ரிலீஸ்….! கை கொடுத்த தோழமைகள்!
நம்பியவர்களுக்கெல்லாம் நண்டுவாக்கிளி கொட்டு வைப்பதுதான் சினிமாவுலக வழக்கம். இப்படி கொட்டு வாங்கியவர்கள் கொஞ்சமா, நஞ்சமா? இதோ- உத்தமவில்லன் விஷயத்தில் நேற்றிலிருந்து விதவிதமான கொட்டுகளையும் விஷக்கடிகளையும் வாங்கிக் கொண்டேயிருக்கிறார் உத்தமவில்லன் தயாரிப்பாளர் லிங்குசாமி. ‘பணத்தை எண்ணி வச்சுட்டு படத்தை ரிலீஸ் பண்ணு’ என்று கழுத்தில் கத்தி வைக்காத குறையாக கிளம்பியவர்கள் சுமார் நாற்பது கோடி அளவுக்கு சுமையை ஏற்றி வைக்க, கிடுகிடுத்துப் போனது உத்தமவில்லன். நேற்றே வெளிவர வேண்டிய படம் முக்கி முனகி திக்கி திணறி ஒருவழியாக ரிலீஸ் கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தில் ரிலீஸ்.
இப்படியொரு இக்கட்டான சூழலை வரவழைத்துக் கொண்டதில் லிங்குசாமிக்கும் பங்கு இருந்தாலும், படத்தை முதலில் வாங்கிய ஈராஸ், கடைசி நேரத்தில் தமிழக உரிமையை லிங்குசாமிக்கே திரும்ப கொடுத்ததால் வந்த வினைதான் இது. அதற்கு இவர் என்ன செய்வார் பாவம்? லிங்கா நஷ்டஈடு விவகாரத்தில் உத்தமவில்லனுக்கு குடைச்சல் கொடுப்பார்கள் என்று தியேட்டர் வட்டாரம் மீது அதிருப்தி கொண்டதால்தான் கடைசி நேரத்தில் உத்தமவில்லனை திருப்பிக் கொடுத்ததாம் ஈராஸ்.
நல்லவேளையாக நட்பு கை கொடுத்திருக்கிறது லிங்குசாமிக்கு. ஸ்டூடியோக்ரீன் ஞானவேல் ராஜாவின் முயற்சியிலும், தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, நடிகர் சங்க தலைவர் சரத்குமார், மதுரை அன்புச்செழியன் உள்ளிட்ட பிரபலங்கள் தலையிட்டதாலும் வெளியே வந்திருக்கிறது படம். இல்லையென்றால் உத்தமவில்லன் இன்னொரு மருதநாயகமாக கூட மாறியிருந்திருக்கலாம். யார் கண்டது? தனது அண்ணன் சந்திரஹாசனை பஞ்சாயத்துக்கு அனுப்பி வைத்த கமல், கடைசி நேரத்தில் துபாயிலிருந்து பறந்து வந்திருக்கிறார். நேற்றிரவு அவரும் இந்த பேச்சு வார்த்தை கமிட்டியில் இருந்தாராம்.
சூர்யா திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு படம் நடித்துத்தர சம்மதித்த பிறகுதான் எல்லா பிரச்சனையும் பனிப்போல விலகியதாக கூறுகிறார்கள். இதற்கிடையில் படத்தை விநியோகம் செய்த விதத்தில் இருபது கோடியையும், அதற்கப்புறம் பதினைந்து கோடியையும் புரட்டிக் கொடுத்தாராம் ஞானவேல்ராஜா.
தடை பல கடந்து திரைக்கு வந்திருக்கிறான் உத்தமவில்லன். நிஜ வில்லன்கள் யார் யார் என்பதை இனிமேலாவது உணர்ந்து கொள்வார் லிங்குசாமி!