நயன்தாரா விஷயத்தில் தம்பி இப்படி பண்ணுதே…? ஜி.வி.பிரகாஷ் மீது திரையுலகம் காட்டம்!
த்ரிஷாவும் நயன்தாராவும் இல்லையென்றால் வாலிபர்களின் உலகம் எப்படியெல்லாம் குப்புற விழுந்து கோழி முட்டையாக உடைந்திருக்கும் என்பதை நினைத்தால், இறைவா… உன் படைப்பில்தான் எத்தனை எத்தனை அழகு என்று வாயார வாழ்த்தி வசதியாக கனவு காண தோன்றுகிறது. இப்போது நாம் சொல்லப் போகிற விஷயம் அழகிகளுக்கான கிரடிட் என்று எடுத்துக்கொள்வதா, அல்லது அவர்களின் புகழுக்கான ராயல்டி என்று எடுத்துக் கொள்வதா தெரியவில்லை. பின்வரும் செய்தி பிக்காஸ் ஆஃப் கண்ணியம்.
ஜி.வி.பிரகாஷ் ‘பென்சில்’ படத்திற்கு பிறகு ஹீரோவாக நடிக்கவிருக்கிற படத்தின் பெயர் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ இப்படியொரு பெயர் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே வாழ்த்துக்களும் பாராட்டுகளும் வந்து குவிகிறதாம் ஜி.விக்கு. ஒரே அறிவிப்பில் ஓப்பனிங் கொடுத்துவிட்ட இருவருக்கும் ஏதாவது செய்தாக வேண்டுமே என்று தவியாய் தவித்துவிட்டார் அவர்.
உடனே அவ்விரு நடிகைகளையும் தொடர்பு கொண்ட ஜி.வி. ‘உங்க பெயரை என் படத்திற்கு பயன்படுத்திகிட்ட காரணத்திற்காக நான் ஏதாவது மரியாதை செய்யணும்னு நினைக்கிறேன்’ என்று கூறி சில லகரங்களை தருவதாக கூறியிருக்கிறாராம். பொன்னை வைத்த இடத்தில் பூவை வைக்கிற மாதிரி இவர் கொடுப்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? இல்ல… பரவால்ல இருக்கட்டும் என்கிறார்களா தெரியவில்லை.
ஆனால் இந்த விஷயத்தை அரசல் புரசலாக தெரிந்து கொண்ட சிலர், இப்படியெல்லாம் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துதே தம்பி… என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.