அதுக்குதான் பாலாவும் ஷங்கரும் இருக்காங்களே…? நழுவல்ஸ் ஹரி!

‘இந்த படத்திற்கு விருதே கொடுக்கலாம்’ என்று பத்திரிகைகள் பாராட்டினால், ‘போச்சுரா… நம்ம பொழப்புக்கே குழிய வெட்டிட்டானுங்களே’ என்று கவலைப்படுவார்களாம் சினிமாக்காரர்கள். ஏனென்றால் விருதுக்கு தகுதியான படம் என்றால், கேன்டீனில் கூட்டம் அலைமோத வைக்கிற படம் என்பது கொல்லை வழி ஃபார்முலா! இந்த கெட்ட நேரத்தில் அப்படியொரு கேள்வியை கேட்டிருக்கக் கூடாதுதான். ஆனால் பிரஸ் கேட்க, பொசுக்கென்று ஆனார் ஹரி.

‘ஏதோ நான் உண்டு. அருவா உண்டு. வெட்டு குத்து உண்டுன்னு படமெடுத்துக்கிட்டு இருக்கேன். இந்திய அளவுல வியக்க வைக்கறதுக்குதான் ஒரு பாலா இருக்காரே? உலக தமிழர்களை வியக்க வைக்கிற அளவுக்கு பிரமாண்டமா படம் எடுக்கதான் ஒரு ஷங்கர் இருக்காரே? நான் ஏதோ ஒரு ஓரமா கமர்ஷியல் படம் எடுத்துகிட்டு இருக்கேன். ஃபைட் நடக்கும் போது நாலு சுமோவை குறுக்கே விட்டுகிட்டுருக்கேன். அதெல்லாம் கண்டுக்காம விட்டுடணும். எங்கிட்ட போய் இந்த கேள்வியா? என்றார் டைரக்டர் ஹரி. அவரை அதிர வைத்த அந்த கேள்வி இதுதான்.

‘இப்படியே ஆக்ஷன் படமா எடுத்துகிட்டு இருக்கீங்க? உங்களுக்கு விருது வாங்கணும்னு ஆசையில்லயா?’ சீறுகிற பாம்பு போல படமெடுக்கும் ஹரியே இந்த கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் புழுவாய் துடித்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன பதில்தான் மேலே நீங்கள் படித்தது.

ஹரியே தேனீ போல சுறுசுறுப்பான ஆசாமி. அவரையே ஒரு ஹீரோ வியக்க வைத்தார் என்றால் அது விஷால்தான் போலிருக்கிறது. ஒரு தயாரிப்பாளர்னா இப்படிதான் இருக்கணும் என்பதை நான் விஷால் சாரை பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன். ஆறு மணிக்கு ஷுட்டிங் முடிஞ்சா உடனே அன்றைய கணக்கை அப்பவே கேரவேன்ல உட்கார்ந்து சரி பார்த்துட்டுதான் உறங்கவே போவார். அந்தளவுக்கு சின்சியாரிடி. ரொம்ப வியப்பா இருக்குது என்றார் ஹரி.

‘அதெப்பிடிங்க முடியுது?’ என்று விஷாலிடம் கேட்டால், அவரும் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. காலையில் 9 மணிக்கு ஷாட்ல வந்து நின்னுட்டேன்னா நான் தயாரிப்பாளர்ங்கறதை மறந்துருவேன். எவ்வளவு சிக்கலான விஷயமா இருந்தாலும் என் காதுக்கு கொண்டு வரவும் மாட்டாங்க. ஈவினிங் ஷுட்டிங் முடிஞ்சுதுன்னா நான் தயாரிப்பாளர். இரண்டையும் ஒண்ணா போட்டு குழப்பிக்கறதேயில்ல என்றார்.

பாண்டியநாடு படத்திற்கு முன்னாடியிருந்த விஷால் வேற. இப்ப இருக்கிற விஷால் வேற. எதற்கும் அலட்டிக்கறதில்ல என்றார் சந்தோஷமாக. இரட்டை குதிரை சவாரி… விஷால் போன்ற வந்திய தேவன்களுக்கு சுலபம்தான்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல?

ஒரு படம் பெரிய படமா, சின்ன படமா என்பது பேச்சே இல்லை. வெற்றி பெறுகிற எல்லா படங்களுமே பெரிய படங்கள்தான். இப்படி பேசாத திரையுலக பிரபலங்களே இல்லை....

Close