‘முன்னால் பார்த்தால் முழு நிலா, பின்னால் பார்த்தால் பிறை நிலா’
‘முன்னால் பார்த்தால் முழு நிலா, பின்னால் பார்த்தால் பிறை நிலா’ என்று அவ்வளவு அழகாக இருக்கிறார் தேஜஸ்வினி. ‘ஆந்திரா மெஸ்’ படத்தின் ஹீரோயின். அப்படி பின்னால் பார்க்கும்போது நமக்கு கிடைத்த இன்ப அழகை இப்பவே வர்ணித்தால்தான் மனசு அடங்கும். வேறொன்றுமில்லை, இவரது அழகான பின் கழுத்துக்கு கீழே ஒன்றிரண்டு வார்த்தைகளை அழகான தமிழில் பச்சை குத்தியிருந்தார். ‘உற்று பார்த்து படிச்சுக்கங்க’ என்று அவரே அனுமதி கொடுத்ததின் பேரில் படித்து பார்த்தால், அடடா… ஒரு தேசமே படித்து திருந்த வேண்டிய விஷயத்தைதான் அவ்வளவு அழகாக பச்சை குத்தியிருந்தார். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதுதான் அந்த பின்னங்கழுத்து பொன்னெழுத்து!
‘கழுத்தை விட்டுட்டு கொஞ்சம் கவனிக்கிறீங்களா’ என்கிற சப்தம் கேட்டு திரும்பினால், ஆந்திரா மெஸ் டைரக்டர் ஜெய். தனது படத்தை பற்றி பேச ஆரம்பிக்கிறார். தமிழ்ல மேஜிக் ரியலிசம் படங்கள் இதுவரைக்கும் வந்ததில்ல. மணிரத்னம் சார் மாதிரி சிலர் மட்டும்தான் ட்ரை பண்ணியிருக்காங்க. மும்பையில சஞ்சய் லீலா பன்சாலி படங்கள் சில வந்திருக்கு. ஏன் நாம இப்படியொரு டைப் படத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடாதுன்னு தோணுச்சு. தயாரிப்பாளரிடம் சொன்ன போது, தாராளமா செய்ங்க என்றார். வேறொரு அனுபவத்தை கொடுக்கிற திரைக்கதை யுக்தி இந்த படத்தில் இருக்கும் என்றார் ஜெய்.
மேஜிக் ரியலிசம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? அதை எங்கனம் வரையறுப்பது? போன்ற இலக்கண சுத்த இம்சையரச பாடத்திட்ட விளக்கங்களையெல்லாம் தாண்டி கடைசியாக அவர் சொல்ல வந்தது இதுதான். படத்தில் நான்கு பேர் ஒரு ஏடிஎம்மை கொள்ளையடித்துவிட்டு தப்பிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு போலீசாலேயோ, அல்லது மற்றவர்களாலேயோ பிரச்சனை இல்லை. அவர்களது மன சாட்சியே அவர்களை உறுத்த ஆரம்பிக்கிறது. யாரும் தராத மன உளைச்சலை அவர்கள் அனுபவிப்பார்கள். அது எப்படி என்பதுதான் கதை.
ராஜ்பரத், மதி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா, தேஜஸ்வினி என்று சில கேரக்டர்களை மட்டுமே கொண்டு படத்தை சுவாரஸ்மாக கொடுக்கப் போகிறார் ஜெய் என்று நம்பலாம். ஏனென்றால் வட இந்தியா, தென் இந்தியா என்று சுற்றி சுற்றி ஏராளமான விளம்பர படங்களை எடுத்தவர் இவர். பத்து செகன்ட்ல ஒரு கதையையே சொல்கிற விளம்பர பட இயக்குனர்கள் இரண்டு மணி நேரத்தில் நச்சுன்னு சொல்லிருவாங்க என்ற நம்பிக்கை நமக்குண்டு.
ஹ்ம்… சொல்ல மறந்தாச்சு, நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தேஜஸ்வினி இந்த படத்தில் முப்பதியாறு வயசு பேரிளம் பெண்ணாக நடிக்கிறாராம். சரோஜாதேவியே இன்னும் கொஞ்சி கொஞ்சி பேசி நடிக்கிறாங்க. இந்த காலத்தில, இந்த இளம் பெண்ணை சரோஜா தேவியாக்குறீங்களே, அதுதான்ங்க நமக்கு இப்போதைக்கு வந்திருக்கும் பெரும் மன உளைச்சல்!