக்கு அர்ப்பணித்து, சொந்த விரலை புண்ணாக்கிக் கொண்டார்கள். சினிமாவில் மட்டும்தான் கட்டி உருண்டு புண்ணாகிற அளவுக்கு கோபப்பட்டாலும், மறுநாளே பார்க்கிற இடத்தில் ‘மச்சான் சவுக்கியமா?’ ஆகி, மருதாணி போல ஒட்டிக் கொள்வார்கள். அப்படிதான் ஒட்டிக் கொள்ள வருகிறாராம் கவுதம் மேனன்.
சூர்யாவின் மனைவி ஜோதிகாவிடம், “நான் சூர்யாவுக்கு கதை சொல்லணும். அதற்கு நீங்கதான் ஏற்பாடு செய்யணும்” என்று சொல்லி வற்புறுத்த, அவரும் மெல்ல சூர்யாவின் காதுக்கு விஷயத்தை கொண்டு போனாராம். கவுதம் இப்படி வந்துவிழவும் ஒரு ரகசிய காரணம் இருக்கிறது. சூர்யாவை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை தயாரிக்க முன் வந்திருக்கிறதாம் ஒரு வியாபார ஸ்தாபனம். அதில் ஒரு படத்தை நாமே இயக்கலாமே என்கிற நப்பாசைதான்.
கெட்டுப்போன பிரண்ட்ஷிப்பை மீண்டும் புதுப்பிப்பாரா சூர்யா? எல்லாம் அவரவர் மூட் செட் ஆவதை பொறுத்த விஷயம். கவுதமுக்கு என்ன ரிசல்ட் வைத்திருக்கிறாரோ சூர்யா?