ஐ பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினியை டென்ஷன் ஆக்கிய ஷங்கர்?

ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ‘ஆர்னால்டு’ வருகிறார் என்றதுமே களை கட்டிவிட்டது. இதற்காக தனி விமானத்தில் சென்னை வந்த ஆர்னால்டை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் சூர்யா. அதற்கப்புறம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் ஆர்னால்டு. மாலை சுமார் ஆறு மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் விழா துவங்குவதாக திட்டம்.

சென்னை டிராபிக் காரணமா? அல்லது தமிழகத்தில் கால் வைத்ததும், அமெரிக்காவின் பஞ்சுவாலிடி இயல்பாகவே எக்ஸ்பயரி ஆகிவிட்டதா தெரியவில்லை. விழா அரங்கத்திற்கு அவர் வரவே கிட்டதட்ட மணி எட்டாகிவிட்டது. அதுவரைக்கும் மொத்த கூட்டமும் காத்திருக்க, பவுடர் முகத்தோடு யார் வந்தாலும் ஹோய்யோ ஹய்… என்று விசிலடித்து கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் அவர்கள். நடுவில் பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளே நுழைய, ஏதோ ரஜினியே வந்ததுபோல வந்ததே கூச்சல்! அவரும் அரங்கத்திலிருக்கிற லைட்டுகள் போதாது என்று தன் முன் பற்கள் அத்தனையையும் பிரகாசமாக எரிய விட்டு அமர்ந்தார். லதா ரஜினி தன் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா சகிதம் உள்ளே வந்தார். அப்போதும் பேய் கூச்சல்.

சுமார் 7.40 க்கு ரஜினியை அழைத்து வந்து நேரு ஸ்டேடியத்தின் நடு ஹாலில் அமர வைத்துவிட்டார்கள். இத்தனைக்கும் சில நிமடங்களுக்கு முன்பாகவே வந்துவிட்ட அவரை வெடியிட்டிங் ஹாலில் ரெஸ்ட் எடுக்க வைத்திருந்தார்கள். ரஜினியை முன் கூட்டியே வந்து வரவேற்று அமர வைக்க வேண்டிய டைரக்டர் ஷங்கர் அதற்கப்புறம் பத்து நிமிடம் கழித்துதான் உள்ளே வந்தார். அவர் வரும் வரைக்கும் தனியாகவே குறுகுறுவென அமர்ந்திருந்த ரஜினி முகத்தில் லேசான படப்படப்பு. கோபம். நல்லவேளை… அதை வெளிக்காட்டிக் கொள்ள விடவில்லை ரசிகர்களின் உற்சாகம். நாலாபுறத்திலிருந்தும் ‘தலைவா…’ என்று கூக்குரலிட்டார்கள். நல்லவேளையாக ஷங்கர் வேகமாக வந்து ரஜினி பக்கத்தில் அமர்ந்து அவர் காதருகே ஸாரி கேட்டுக் கொண்டார்.

ரஜினியின் கோபமெல்லாம் அதற்கப்புறம் ஷங்கர் காட்டிய திரை மேஜிக்கில் காணாமல் போயிருந்தது. கிட்டதட்ட பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். அதுவும் விக்ரமின் லைவ் பர்மாமென்ஸ் ஒன்று அற்புதம். ஒரு குரங்கு மனிதனாகவே மாறியிருந்தார் அவர். முன் பற்கள், கூறிய கண்கள். நமது முதுகு தண்டையே ஜில்லிட வைத்த அற்புதமான மேக்கப் அது. தன் கட்டை விரல் உயர்த்தி விக்ரமிடம் தன் பாராட்டுதலை தெரிவித்துக் கொண்டார் ரஜினி. ஷங்கரை முதுகில் தட்டி பாராட்டிக் கொண்டேயிருந்தார்.

இப்படி ஒட்டுமொத்த கூட்டத்தையும் கட்டி மிரள வைத்த விக்ரம், அதே கெட்டப்போடு பேசும்போது அவரை விட்டு கண்கள் அகலவில்லை ஒருவருக்கும்.

ஷங்கரின் மேஜிக்கை வெகுவாகவே ரசித்த ஆர்னால்டு, ‘வாங்க ஹாலிவுட்டுக்கு. உங்களோட சேர்ந்து ஒரு படம் நடிக்க ஆசைப்படுறேன்’ என்று கூற, அரங்கத்தில் எழுந்த கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆனது.

ஷங்கர் என்ற மாபெரும் கலைஞனை நாடே கொண்டாட வேண்டிய பொன்னான தருணம்தான் அது!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
I Movie Official Teaser

https://www.youtube.com/watch?v=pzTHmcXfeug

Close