சினிமாவை காப்பாற்ற ஒரு திட்டம் வச்சுருக்காராம் இவர்! இதுவாவது நடக்குமாங்க?
நெல்லை விதைச்சவனுக்கு நீராகாரம்! கொள்ளையடிச்சவனுக்கு கோழி பிரியாணி!! என்பதாகவே இருக்கிறது சினிமாவில் தயாரிப்பாளர்கள் போடுகிற பணமும் உழைப்பும்! விதைத்த தயாரிப்பாளர்கள் விக்கிக் கொண்டிருக்கிறார்கள். திருடி விற்கும் திருட்டு விசிடி ஆசாமிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தடுக்கணும். எப்படி எப்படி….?
பல சினிமாக்காரர்களுக்கு அல்லும் பகலும் அதே நினைப்புதான். நடுவில் டைரக்டர் சேரன் என்னென்னவோ முயற்சிகள் எடுத்து ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். கடைசியில், அவரது பொற்காலம் படத்தில் ஒரு பானை வருமே, வளைந்தும் சிதைந்தும்… அது போலாக்கிவிட்டார் அந்த திட்டத்தை! இப்போது வேறொரு திட்டத்துடன் வந்திருக்கிறார் ஒருவர். விஜயகாந்த் நடித்த உளவுத்துறை, சத்யராஜ் நடித்த கலவரம், அருண்விஜய் நடித்த ஜனனம், தலைவன் மற்றும் வஜ்ரம் போன்ற படங்களை இயக்கிய S.D.ரமேஷ்செல்வன் B.Com,D.F.Tech. என மிக அழுத்தமான விசிட்டிங் கார்டுடன் இவர் இருந்தாலும், நிஜத்தில் ரொம்ப பரிதாபம்.
அவர் இயக்கி சமீபத்தில் வெளிவந்த வஜ்ரம் என்ற படம், அவர் நினைத்தது போல ஓடவில்லை. ஆனால் திருட்டு வி.சிடியிலும், திருட்டு டாட் காம்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்திருக்கிறார்களாம். எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள். அதனால் தனக்கு எவ்வளவு நஷ்டம் என்றெல்லாம் தனி அக்கவுன்ட் (?) போட்டு வைத்திருக்கிற அளவுக்கு ரொம்பவே ‘பேட்’ அனுபவம் பெற்ற ரமேஷ் செல்வனுக்கு. இப்படி அடுத்தவர் முதலீட்டில் நிம்மதியாக வாழும் திருட்டு பசங்களுக்கு பட்டை நாமம் போட வேண்டும் என்பதுதான் ஆசை. அதற்காக ஒரு திட்டம் வகுத்து, அதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். நடுவில் இன்னொன்று…
அது என்ன? தமிழகத்தில் இருக்கிற கல்லூரி மாணவர்களிடமிருந்து குறும்படங்களை வரவழைத்து ஒரு குறும்பட திருவிழா நடத்தப் போகிறார். இதில் தேர்ந்தெடுக்கப்படும் பத்து படங்களில் மிக சிறப்பானவற்றை தொகுத்து, தியேட்டர்களில் திரையிடப் போகிறாராம். அப்படியே நல்ல படியாக படம் எடுத்து அசத்துகிற புதுமுகங்களுக்கு படம் இயக்கவும் வாய்ப்பு தரப்போகிறார். தன்னைப் போலவே திரைப்பட கல்லூரியில் பயின்று சினிமாவில் பணியாற்றி வரும் பல ஜாம்பவான்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு இதில் இறங்கியிருக்கிறார் ரமேஷ் செல்வன்.
எதை தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலையில் எல்லாருமே இருப்பதால், ரமேஷ் செல்வன் என்ன செய்யப் போகிறார் என்பதை காணவும் ஒரு கூட்டம் காத்திருக்கிறது. பார்க்கலாம்…