கதை சொன்ன கொடுமைக்கு இதுதான் தண்டனையா? கதறும் இயக்குனர்
ஜி.வி.பிரகாஷ் தாடி வைத்திருப்பதில் யாருக்கு நஷ்டமோ, லாபமோ? ‘பென்சில்’ பட இயக்குனருக்கு பெரும் வருத்தமாம். ஏன்…? அதை தெரிந்து கொள்வதற்கு முன் பிரகாஷின் ஆர்வக் கோளாறு யார் யாருக்கெல்லாம் இம்சை தருகிறது என்பதை பார்த்துவிடுவது நல்லது.
‘பென்சில்’ படத்தின் கதையை ஒரு இசையமைப்பாளர் என்கிற அடிப்படையில் ஜி.வி.பிரகாஷிடம் சொல்லப் போனார் அப்படத்தின் டைரக்டர் மணி நாகராஜ். அவரிடம் கதை சொல்லப் போகிற நேரம் வரைக்கும் கூட தெரியாது. பிரகாஷ்தான் இந்த படத்தின் ஹீரோ என்பது. ஒரு புதுமுகத்தை வைத்து ஒன்றரை கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்துவிடுவது என்பதுதான் மணியின் திட்டமாக இருந்ததாம். ஆனால், கதையை கேட்ட ஜி.வி. ‘இதில் நானே ஹீரோவாக நடிக்கிறேன்’ என்று ஆசைப்பட, உட்கார்ந்தது கரண்ட் கம்பியில் காக்கை! ஆஹா… நம்ம படத்துக்கு ஒரே நாளில் ஹைப் கிடைச்சாச்சு. ஆல் ஏரியா ஸோல்டு அவுட் என்கிற நம்பிக்கையில் பிரகாஷின் ஆசையை பெருசு படுத்த ஆரம்பித்தார் மணி நாகராஜ். ஒன்றரை கோடி ரூபாய் பட்ஜெட், நாலு கோடிக்கு நீண்டது. அப்புறமென்ன? கையில் பணமிருந்தவரை நடந்த ஷுட்டிங் அதற்கப்புறம் நின்றே போய்விட்டது.
பாதிக்கு மேல் படம் வளர வேண்டுமாம். பைனான்சியர்கள் எல்லாரும், ஜி.வி.பிரகாஷ் ஒரு வார்த்தை சொன்னா பணம் தர்றோம் என்கிறார்களாம். ஆனால், நைசாக இந்த பிரச்சனையிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார் அவர். இந்த படம் நிற்கிறதே என்கிற கவலையே இல்லாமல் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்கிற படத்தில் நடிக்க போய்விட்டார். அதற்காகதான் இந்த தாடி. என் படமே முடியல. இவர் தாடி வளர்க்கிறார். நாளைக்கே எங்களுக்கு பணம் வந்து படம் எடுக்க கிளம்புனா அவர் வரணுமே என்று கவலைப்படுகிறாராம் மணி நாகராஜ்.
ஆனால் த்ரிஷா நயன்தாரா நிலவரம் எப்படி? அதுவும் ஆரம்ப கட்டத்திலேயே நிற்கிறதாம். பைனான்ஸ் பார்ட்டிகள், இங்கும் ஜி.வி.பிரகாஷையே ஜாமீனுக்கு இழுக்க, நம்ம மூஞ்சுக்கு பூஜை போட்டாலே யாவாரம் ஆயுடும்னு சொன்னாங்களே? இப்ப ஏன் இப்படி ஆகுது என்கிறாராம் ஜி.வி.
தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்.