பறக்கும் போதே பாட்டு இயக்குனர் ஷங்கருடன் பணியாற்றிய அனுபவம் பற்றி பாடலாசிரியர் கபிலன்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ஐ படத்தில் மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். இப்படத்திற்காக ஒரு பாடலை விமானத்திலும், மலை வாசஸ்தலமான கொடைக்கானல் உச்சியில் அமைந்த தோட்டத்திலும் ,இயக்குனர் ஷங்கருடன் அமர்ந்து பாடல் எழுதிய அனுபவத்தை பற்றி அவரே சொல்கிறார்.

ஷங்கர் சாருடன் அமர்ந்து பாடல் எழுதுவது மிகவும் சுகமான விஷயம். முதலில் நம்மை அமர வைத்து அந்த பாடல் வரிகள் படத்தில் எந்த சூழ்நிலையில் இடம் பெறுகிறது என்பதை சுருக்கமாக கூறிவிடுவார். பிறகு அந்த பாடல் எங்கெல்லாம் படமாக்கப்படவிருக்கிறது என்பதை அந்தந்த லொக்கேஷன்களை இன்டர்நெட்டில் காட்டி விளக்குவார். குறிப்பிட்ட அந்த பாடல் காட்சியில் ஹீரோவும் ஹீரோயினும் எந்த விதமான உடைகள் அணிவார்கள் என்பதை கூட அந்த உடைகளின் புகைப்படங்களை காட்டி பிரமிக்க வைப்பார். பிறகு ஏ.ஆர்.ரஹ்மானின் ட்யூனை ஒலிக்க செய்வார். இப்படியெல்லாம் அந்த பாடல் எழுதுவதற்கான உற்சாகமான மன நிலையை எனக்குள் உருவாக்கிவிடுவார்.

அதற்கப்புறம் அந்த பாடல் வரிகளில் எவையெல்லாம் வர வேண்டும் என்பதையும் சுருக்கமாக கூறிவிடுவார். அதற்கப்புறம் நமது கற்பனை குதிரையை தட்டிவிட வேண்டியதுதான். ஒரு பாடலை எழுதுவதற்காக நாங்கள் கொடைக்கானலுக்கு கிளம்பினோம். அந்த பாடலை மிக உயர்ந்த இடத்தில் வைத்துதான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தார் அவர். விமானத்தில் மதுரை செல்வதற்குள்ளாகவே விறுவிறுவென பாடலை எழுத ஆரம்பித்துவிட்டோம். இறங்குவதற்குள் சில பல்லவிகள் தயாராகிவிட்டது. பின்பு அங்கிருந்து காரில் கொடைக்கானலுக்கு சென்று மலை உச்சியில் தங்கினோம். ‘உயர்வான பாடல் இது. உச்சியில் அமர்ந்துதான் எழுத வேண்டும்’ என்று ஷங்கர் சார் சிரித்துக் கொண்டே கூறினார்.

அந்த பாடல் வரிகள் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்பு பிரமாதமான பாடலாக உருமாறி வந்தது. இந்த பாடல்களை எழுதி முடிக்கும் வரை நான் இரவில் எந்த நேரமும் தயாராக விழித்துக் கொண்டிருப்பேன். திடீரென ஏ.ஆர்.ரஹ்மான் சார் போன் செய்வார். சில வார்த்தைகளை சொல்லி மாற்ற சொல்வார். ஐ படத்திற்காக நான் எழுதிய இன்னொரு பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார்.

இவ்வாறு பாடலாசிரியர் கபிலன் கூறினார்.

தற்போது சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் பாடல் எழுதி வருகிறார். இதில் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் பிரபல முன்னணி இயக்குனர்கள், மற்றும் கதாநாயகர்கள் இணையும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து போட மறுத்தவர்தான் இந்த விஜய் ! -போட்டுத் தாக்கும் வன்னி அரசு

விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர் வன்னி அரசு. அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கும் கட்டுரை இது. ஏன் கத்தியை எதிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த...

Close