ராஜா கேட்கிறாரு… தேடிக் கொடுங்க பார்க்கலாம்!
ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. ராஜா, ஸ்டுடியோவில் இருப்பார். அவர் பாடல்கள் மட்டும் உலகம் முழுக்க காற்றில் பறந்து கொண்டிருக்கும். இப்படி ஸ்டுடியோவும், இசையுமாக வாழ்ந்தவருக்கு ரசிகர்களை சந்திக்க ஏது நேரம்? இசை தேவனை நேரில் பார்த்துவிட மாட்டோமா என்று தவித்து வந்த அவரது ரசிகர்களுக்கு பல்லாண்டுகளாக கிடைத்து வந்தது அவரல்ல… அவரது பாடல்கள் மட்டுமே!
சமீபகாலமாக அவரிடமே கூட மாற்றம். தனது ரசிகர்களுக்காக சிற்சில நிமிஷங்கள் ஒதுக்குகிறார். அவ்வளவு ஏன்? சமீபத்தில் தனது சொந்த ஊரான பண்ணை புரத்திற்கே அழைத்து 100 க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு விருந்தளித்தார். இளையராஜா பேன்ஸ் கிளப் என்ற அமைப்புக்கும் மனதார வாழ்த்து சொல்லி வாசல் திறந்து வைத்திருக்கிறார். இப்படியெல்லாம் ரசிகர்களை நோக்கி மெல்ல நடை போட ஆரம்பித்திருக்கும் இசைஞானி, அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு பிரமாதமான ஒரு வேலையும் கொடுத்துவிட்டார். அந்த வேலையை சிறப்பாக செய்து முடிக்கிறவர்களுக்கு ராஜா கையால் பரிசும் உண்டு. அடடா… அது எப்படி?
வேறொன்றுமில்லை, அன்னக்கிளியில் ஆரம்பித்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று இளையராஜா இசையமைத்த படங்களின் லிஸ்ட்டை யார் தெளிவாக எழுதி அனுப்புகிறார்களோ, அவர்களுக்குதான் இந்த பரிசாம். வெறும் படங்களின் பெயர் மட்டுமல்ல, அந்த படத்தின் தயாரிப்பாளர் யார், இயக்குனர் யார், அந்த படம் எந்த வருடத்தில் வெளியானது, பாடல்களை பாடியவர்கள் யார் யார்? என்று எல்லா விபரங்களையும் துல்லியமாக எழுதி அனுப்ப வேண்டும். மிக சரியாக எழுதி அனுப்புகிறவர்களுக்குதான் இசைஞானி நேரில் வரவழைத்து பரிசளிக்கிறார்.
எங்கே… துள்ளிக்கிளம்பி புள்ளி விபரத்தோடு வாங்க பார்க்கலாம்!