சே… இப்படியும் ஒரு ரசிகர்!
விஜய் படம் பார்ப்பதற்கு தனது வீட்டில் பணம் தரவில்லை என்று ஒரு ரசிகர் தற்கொலை செய்து கொண்டார். இப்படியொரு கொலவெறி ரசிகராக அவர் இருப்பதை விட போய் தொலைவதே மேல் என்று சில அஜீத் ரசிகர்கள் இந்த சம்பவம் குறித்து விமர்சிக்க, சமூக வலை தளங்களில் ஒரே ரத்த காயமாக இருந்தது சில நாட்கள். ஆனால் இப்படியெல்லாம் அதி தீவிர ரசிகர்கள் இல்லையென்றால் விஜய் மாதிரி ஹீரோக்கள் ஒரு ஃபிளாப்புக்கு கூட தாங்க மாட்டார்களே?
விஜய்யின் அதிதீவிர ரசிகர் ஒருவர் பற்றிய தகவல்கள் இப்போது வெளிவந்திருக்கிறது. ‘பார்றா… இப்படியும் ஒரு மனுஷனை’ என்று சிலிர்த்துக் கொள்வதா? பஸ் ஏறியாவது போய் அவரை தேடிப்பிடித்து ‘ஏம்ப்பா இப்படியெல்லாம் இருக்கீங்க?’ என்று கடிந்து கொள்வதா? விஷயத்தை நீங்களே படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள். இந்த செய்தி, செய்திகள்.காம் என்ற இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது.
குருவாயூரில் இருக்கும் கிருஷ்ணதாஸ் என்பவர்தான் அந்த ரசிகர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஹோட்டல் அறைகள் எடுத்துக் கொடுப்பது, கோவில்களுக்கு அழைத்துச் செல்வது போன்ற பணிகளைச் செய்து வருகிறார். தினமும் கோவில் நடை சாத்தும் போது குருவாயூரப்பனை 3 யானைகள்சூழ உள்பிரகாரத்தில் உலா வரும் ஸ்ரீவேலி நிகழ்ச்சியில் இசை வாசிக்கும் போது சுருதிப் பெட்டி வாசிக்கவும் செய்கிறார்.
கடந்த 18 ஆண்டுகளாக குருவாயூரில் வசிக்கும் கிருஷ்ணதாஸ் இது வரை சுமார் மூவாயிரத்துக்கும் மேல் கோவிலில் உட்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்திருக்கிறார். கோவில் வெளிப்பிரகாரத்தில் பொதுவாக யாரும் அங்கப்பிரதட்சணம் செய்வதில்லை. அங்கும் 33 தடவை அங்கப்பிரதட்சணம் செய்திருக்கிறார். கடந்த வாரம் அவர் கோவிலினுள் அங்கப்பிரதட்சணம் செய்தது எதற்காகத் தெரியுமா?
நடிகர் விஜய் நடிக்கும் ‘கத்தி’ திரைப்படம் எந்தப் பிரச்னையுமின்றி வெளியாகி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவாம்!
அவரது இந்த செயல் விஜய்யின் காதுகளுக்கு போயிருக்குமா? தெரியாது. ஆனால் எப்படியாவது விஜய்யை ஒரு முறையாவது சந்தித்துவிட வேண்டும். அவரு குருவாயூர் கோவிலுக்கெல்லாம் வருவாரா? அப்படி வந்தால் சந்திப்பது ஈஸியாச்சே என்கிறாராம்.
மோடியே தேடி வந்து பார்க்குறாரு. அவரை குருவாயூரப்பன் கூப்பிட்டாதான் வருவாரு. எப்படியாவது அவரை விட்டே கூப்பிட சொல்லுங்க கிருஷ்ணா…!
கிருஷ்ணாவுக்கு ஆறுதல் அளிக்க விரும்பும் விஜய் ரசிகர் மன்ற தோழர்கள் அவரை இந்த மொபைலில் தொடர்பு கொள்ளவும். 097467 97020