வாகன சோதனை… வண்டியில் ரெண்டு கோடி… அட்வான்சை வாங்காமல் அல்லாட விட்ட ஹீரோ…

எலக்ஷன் டைம்… பை நிறைய பணத்தோட போற எல்லாரையும் சோதனைங்கிற பேர்ல சொல்லாம கொள்ளாம நரகத்துக்கு போக வைக்கிறாங்களே இந்த அதிகாரிகங்க… என்று புலம்பல் சப்தம் ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்தியா முழுக்க. முறையான ஆவணங்களை காட்டலேன்னா அத்தனை பணமும் அபேஸ் என்கிற அளவுக்கு கெடுபிடிகள் அதிகமாக இருந்து வருகிற நேரம். இந்த பொல்லாத நேரத்தில் ஒரு ஹீரோவுக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்காக ரெண்டு கோடியோடு வந்த தயாரிப்பாளரை சம்பந்தப்பட்ட ஹீரோவே அல்லாட விட்ட கதைதான் இது. முழுசாக படித்துவிட்டு நாலு சொட்டு கண்ணீர் விட்டுட்டு கௌம்புங்க. ஏனென்றால் மிச்ச சொச்ச ஆறு மாசத்தை இந்த ஹீரோவோடுதான் கழிக்கப் போகிறார் அந்த தயாரிப்பாளர்.

பிஞ்சிலே பழுத்தவர், அராத்து, பஞ்சுவாலிடிக்கும் இவருக்கும் சம்பந்தமேயில்லை என்று பெயரெடுத்த ஹீரோ இவர். கடந்த சில மாதங்களாகவே தாங்கொணா துயரத்திலிருக்கும் இவரை தனது புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார் அந்த தோல்விப்பட தயாரிப்பாளர். சமீபத்தில் ஒரு பிரபலமான ஹீரோவை வைத்து தியேட்டர் தொடர்பான படம் எடுத்தவர் இந்த தயாரிப்பாளர். இத்தனைக்கும் அண்டை மாநிலத்திலிருந்து தமிழ் படங்கள் மீது ஆசை கொண்டு பணத்தை முதலீடு செய்தவர். ஆனால் படம் பப்படம் ஆகிவிட்டது. முந்தைய படத்தில் விட்டதை அடுத்த படத்திலாவது பிடித்துவிடலாம் என்று கணக்கு போட்டு, மீண்டும் அதே ஹீரோவிடம் கால்ஷீட் கேட்க, அவரோ… நான் பெரிய இயக்குனர் படத்தில் நடிக்க போறேன். அவரு எப்ப என்னைய விடுவாருன்னு எனக்கே தெரியாது. வெயிட் பண்ணாம வேற ஹீரோவை பாருங்க என்று கூறிவிட்டாராம்.

புலிக்கு பயந்து சிங்கத்தின் வாயிலே சிக்கிய மாதிரி இந்த ஓழுங்கீன ஹீரோவை எப்படியோ பேசி முடித்துவிட்டார் தயாரிப்பாளர். ரெண்டு கோடி அட்வான்ஸ் கொடுங்க என்று கூறிவிட்டார் ஹீரோவும். மாலை ஏழு மணிக்கு ஒரு போன் பண்ணிட்டு நான் சொல்ற இடத்துக்கு வந்துருங்க. இதுதான் ஹீரோவின் உத்தரவு. பணத்தை காரில் வைத்துக் கொண்டு கிளம்பிய தயாரிப்பாளர் சரியாக ஏழு மணிக்கு போன் அடிக்க, போன் ஸ்விட்ச் ஆஃப். ஐந்து நிமித்திற்கொருமுறை போன் அடித்துக் கொண்டேயிருந்தாலும், நம்பர்தான் தேய்ந்ததே தவிர ஹீரோ சிக்கியபாடில்லை. ஹீரோவின் அப்பாவுக்கு போன் அடித்தால், ‘தேவைதான் பணம். ஆனால் அதை சரியான நேரத்துக்கு வாங்க ஆசைப்படலியே அவன் மனம்’ என்று கவலைப்பட்டுவிட்டு அவனையே கான்டாக்ட் பண்ணுங்க என்று ஒதுங்கிக் கொண்டாராம்.

பணத்தை காரில் வைத்துக் கொண்டு ராத்திரி பத்து மணி வரைக்கும் நெருப்பை மடியில் கட்டிக் கொண்டது போல சென்னையை சுற்றி சுற்றி வந்த தயாரிப்பாளர், எப்படியோ ஹீரோவை கண்டுபிடித்து பணத்தை ஒப்படைத்தாராம்.

படிச்சிட்டீங்களா? முதல் பாராவின் கடைசி வரியையும் படிச்சுட்டு கௌம்புங்க. உலகம் இப்படிதான் இருக்கு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜெய் படம்… கமிஷனில் குளித்த இயக்குனர்?

சென்னை கோவை போன்ற நகரங்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் தவிர மற்ற தியேட்டர்களில் எல்லாம், இங்கு குறைந்த விலைக்கு பிளாட்கள் விற்கப்படும் என்று போர்டு வைக்காத குறைதான். அந்தளவுக்கு...

Close