சிவகுமாரை நேர்ல பார்க்கணும்…! ஹன்சிகா திடீர் ஆசை
இப்போதெல்லாம் ஹன்சிகாவின் ஆசை சிவகுமாரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதாகதான் இருக்கிறது. ஒருமுறை ஹன்சிகா டி.ராஜேந்தர் காலில் விழுந்து ஆசி பெற்றார். அதற்கான தேவை இருந்தது அப்போது. ஆனால் சிவகுமாரை சந்திக்க ஹன்சிகா ஆசைப்படுவதில் என்ன விசேஷம் இருக்க முடியும்? இத்தனைக்கும் அவர் வீட்டு சிங்கங்கள் ரெண்டுக்குமே டும் டும் டும் முடிஞ்சாச்சே?
ம்ஹும்… இது ரொம்ப பாசிட்டிவ்வான சந்திப்புதான். ஹன்சிகாவை நல்ல நடிகையாக தெரியும் நமக்கு. நல்ல அழகியாக தெரியும் நமக்கு. நல்ல மனிதாபிமானியாக தெரியும் நமக்கு. ஆனால் அவருக்குள் அற்புதமான ஓவியக்காரி ஒருத்தியும் இருக்கிறார். அந்த ஓவியராகதான் சந்திக்க விரும்புகிறாராம் ஹன்சிகா. மாடர்ன் ஆர்ட் மட்டுமல்ல, மனதை கொள்ளும் நிழல் ஓவியங்களை தீட்டுவதிலும் வல்லவர் ஹன்சிகா. இதுவரைக்கும் சுமார் 200 படங்கள் வரைந்து வைத்திருக்கிறாராம். பிள்ளையார் போன்ற கடவுள் படங்களும் அதில் அடக்கம். இந்த படங்களை சென்னையில் ஒரு கண்காட்சியாக வைக்கிற ஆசையும் இருக்கிறதாம் அவருக்கு.
அதற்கு முன்பாக எல்லா ஓவியங்களையும் காட்டி, சிவகுமாரிடம் ஆசி வாங்க வேண்டும் என்பதுதான் ஹன்சிகாவின் திட்டமாக இருக்கிறது. நான் இத்தனை வருஷம் நடிச்ச வாழ்க்கை, என் ஓவியன் வாழ்க்கைக்கு முன் கால் துசுக்கு வராது என்று கூறுகிற அளவுக்கு ஓவியத்தின் மீது காதல் கொண்டு திரிபவர் சிவகுமார். ஹன்சிகாவின் ஆசைக்கு அவர் முடியாது என்றா சொல்லப் போகிறார்.
‘அட ஒரு ஓவியமே ஓவியம் வரைகிறதே…!’ என்று உலக மகா டுபாக்கூர் கவிதையோடு இந்த செய்தியை முடிப்பதுதானே மரபு? அப்படியே முடிச்சுக்கங்க…