ஹலோ நான் பேய் பேசுறேன்- விமர்சனம்
‘விட்டால் பேய்க்கும் ஆதார் அட்டை கேட்பாய்ங்க போலிருக்கே?’ என்கிற அளவுக்கு ஆவியும் ஆர்ப்பாட்டமுமாகி விட்டது தமிழ்சினிமா. இங்கு அரைத்த மாவையே அரைத்து பொறித்த அப்பளத்தையே பொறித்து ‘பிலிம்’ காட்டுகிற டைரக்டர்களுக்கு மத்தியில், ‘எனக்கும் ஒரு டிக்கெட் வேணும்’ என்று பரலோகத்திலிருக்கும் பரிசுத்த ஆவிகளையே கூட கால் கடுக்க தியேட்டர் வாசலில் நிற்க விடுகிற அளவுக்கு இன்ட்ரஸ்ட்டிங்காக ஒரு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பாஸ்கர்! (நல்லா வூடு கட்டி அடிக்கிறீங்க பாஸ்… நீங்க இப்ப ப்பாஸ் ப்பாஸ்!)
ஸ்மால் ஸ்மால் திருட்டுகளில் ஈடுபட்டு வரும் வைபவ்க்கும், ‘மார்க்கெட்டிங்’ ஏரியாவில் புழங்கி வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் பழக்கம். பிடிச்ச பையனுக்கு வேலை வாங்கித் தருவோம் என்கிற நல்ல மனசுக்காரி ஐஸ்வர்யாவுக்கு வைபவ் வைக்கும் முள், அவ்வளவு சாரணமானதல்ல. ஆள் பொருளோடும் பைக்கோடும் எஸ்கேப் ஆகிவிட, அதற்கப்புறம் தேடிக் கண்டுபிடிக்கும் ஐஸ்வர்யா, அவரை காதலிக்கிறார். (என்னய்யா சொல்ற என்று அதிரவே தேவையில்லை. ஏனென்றால் ஐஸ்சின் பேக்ரவுண்ட் அப்படி! ) முதல் பாதி முழுக்க இவர்களின் லவ்வும் லகலகவுமாக போய் கொண்டிருக்க, நடுவில்தான் வருகிறது பின் பாதி சினிமாவின் ட்விஸ்ட். சாலை விபத்தில் மரணமடையும் ஓவியாவின் செல்போன் வைபவ் கைக்கு கிடைக்க, ஆட்டையை போட்டுக் கொண்டு ஆள் எஸ்கேப். அப்புறமென்ன…? அந்த போனிலிருந்தே வருகிறார் ஆவியுலக அதிரூபிணி ஓவியா. அவருக்கும் ஒரு லவ். அதை சேர்த்து வைக்க வைபவ் அண்டு மச்சான்ஸ் மாமன்ஸ் டீம்களின் முக்கல் சிக்கல் என்று கதை நகர, நகர, தியேட்டரையே சிரிப்பு குடுவைக்குள் போட்டு குலுக்கியெடுக்கிறார்கள். “சோகமா கூட வாங்க. ஆனா சோக்காளியா போங்க” என்பதுதான் இந்த படம் எடுத்தவர்களின் ஒரே லட்சியமாக இருக்க முடியும்!
வெங்கட் பிரபுவின் பட்டறைகளில் பெயிலாகி பெயிலாகி படித்து வந்த வைபவ்தான் ஹீரோ. மனுஷன் என்னமா நடிக்கிறார்கிறீங்க? “ஹைய்ய்ய்யோ கவிதா” என்பதையே பலவித மாடுலேஷன்களில் அவர் உச்சரிப்பது அழகென்றால், டப்பா குத்து, டம்ளர் குத்து, டிபன் பாக்ஸ் குத்து என்று சாவு டான்சை விதவிதமாக சொல்லியடிக்கும் அந்த வேகமென்ன? விசேஷமென்ன? படம் முழுக்க பட்டாசாக வெடித்திருக்கிறார் மனுஷன். ‘‘இந்த பைக் எவ்ளோ பாஸ்… இந்த மெஷின் எவ்ளோ பாஸ்… ஆக மொத்தம் நாற்பதாயிரம் ரூபா வருதுல்ல…” என்று அவர் விசாரிக்கும் போதே தெரிந்துவிடுகிறது, அடுத்த நிமிஷம் என்ன நடக்கப் போகிறதென்று? அந்த வெடிச்சிரிப்புக்கு நாம் தயாராகும்போதே, அடுத்த சிரிப்புக்கு திரி கொளுத்தி வைக்கிறார் வைபவ். காமெடியை எழுதுவது கூட முக்கியமில்லை. அதை சுமக்கிற கெப்பாசிடியுள்ள நடிகர் இருந்தால்தான் அது தேறும். அந்த விஷயத்தில் வைபவ்…. அசகாய சூரனாக இருக்கிறார்!
அப்புறம் நம்ம கவிதா, ஐஸ்வர்யா ராஜேஷ். (மேக்கப்பை மட்டும் குறைச்சுக்கோம்மா, மிடியல) ஒரு திருடன் என்று தெரிந்தும் இவர் வைபவ்வை காதலிப்பதற்கு, பெரிதாக ஒரு பார்முலாவையும் தேடவில்லை டைரக்டர். படம் பார்க்கிற நாமும்தான்! இவரும் இவரது அண்ணன் வி.டி.வி யின் குடும்ப பின்னணியுமே ஒரு ஃபுல் கச்சேரிக்கு தயாராக்கிவிடுகிறது நம்மை. டபுள் மீனிங்ஸ் கூட இல்லை. சிங்கிள் மீனிங்காகவே அத்தனையையும் போட்டுத் தள்ளுகிறார் வி.டி.வி. மனுஷன் சும்மாச்சும் நிமிர்ந்து பார்த்தால் கூட நமக்கு அடி வயிற்றிலிருந்து கிளம்பிவிடுகிறது சிரிப்பு. சரக்கை இவர் மிக்சிங் பண்ணுகிற அழகும், அதற்கு கொடுக்கிற விளக்கமும், இந்த டாஸ்மாக் யுகத்தின் சாலச் சிறந்த தத்துவம். அதுவும் சாவுக் குத்து எப்படி குத்துவது என்பதற்காகவே இவர் ஒரு பயிற்சி பட்டறை நடத்துவதும், அங்கு மாணவர்கள் பயில வருவதும்… எங்கய்யா புடிக்கிறீங்க, இப்படியெல்லாம்?!
படத்தில் கொஞ்சம்தான் வருகிறார் யோகி பாபு. இன்னும் நாலு நாள் கால்ஷீட்டை எக்ஸ்ட்ராவாக வாங்கியிருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கிறார். ‘கம்போசிங்ல இருக்கேன்பா…’ என்று அவர் பங்குக்கு அவரும் குலுக்கியெடுகிறார். வி.டி.வி கணேஷுடன் வரும் அந்த சிங்கப்பூர் தீபன், பிசி காமெடியன்களுக்கு சப்ஸ்ட்டிடியூட்டாக வரக்கூடும்.
அப்புறம் கருணாகரன்! ஓவியா காதலிக்கும் டாக்டர். நாற்பது ப்ளஸ் ஆளுக்கு இவர் ஸ்டெத்தாஸ்கோப் வைக்கும் இடங்களும் விளக்கமும் படுபயங்கர காமெடி என்றால், ஒரு ஆவியிடம் சிக்கிக் கொண்டு அவர் படும் பாடு அதைவிட பிரமாதம். ஓவியா… ஓவர் மேக்கப்யா! இருந்தாலும் ஆவிதானே. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். இவரது போர்ஷனை தனக்குள் ஆவியாக வாங்கிக் கொண்டு, ஓவியாவுக்காகவும் சேர்த்தே பர்மாமென்ஸ் பண்ணிவிடுகிறார் ஐஸ்வர்யா. அதற்காக ஓவியா ஒன்றும் ஒப்புக்கு சப்பாணியாக வரவில்லை என்பது ஆறுதல்.
பாடல்கள் சித்தார்த் விபின். அந்த வளர்ந்த குழந்தை, இந்த படத்தில் சில காட்சிகளிலும் தோன்றியிருக்கிறது. ந்ந்ந்ந்நல்லாயிருக்கு. நல்லாதான் இருக்கு! பாடல்களில் கருணாகரன் தன் கதை சொல்லும் அந்த பாடல் புது முயற்சி. எழுதிய பாடலாசிரியருக்கும் சேர்த்து ஒரு இனிப்பு முட்டாய்!
சுந்தர்சி சாரா…. ஹலோ நான் ‘சூப்பர் ஹிட்’ பேசுறேன்!
-ஆர்.எஸ்.அந்தணன்
பின்குறிப்பு- அவளும் பெண்தானே என்று ஆவிக்கும் சக்களத்தி போஸ்டிங் கொடுத்து வைத்துக் கொள்கிறார் மனைவி. அந்த ஒரு கருத்துக்காகவே ஒரு ஆஹா ஓஹோ….வ்வ்வ்வ்