கெத்து- விமர்சனம்

சிரிச்சா தக்காளி, சீறுனா பங்காளின்னு ஒரேயடியா மாறுவதற்கு ஒரு கெத்து வேணும்! அது கழகத்தின் ‘வருங்கால வைப்பு நிதி’, உதயநிதிக்கு ஓவராகவே இருக்கிறது. கடந்த சில படங்களாக சந்தானத்தையும் அவரது காமெடியையும் மட்டுமே நம்பி நடந்து வந்தவர், இந்த படத்தில் உர்…ர் முகம் காட்டி, உதிரம் சிந்தவும் உழைத்திருக்கிறார். அதற்காக பாராட்டுவதா, பரிதாபப்படுவதா என்ற குழப்பம் இந்த நிமிடம் வரை தொடர்வதுதான் இந்த கெத்து தந்த பேராபத்து!

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்துல கண்ணாயிருப்பது மாதிரியான கதை! “இந்து கோவில்கள், கிறிஸ்துவ ஆலயங்கள், முஸ்லீம் மசூதிகள் என அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் மதுக்கடைகள்! குடித்துவிட்டு ஆடுவோரின் ஆபாச நடனங்கள்” (இந்த வசனத்தை எங்கேயோ கேட்ட மாதிரியிருக்கா? உதயநிதி தாத்தாவின் முழக்கம்தான்) இந்தப்படத்தில் பள்ளிக்கு எதிரிலேயே ஒரு மதுக்கடை பார். அதை அகற்ற வேண்டுமென உதயநிதியின் அப்பாவும் பி.டி.வாத்தியாருமான சத்யராஜ் போலீசில் புகார் கொடுக்க, “யாருகிட்ட வந்து?” என்று எகிறி அடிக்க ஆரம்பிக்கிறது வில்லன் கோஷ்டி. இதில் அப்பாவை காப்பாற்ற களத்தில் இறங்கும் உதயநிதி, அதே வில்லன்களை புரட்டியெடுக்க, கலகம் ஸ்டார்ட்! (குந்துனாப்ல தேர்தல் வாக்குறுதியை படத்துல நுழைச்சிட்டாரே!)

அடுத்த நாளே வில்லனின் தம்பி இறந்துவிட, அவன் கையில் சத்யராஜின் மோதிரம். பிறகென்ன? சத்யராஜை கைது செய்கிறது போலீஸ். சிறைக்குள் வைத்தும் அவரை போட்டுத்தள்ள முயல்கிறது வில்லன் கோஷ்டி. அப்பாவை காப்பாற்ற வேண்டும் என்றால், உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்க வேண்டும். களமிறங்குகிறார் உதயநிதி. கொலையாளி யார்? இவர் கையில் சிக்கினானா? க்ளைமாக்ஸ்!

இதில் விஞ்ஞானி அப்துல் கமாலை கொல்ல வருகிற ஒரு உளவாளியின் கிளைக்கதையும் கூடவே நகர்ந்து வருகிறது. இந்தக்கதையும் அந்தக்கதையும் ஒன்றாக சேரும் இடம் எப்படா வரும் என்ற ஆவல் பிறக்க வேண்டும் அல்லவா? மாறாக, ‘எப்படா முடியும்’ என்கிற ஆவல்தான் பிறக்கிறது. திரைக்கதையின் லட்சணம் அப்படி.

எந்நேரமும் இறுக்கமான முகத்துடன் நடமாடும் உதயநிதி கொட்டுகிற எக்ஸ்பிரஷன்களிலும் அதே இறுக்கத்தை காட்டுவதை தவிர்த்திருக்கலாம். ஆனாலும் ஆக்ஷன் ஹீரோவாக மாறி அவர் விடுகிற குத்தும், உதையும் டாப்பில் இருக்கும் எந்த ஹீரோவுக்கும் சளைத்ததல்ல! இவருக்கும் எமிக்குமான அந்த காதல் எபிசோட், நல்லாதான் இருக்கு. ஆனால்… என்னய்யா ஆனால்? பிறகென்னவாம்… அந்த எமியை ஒரு டயலாக்கில் “நான் வெள்ளைக்காரி மாதிரி இருக்கேன்ல” என்று பேச வைத்துவிட்டால் ஆகிவிட்டதா? மனசுக்குள் வந்து மருதாணியாக கலக்க வேண்டாமா? இதுபோல நம் கலாச்சாரத்திற்கு ஒட்டாத முகங்களுக்கு ஏன்தான் கோடி கோடியா கொட்டி அழறாங்களோ?

ஒரு பி.டி. வாத்தியாரின் சுய ஒழுக்க ரத்தத்தை அடிக்கடி வழிய விடுகிறார் சத்யராஜ். நல்ல கேரக்டர். பெரிய அலட்டல் இல்லாமல் பிரசன்ட் பண்ணுகிறார் அவரும். அந்த வயசிலும் பெண்டாட்டியுடன் ரொமான்ஸ் டயலாக் என்பதுதான் அரத பழசான ஐயே…

இந்த படத்தின் வில்லன் விக்ராந்த். இருக்கிற ரெண்டே ரெண்டு முழியை தவிர மீதி இடங்களில் கர்சீப்பை கட்டிக் கொள்கிறார். எக்ஸ்பிரஷனே வராத முகத்திற்கு சரியான சேஃப்ட்டி அதுதானே! இவரை பிடிக்க வேண்டும் என்று காரிலேயே மணிக்கணக்காக காத்திருக்கும் சத்யராஜும், உதயநிதியும், அவர் கடையை திறந்து உள்ளே போகும் வரைக்கும் கூட காத்திருக்க மாட்டார்களாம். அதை விடுங்கள்… ஒரு கொலை நடந்த வீட்டை அப்படியே போட்டுவிட்டு நடையை கட்டிவிடுமா போலீஸ். அந்த வீட்டுக்குள் எவர் வேண்டுமானாலும் நுழைந்து அங்கிருந்து துப்பாக்கி கோணம் பார்க்கலாம் போலிருக்கிறது. ஒரு பள்ளிக்கூடம் காண்பிக்கிறார்கள். சும்மா கூட நாலு மாணவர்களை காண்பிக்கவில்லை. ஒரு ஊரை காண்பிக்கிறார்கள். சும்மா கூட தெருவில் ஆள் நடமாட்டமில்லை. இப்படி காமா சோமா என்று நகர்கிறது படம்.

கான்ஸ்டபிள் கருணாகரனுக்கு பெரிசாக சிரிப்பு மூட்டும் வேலையில்லை. தப்பித்தார். நாமும் தப்பித்தோம்!

படத்தின் மிகப்பெரிய ஆறுதலே சுகுமாரின் ஒளிப்பதிவுதான். பளிச்சென்று இருக்கிறது. பல நேரங்களில் காரண காரியம் இல்லாமல் அவரும் ‘டாப் ஆங்கிள்’ வைப்பதுதான் புரியாத புதிர்.

கம்போஸ் பண்ணியாச்சே என்பதற்காக படத்தில் நடுநடுவே திணிக்கப்பட்டாலும், ஹாரிசின் இசையில் எல்லா பாடல்களும் இனிமை. குறிப்பாக தேன்காற்று வந்தது… பாடலும் அதில் வழியும் மெலடியும்! பின்னணி இசையில்தான் படுத்தி எடுத்துவிட்டார்.

வெள்ளந்தி முகத்தோடு வீடெங்கும் நுழைந்த அந்த பழைய உதயநிதிதான் பாந்தம்! இபிகோவுக்கு தேவைப்படும் இடைஞ்சல் ஹீரோக்கள்தான் ஊர் கொள்ளாமல் திரிகிறார்களே… உதயநிதியின் திடீர் ‘கெத்து’ இந்த ஒரு படத்தோடு போகட்டும்! ஆமா… சந்தானத்துக்கு எப்ப அட்வான்ஸ் கொடுக்கப் போறீங்க?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கதக்களி- விமர்சனம்

கதை, ஒரு ‘பந்த்’ நாளில் நடப்பதாக வைத்துக் கொண்டாலும் கூட, வெளியூரிலிருந்து வந்து இறங்குவார் விஷால்! அவரை பொருத்தவரை அதுதான் சென்ட்டிமென்ட். கோடம்பாக்கத்தில் இப்படியொரு கதை‘கிலி’ நிலவி...

Close