குதிரையை விட்டுவிட்டு கொம்பை பிடித்த இயக்குனர்
நடிகை ஒருவரை தேடிப்பிடித்து தங்களது படத்தில் ஹீரோயினாக்குவதுதான் ‘குதிரை கொம்பு’ என்பார்கள் இயக்குனர்கள். ஒரு இயக்குனர் குதிரையை விட்டுவிட்டு கொம்பை பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார். சலோனியை பார்த்தால் அப்படிதான் தோன்றுகிறது. நீண்ட கழுத்து, நெடு நெடு உயரம், சற்றே சப்பையான கன்னங்கள், ‘அழகாத்தான் இருக்காரு, இருந்தாலும்….’, என்று இழுக்க வைக்கிறார். இவருக்கு முன் 99 ஹீரோயின்களுக்கு ஆடிஷன் நடத்தினாராம் படத்தின் இயக்குனர் அருண் மோகன். 100 வதாக வந்து ஆடிஷனில் தேறியவர்தான் சலோனி.
99 பேர்ட்ட இல்லாத எது சலோனிகிட்ட இருக்கு? என்ற கேள்வியை ‘சரபம்’ பட இயக்குனர் அருண் மோகனிடம் கேட்டால், பளிச்சென்று சொல்கிறார்.
“…ஆட்டிட்யூட்”
பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திராவும் சலோனியும் ஜோடியாக நடிக்கும் இந்த ‘சரபம்’ படத்தின் கதை பீட்சா, சூதுகவ்வும் வரிசையில் பணம் தொடர்பானதுதான். (ஒருவேளை இதுபோன்ற கதைகள்தான் தயாரிப்பாளரின் ராசியோ என்னவோ?) அந்த படங்களை தயாரித்த சிவிகுமார்தான் இந்த படத்திற்கும் தயாரிப்பாளர். ‘முப்பது நாளில் படத்தை முடிச்சுரணும்’ என்று அருண் மோகனிடம் இவர் கூறிவிட, நாலைந்து நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்திய கொடுமையெல்லாம் நடந்திருக்கிறது.
சின்ன பட்ஜெட் படங்களை இந்த மாதிரி குறுகிய காலத்தில் முடிக்காவிட்டால், நம்ம கதி அதோ கதிதான். அதனால்தான் முப்பது நாள் என்று டார்கெட் வைக்கிறோம் என்றார் சி.வி.குமார். படப்பிடிப்பு என்றால் டார்ச்சர் இல்லாமலா? சென்னையிலிருக்கும் ஒரு பார்ஷான அபார்ட்மென்ட்டில் ஷுட்டிங். நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் லொகேஷன் வாடகை. முதல் நாள் ஷுட்டிங் எடுத்து முடித்ததுமே அபார்ட்மென்ட் வாசிகள் சண்டைக்கு வந்துவிட்டார்களாம். ராவெல்லாம் லைட்டை போட்டு ஷுட் பண்றீங்க, எங்களுக்கு உறக்கம் வர மாட்டேங்குது. இன்னையோட முடிச்சுக்குங்க என்று அவர்கள் கதற, அதைவிட பலமாக கதறிவிட்டார் தயாரிப்பாளர். கன்ட்டினியூடி மிஸ்சாகும். அதனால் நான்கு நாட்களில் முடிச்சுர்றோம் என்று கெஞ்சி கூத்தாடி மிச்சத்தையும் முடித்தார்களாம்.
படத்தின் முதல்நாள் காட்சியே பதினைந்தாவது மாடியிலிருந்து ஹீரோ நவீன் சந்திராவை தலைகீழாக கட்டி வெளியே தொங்க விடுவதுதான். ‘எனக்கு பயம்னா பயம். அவருக்கு இன்னும் இருபது நாள் ஷுட்டிங் வேற பாக்கியிருந்திச்சு’ என்றார் அருண் மோகன். இப்படி தொங்குனது ஒருத்தர், துயரப்பட்டது இன்னொருத்தர்னு நடந்த இந்த படத்தின் ட்ரெய்லர் என்ன சொல்கிறது? ஆஹா… டாப்!
சிவிகுமாருக்கு அடுத்த ஹிட் ரெடி!