ரஜினி, கமல், அஜீத், விஜய்க்கு நேரில் அழைப்பு வேணாம்! நடிகர் சங்கத்தில் விவாதம்?
கல்யாணம், காதுகுத்து, சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றுக்கு வேண்டுமானால் ‘நேர்ல வந்து அழைக்கட்டுமே’ என்று இருந்துவிடலாம். ஆனால் இது அவரவர் தொழில் செய்யும் இடம். அதற்கான கோவில். அதற்கான கூட்டம். அதற்கான பிரசங்கம்! தானாக வருவதுதானே முறையாக இருக்கும்? ஆனால் இந்த முறை நடக்க போகும் நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு முன்னணி ஹீரோக்கள் வருவார்களா? வந்தாலும் பேசுவார்களா? அதிலும் குறிப்பாக, ரஜினி, கமல், அஜீத் விஜய் வருவார்களா? என்றெல்லாம் கேள்விகள் மலிந்து கிடக்கிறது சங்க உறுப்பினர்கள் மத்தியில்.
எல்லாவற்றையும் விட முக்கியமான கேள்வி, இந்த முறை நடக்கப் போகும் பொழுக்குழு நிம்மதியாகவும் சண்டை சச்சரவுகள் இல்லாமலும் நடக்குமா? இது குறித்த சந்தேகங்கள் தோற்றவர்களை விட வெற்றி பெற்றவர்களுக்குதான் அதிகம் இருக்கிறதாம். தடதடப்பும் படபடப்புமான சந்தேகங்கள் ஒருபுறம் இருக்கட்டும்… இந்த பொதுக்குழுவுக்கு எல்லாருக்கும் அழைப்பு விடுப்பது எப்படி?
வேறென்ன? கடிதம் வாயிலாகதான். அதே நேரத்தில் ரஜினி கமல் அஜீத் விஜய் நால்வரையும் நேரில் சென்று அழைப்பதை தவிர்க்கலாமா? அல்லது தபாலில் இன்விடேஷனை அனுப்பிவிட்டு போனில் ஒரு முறை நினைவுபடுத்திவிடலாமா என்ற யோசனை ஒடிக் கொண்டிருக்கிறதாம். ஏனென்றால் கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்று பிரச்சனையை கிளப்ப ஒரு கூட்டம் தயாராக இருக்கிற நிலையில், சிலரை மட்டும் நேரில் சென்று அழைப்பது வீண் பிரச்சனைகளை உருவாக்கலாம் என்று நினைக்கிறார்களாம்.
இந்த நிமிஷம் வரைக்கும் சொல்லப்படும் தகவல் என்னவென்றால், கமல் வரக்கூடும். விஜய் வருவார். ஆனால் ரஜினியும், அஜீத்தும் இந்த முறை நைசாக எஸ்கேப்பானால் ஆச்சர்யமில்லை!