விஜய் ரசிகர்களுக்கு ஒரு குஷியான செய்தி…! ‘சுற்றி நில்லாதே பகையே, துள்ளி வருகுது கத்தி’
கத்திக்கு விடிவு காலம் பொறந்தாச்சு!
‘தீபாவளி வெளியீடு’ என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்த பின்பும் படம் வருமா, வராதா? என்கிற பெரும் குழப்பத்தில் சிக்கி தவித்தது கோடம்பாக்கம். விஜய் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த அந்த கத்தி, இப்போது இடம் மாறி இன்னொருவர் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருப்பதால், கத்திக்கு விடுதலை!
திட்டமிட்டபடி படம் தீபாவளிக்கு வருகிறதாம். ஆனால் சந்தடி சாக்கில் பூலோகம் படத்தையும் உள்ளே இறக்கிவிட ஆயத்தமாகிவிட்டார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். கத்தி, பூஜை, பூலோகம் ஆகிய மூன்று படங்களும் ஒரே நாள் திரைக்கு வந்தால், கலெக்ஷன் மூன்றாக பிரியும். தியேட்டர்களும் முறையாக அமையாது என்பதால், நமக்கு நாமே பேசி நல்ல திட்டத்தை உருவாக்குவோம் என்கிறார்களாம் விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும்.
இந்த இரண்டு படங்களில் தமிழ்நாடு திரையரங்கத்தை பொறுத்த மட்டும் சுமார் 40 கோடிக்கும் மேல் விஜய் படத்திற்கான வியாபாரம் இருக்கிறது. அதில் பாதிதான் விஷாலுக்கு. அதிலும் குறைச்சு குறைச்சுதான் ஜெயம் ரவிக்கு. இந்த நிலையில் கத்தியை விட்டுக் கொடுக்க ஒருவரும் தயாராக இல்லை. அதனால் ஒரு திட்டம் வகுத்திருக்கிறார்களாம். தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே கத்தியை வெளியிட்டுவிடுவது என்பதுதான் அந்த திட்டம். அதன்படி 17 ந் தேதி விஜய் திரைக்கு வருவார் என்று நம்பப்படுகிறது.
இந்த நான்கு நாள் கலெக்ஷனே பல கோடிகளை எட்டிவிடும். அதற்காக எல்லா தியேட்டர்களிலும் கத்தியை திரையிட முடிவு செய்திருக்கிறார்களாம். நான்கு நாட்கள் கழித்து பூஜை மற்றும் பூலோகம் வரும்போது கத்திக்கான தியேட்டர்களை சுருக்கிக் கொள்வதாக திட்டம். இதற்கு ஏகோபித்த ஆதரவும் பெருகியிருப்பதால், விஜய் ரசிகர்களுக்கான விருந்து தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே துவங்கிவிடும்.
ஆமாங்… இந்த கத்தி என்னோட கதை என்று கோர்ட்டுக்கு போனாரே, மீஞ்சூர் கோபி என்ற உதவி இயக்குனர்…. அந்த பஞ்சாயத்து என்னாச்சு? ஆதாரம் இல்லேன்னு அவரது மனுவை தள்ளுபடி செய்துவிட்டதாம் நீதிமன்றம்!
‘சுற்றி நில்லாதே பகையே, துள்ளி வருகுது கத்தி’ என்கிறார்களோ?