கபாலிக்கும் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கும் என்னய்யா சம்பந்தம்?

நான்தாள் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி வந்தவர்களையெல்லாம், நடுக்கல் ஜுரத்திற்கு ஆளாக்கிவிட்டார் ரஜினி. இப்படியொரு எதிர்பார்ப்பு உலகத்தில் வேறெந்த நடிகருக்காவது இருந்திருக்குமா என்றால் அந்த ஜாக்கிசானே இல்லை என்பார் போலிருக்கிறது. அப்படி போட்டு புரட்டிவிட்டார்கள் உலகம் முழுக்க இருக்கிற சினிமா ரசிகர்களை.

ஒரு கள்ள மவுனத்தோடு இதையெல்லாம் ரசித்துக் கொண்டிருந்த அரசு உயர் அதிகாரிகள் கூட, கபாலிக்கு டிக்கெட் கிடைக்குமா என்று ஆவலோடு அலைந்தது தனிக்கதை. கபாலி ஓடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கப் போன போலீசார் கூட, அது கெடக்குப்பா… அதை அப்புறம் பார்த்துக்கலாம் என்று தியேட்டருக்குள் ஐக்கியமாகி நின்று கொண்டே படம் பார்த்த சம்பவங்களும் ஆங்காங்கே நடந்தது.

இந்த நிலையில்தான் நேற்று அந்த திடுக்கிடும் போன். அதுவும் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு. போனில் பரபரப்பாக பேசிய நபர், “நானும் ரெண்டு நாளா போராடுறேன். கபாலிக்கு டிக்கெட் கிடைக்கல. வேற வழியில்ல. இன்னும் கொஞ்ச நேரத்தில் தஞ்சாவூர் பெரிய கோவில்ல குண்டு வெடிக்கும் பார்…” என்று எச்சரித்துவிட்டு போனை வைத்துவிட்டாராம்.

இந்த விஷயத்தை அலட்சியமாக எடுத்துக் கொள்ள முடியுமா? வழக்கத்தை விட இன்னும் கொஞ்சம் கெடுபிடிகளோடு தஞ்சை பெரிய கோவிலை டைட் பண்ணியது போலீஸ். சம்பந்தப்பட்ட ‘குண்டு’ ரசிகரை தேடியும் வருகிறார்கள்.

இதற்கிடையில் கபாலி படத்தின் மூன்று நாள் வசூல் விபரம் வெளியாகி ரஜினி ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது. அதாவது இந்தியாவில் 123 கோடியும், ஓவர்சீஸ் என்று சொல்லப்படும் வெளிநாட்டில் 87 கோடியும் வசூலாகியிருக்கிறது. ஆக மொத்தம் 210 கோடி!

இதுவரை வந்த தமிழ் படங்களின் கலெக்ஷன் ரெக்கார்டுகளை முறியடித்த பாகுபலியின் வசூல் ரெக்கார்டுகளையே, சுக்கு நூறாக உடைத்து வீசிவிட்டார் கபாலி. எல்லாம் ரஜினி மயம்… எங்கும் ரஜினி மயம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் மதன் நடிக்கும் “ 88 “

ஜெ.கே மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக A.ஜெயகுமார் தயாரிக்கும் படம் “ 88 “ இந்த படத்தில் மதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் டாக்டர்...

Close