சீனு ராமசாமியா, யார் அது? கடும்கோபத்தில் இசைஞானி இளையராஜா
சீனு ராமசாமி இயக்கி வரும் படம் ‘இடம் பொருள் ஏவல்’! விஜய் சேதுபதியும், விஷ்ணுவும் இணைந்து நடிக்க இவர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார் அட்டக்கத்தி நந்திதா.
நந்திதாவுக்கு முன் அந்த கேரக்டரில் நடிக்கவிருந்த மணிஷா அதற்கப்புறம் நடிக்கவில்லை. ஏன்? என்ற கேள்விகளுக்குள் போனால், பீஸ் போன பழைய கேஸ் ஃபைலையெல்லாம் புரட்ட வேண்டியிருக்கும். அதனால் நிற்க! இந்த படத்திற்கு எந்த வகையிலாவது பப்ளிசிடி கொடுக்க ஆசைப்பட்டுவிட்டார் போலிருக்கிறது சீனு. கடந்த சில தினங்களாகவே தப்பும் தவறுமான செய்திகளை மீடியாவுக்கு கொடுத்து வருவதாக சீனுவை காய்கிறது கோடம்பாக்கம். அதிலும் தன் மீது பட்ட காற்று, வைரமுத்துவை தொட்டுவிடவே கூடாது. அப்படி தொட்டால் அலுப்பு பார்க்காமல் ராமேஸ்வரத்தில் மூழ்கி எழுந்து பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது கடும் கோபத்திலிருக்கும் இசைஞானி இளையராஜாவை இந்த பாலிட்டிக்ஸ் பப்ளிசிடிக்கு பயன்படுத்தி வருவதுதான் கொடுமை.
யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் இசையமைப்பாளர் என்பதுதான் சீனுவின் பொய்களுக்கு சிம்மாசனம் போட்டுக் கொடுக்கிறது போலும். படத்தில் எல்லா பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். அதில் ஒரு பாடலை இசைஞானி இளையராஜா பாடுகிறார் என்று நியூசை கிளப்பிவிடுகிறார் சீனு. ஜுனியர் விகடனில் வெளியான அந்த செய்தி அப்படியே பரவி இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிலும் வெளியாகியிருக்கிறது.
ஒரு பொய்யை நாலு முறை சொன்னால் அது உண்மையாகி விடுவதை போல, இளையராஜா வைரமுத்து நட்புறவை(?) நன்கு அறிந்த திருவாளர் பொதுஜனம் வெகுவாக குழம்பியிருக்கிறார். ‘ஒரு வேளை இருக்குமோ… ’ என்கிற சந்தேகத்துடன் இசைஞானியின் இசைக்கூடத்தை தொடர்பு கொண்டோம். நமக்கு அவர் வாயிலிருந்தே கிடைத்த பதில் இதுதான். ‘சீனு ராமசாமியா, யார் அது?’
இதுக்கு அப்புறமும் புரளி கிளப்புவீங்க?