இன்னமும் மனிதம் உயிர்ப்போடதான் இருக்கு! நிருபிக்கும் நடிகர்கள் வரிசையில் கருணாகரன்!
சினிமா தாண்டியும் தேடித் தேடி உதவி செய்து கொண்டிருக்கிறார் விஷால். சேர்த்து வச்ச கருப்புப் பணத்தை ராப்பகல் தூக்கம் கூட இல்லாமல் அடைகாக்கும் சில நடிகர்களை போல இல்லாமல், தன்னால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கும் செய்து வருகிற நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் விஷால். ஒரு கை கொடுப்பது மறு கைக்கு தெரியாமல் உதவி செய்து வரும் சில முன்னணி நடிகர்கள் போல இல்லாமல் இவர் ஏன் எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் என்று கூட சிலர் பேசி வரலாம். ஆனால் கொடுக்கும் குணம் பிறருக்கும் வர வேண்டும் என்பதற்காகதான் அதையெல்லாம் விளம்பரமாக்கி வருவதாக சொல்கிறது விஷால் டீம்.
எது எப்படியிருந்தாலும் அவரது நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள். நேற்றுதான் தஞ்சை மாவட்ட விவசாயி ஒருவருக்கு ஜப்தியில் போகவிருந்த டிராக்டருக்காக விஷால் பணம் கட்டிய தகவலை தெரிவித்திருந்தோம். அதே விவசாயிக்கு நடிகர் கருணாகரனும் மனமுவந்து உதவியிருக்கிறார்.
தஞ்சை மாவட்டம், பாப்பாநாடு அருகே உள்ள சோழகன் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன், மகேந்திரா கோட்டாக் நிறுவனத்தில் கடனில் டிராக்டர் வாங்கியுள்ளார். இதற்கான பெரும்பகுதி தொகையை வட்டியுடன் செலுத்தியுள்ளார். நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்பதற்காக டிராக்டர் கடன் நிறுவன ஊழியர்களும், காவல்துறையினரும் சேர்ந்து விவசாயி பாலனிடமிருந்து டிராக்டரை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் வாட்ஸ் அப் மூலம் பரவி உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதை கவனித்த கருணாகரன் அந்த விவசாயியை தொடர்பு கொண்டு அவரது வங்கிக் கணக்கில் ஒரு லட்சத்தை செலுத்தியிருக்கிறார். கருணாகரனின் நல்ல மனசுக்கு தஞ்சை மாவட்ட விவசாயிகள் மட்டுமல்ல, தமிழகமே நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.
தனது சம்பளத்தில் ஒரு பகுதியை அவர் இதுபோன்ற விஷயங்களுக்கு செலவிட முடிவெடுத்திருக்கிறாராம். சபாஷ் கருணாகரன்!