டோராவால் பயனில்லை! அறம் வாங்க ஆளில்லை! கடும் சிக்கலில் நயன்தாரா!
‘சறுக்கல் இல்லாத வாழ்க்கை பெருக்கல் இல்லாத கணக்கு’ என்பதை புரியாதவரல்ல நயன்தாரா! அதுவும் காதல் விவகாரத்தில் அவர் ஒவ்வொரு முறையும் சறுக்கி, அதிலிருந்து மீண்டு எழுந்து வருவதால், இந்த சறுக்கலுக்கெல்லாம் அஞ்சுகிற ஆள் நானில்லை என்று நெஞ்சு நிமிர்த்தி நின்று வருகிறார் இப்போதும். ஆனால் சினிமா வியாபாரத்தில் நயன்தாராவுக்கு சறுக்கல் வந்தால், அது பூஜ்யத்தை அடைகாத்து, பூஜ்யத்தையே குட்டியாக போடுகிற அபாயம் உண்டல்லவா? இதை உணரும்போதுதான் ஒரேயடியாக ‘ஐயே…’ ஆகிவிடுகிறது அவரது முகம்.
சமீபத்தில் விநியோகஸ்தர் சங்க கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட டி.ராஜேந்தர், “நயன்தாரா நடிச்ச டோரா படத்துக்கு அவ்வளவு பெரிய விலை கொடுத்து வாங்குனீங்க. கடைசியில் என்னாச்சு. பட்டை நாமம்தான் விழுந்திச்சு. நயன்தாரான்னா என்ன பெரியா இதுவா? ஏன் அவ்வளவு பெரிய தொகையை கொடுத்து விழுந்தடிச்சு வாங்குனீங்க? இப்ப ஐயோ அம்மான்னு புலம்புறீங்க?” என்று கேட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
அவர் பேசிய நேரமோ என்னவோ தெரியவில்லை. நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தை வாங்க ஆளில்லையாம் இப்போது. இத்தனைக்கும் அறம் மக்களின் முக்கிய பிரச்சனையை பற்றி பேசுகிற படம். இந்தப்படம் வந்தால், நயன்தாராவின் இமேஜ் பெருமளவு பில்டப் ஆவதுடன், விவசாயம், மற்றும் ஆழ்துளை கிணறுகளின் ஆபத்து போன்ற விஷயங்களை அலசிய படம் என்கிற பெயரும் கிடைக்கும். இருந்தாலும் என்ன செய்ய?
நயன்தாராவின் முகத்தை நம்பி பல கோடியை செலவு செய்ய முன்வந்த தயாரிப்பாளர்களுக்கு, அவரது திடீர் சரிவு பேரதிர்ச்சையை கொடுத்திருக்கிறது.
அறம், வரம் போல வந்துதான் காப்பாற்ற வேண்டும் நயன்தாராவின் இமேஜை!
https://youtu.be/0sbetOl1bUA