இப்ராஹிம் ராவுத்தர் எனும் ‘நண்பேன்டா….! ’

அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இப்ராஹிம் ராவுத்தர் என்ற நல்ல நண்பனை! இப்போதைய விஜயகாந்த் அரசியலில் எப்படியெப்படியெல்லாம் சித்தரிக்கப்படுகிறார்? அது அரசியல் சதுரங்க விளையாட்டின் ஒரு பகுதி, அல்லது சதி. ஆனால் மதுரையிலிருந்த ஒரு சாதாரண இளைஞனை தமிழ்சினிமாவின் மகுடத்தில் ஏற்றி வைத்த பெருமையெல்லாம் ராவுத்தருக்கே சொந்தமானது.

எப்படி ஒரு எம்ஜிஆரும் சிவாஜியும் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் ரஜினியும் கமலும் உள்ளே புகுந்து கலக்கினார்களோ, அதற்கு சற்றும் குறைவானதில்லை ரஜினியும் கமலும் கலக்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கிக் கொண்ட விஜயகாந்தின் வெற்றி. அந்த வெற்றியின் சதவீதத்தில் ராவுத்தருக்கும் பாதி பெருமை உண்டு.

விஜயகாந்த் ரஜினிகாந்த் மாதிரியே இருப்பதாக பேசினார்கள். அவருக்கு கூடிய கூட்டத்தில் பெரும் பகுதி விஜயகாந்துக்கும் கூடியது. சினிமாவில் போட்டி இருக்கலாம். பொறாமை இருக்கக் கூடாது என்பார்கள். விஜயகாந்தை சுற்றி இரண்டும் இருந்தது. அவரை ஒரேயடியாக ஒழித்துக் கட்டிவிட பெரும் சதியே நடந்தது. விஜயகாந்த்தை யார் யாரெல்லாம் படங்களில் நடிக்க அழைத்தார்களோ, அவர்களையெல்லாம் தேடி தேடி கால்ஷீட் கொடுத்தார் ரஜினி. ஒரு கட்டத்தில் விஜயகாந்துக்கு படமேயில்லை. அன்றாட செலவுக்கே அல்லல் படும் நிலை.

சதி அம்பலமான கால கட்டமும் அதுதான். ‘முரட்டுக்காளை’ படத்தில் விஜயகாந்தை வில்லனாக நடிக்க அழைத்தார்கள். அறை வாடகை, சாப்பாட்டு பில் எல்லாவற்றையும் மனக்கணக்கில் ஓட்டிக் கொண்டிருந்தார் விஜயகாந்த். அந்த நேரத்தில் அவர்கள் தருவதாக சொன்ன சம்பளம் ஐந்து லட்சம். அது பெரும் தொகை என்பதாலும், சூழ்நிலை விரட்டியதாலும் ஒப்புக் கொள்ளும் முடிவுக்கே வந்துவிட்டார் விஜயகாந்த். அப்போது பாய்ந்து விழுந்து தடுத்தவர் இப்ராஹிம் ராவுத்தர்தான். ‘என் பைக்கையும் உன் பைக்கையும் விற்று ஆறு மாத வாழ்க்கையை ஓட்டுவோம். அதற்குள் காலம் மாறும்’ என்று பிடிவாதமாக இருந்தார். அப்படியே செய்தார்கள். ஒருவேளை அந்த படத்தில் விஜயகாந்த் வில்லனாக நடித்திருந்தால், அதற்கப்புறம் வந்த அற்புதமான விஜயகாந்த் படங்கள் எல்லாம் நமக்கு படைக்கப்படாமலே இருந்திருக்கும்.

பசியும் பட்டினியும் தங்களை விரட்டியதை போல மற்றொருவனை விரட்டக் கூடாது என்று தாங்கள் தங்கியிருந்த லாட்ஜையே விலைக்கு வாங்கி அதில் வருகிறவர்களுக்கெல்லாம் இலவச சாப்பாடு போட செய்தவர் ராவுத்தர். அவரது ஆசைக்கு அள்ளி அள்ளி கொடுத்தவர் விஜயகாந்த்.

நல்ல நட்பில் காளான் பூப்பது சினிமாவில் சகஜம். அப்படிதான் பூத்தது அவர்கள் நட்புக்கு இடையிலும். இன்று விஜயகாந்த் நேரில் வந்து கண்ணீர் மல்க நின்ற காட்சி வெறும் அஞ்சலிக்காக மட்டுமல்ல, தன்னை போன்ற ஒரு சாமானியனுக்கு சாகா வரம் கொடுத்த நண்பனை தொலைத்துவிட்டோமே என்ற தவிப்பினாலும்தான்!

ராவுத்தரின் ஆத்மாவுக்கு சொர்கத்திலும் வேலை இருக்கும்!

Read previous post:
இந்த படத்துக்கு ஏ கொடுத்தே தீரணும்! ஏமாந்த சென்சார் ஆபிசர்ஸ்…

இந்த படத்துக்கு ‘A’ கொடுத்தே தீர்றது என்று கங்கணம் கட்டிக் கொண்டு கிளம்பிய சென்சார் ஆபிசர்களையே, ‘ஐ யம் ஸாரி சார்...’ சொல்ல வைத்த படம் ‘குரங்கு...

Close