ஆள் பார்க்கறதுக்கு அரை ரஜினி! ரசிகர்களை வியக்க வைக்கும் நட்டி!
நட்டி என்கிற நட்டிக்குமாரை தமிழ்சினிமா வெட்டிக்குமாராக பார்த்த காலம் போயே போச்! சதுரங்க வேட்டைக்கு பிறகு அவரை ஆள் வைத்து துக்கியாவது கால்ஷீட் பெற்றுவிட துடிக்கிறார்கள் முன்னணி தயாரிப்பாளர்கள். இயக்குனர்களும் அவரை ரவுண்டு கட்டி வருகிறார்கள். மனுஷன் சிக்கினால்தானே? அடுத்து விஜய் நடிக்க சிம்புதேவன் இயக்கவிருக்கும் மாரீசன் படத்தின் ஒளிப்பதிவாளர் நம்ம நட்டிதான்! ஆள் பார்ப்பதற்கு அரை ரஜினி மாதிரி இருக்கிறார். மேனரிசங்களும் அப்படியே! இதுதான் நட்டியின் நைலக்ஸ் அட்ராக்ஷ்ன். அவரது பிடிவாதமான இந்த கால்ஷீட் பற்றாக்குறை நாளில் ‘கதம் கதம்’ இயக்குனர் பாபு துயவன் அதிர்ஷ்டசாலிதான்.
சதுரங்க வேட்டைக்கு பிறகு அவரை மொய்த்தெடுக்கும் இயக்குனர்கள் மத்தியில் இவர் முன்பே உஷார். அந்த படம் ஷுட்டிங்கில் இருக்கும் போதே இந்த படத்தில் நட்டியை புக் பண்ணிவிட்டார். இப்போது அவரது ‘கதம் கதம்’ படத்தின் செல்லிங் பாயின்ட் நம்ம நட்டிதான். (பாபு துயவனின் அப்பா துயவன் 100 படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதியவர். ஏராளமான படங்களை தயாரித்திருக்கும் லெஜன்ட்! )
ஒரு ஏரியாவில் வேலை பார்க்கும் இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைதான் இந்த படத்தின் கதை. நடிகர் நந்தா ஒரு ஹீரோவாகவும் நட்டி இன்னொரு ஹீரோவாகவும் நடிக்கிறார்கள். அதாவது நந்தா நல்ல போலீஸ். நட்டி கெட்ட போலீஸ். முடிவில் உல்டா ஆவதுதான் க்ளைமாக்ஸ் என்கிறார்கள். தாஜ்நுர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஏகத்திற்கும் பாராட்டு விழுந்தது தாஜ்நுருக்கு.
படத்திலும் சரி, நேரிலும் சரி, எப்போதும் உர்ரென்றே இருக்கும் நந்தாவை நாகரீகம் பார்க்காமல் கேட்டேவிட்டார்கள் பத்திரிகையாளர்கள். ‘ஏன் சார் எப்ப பார்த்தாலும் உம்முன்னே இருக்கீங்க?’ இப்படியொரு கேள்வியை எதிர்பார்க்காத நந்தா சுதாரித்துக் கொண்டு, ‘இன்னும் சிரிக்கிற மாதிரி ஒரு ஹிட்டும் வரலையே, அதனால்தான்’ என்றார்.
போலீஸ் கதை படங்களிலிலேயே சற்று வித்தியாசமாக உருவாகி வரும் இப்படத்தை பிரபல நிறுவனமான தேனான்டாள் பிலிம்ஸ் உலகம் முழுக்க வெளியிடுகிறது. அப்ப தைரியமா டிக்கெட் வாங்கிட்டு உள்ள போகலாம்!