சதி செய்யும் அகி – சாட்டை சுழற்றிய இளையராஜா

‘கன்னக்கோல்’ வைப்பதை விட கொடூரமானது அடுத்தவர் உழைப்பை அலுங்காமல் குலுங்காமல் ஆட்டையை போடுவதுதான்! கள்ளக்காதலை விடவும் கீழ்த்தரமான இந்த வேலையை செய்து வரும் நிறுவனங்களை கார்ப்பரேட் என்றும் அழைக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அப்படியொரு ‘கார்ப்பரேட்டர்’ அடைபட்ட இசை நிறுவனத்தின் மீது கடும் கோபத்திலிருக்கிறார் இசைஞானி இளையராஜா. அதுவும் எந்தளவுக்கு என்றால், ‘என் பாடல் சிடியை வாங்காதீங்க’ என்று அவரே அறிக்கை அனுப்புகிற அளவுக்கு.

‘இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு முறைப்படி ராயல்டி வந்திருந்தால், இந்த உலகத்திலேயே பெரும் பணக்காரர்களில் ஒருவராக அவர் இருந்திருப்பார் ’ என்று ஒரு மேடையில் ஒரு பிரபல இயக்குனர் கூறினார். நிஜமும் அதுதான். காற்றின் திசையெங்கும் ராஜாவின் பாடல்களே நிறைந்திருக்கிறது. ஆனால் அத்தனையும் கள்ளநோட்டுக்கு நடுவில் சிக்கிய நல்ல நோட்டுகளை போல. இப்படி காற்றில் கரைந்திருக்கும் ராஜாவின் பாடல்களில் 90 சதவீத பாடல்கள் முறைப்படி அவருக்கு பணம் தந்து நாம் பயன்படுத்துகிற பாடல்கள் அல்ல என்பதுதான் வேதனை. எல்லாம் திருட்டு. கொள்ளை. அநியாயம்!

‘உங்களுக்கு முறைப்படி ராயல்டி தருகிறேன்’ என்று முன்வந்து அவருடன் அக்ரிமென்ட் போட்ட மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனம், அவரை தொடர்ந்து ஏமாற்றி வருகிறதாம். ‘இனிமேல் அவரது பாடல்களை நீங்கள் விற்பனை செய்யக்கூடாது’ என்று சென்னை உயர்நீதிமன்றம் மேற்படி நிறுவனத்திற்கு தடை விதித்திருக்கிறது. இருந்தாலும், குறுக்கு வழிகளில் அவரது இசையை விற்று வருகிறதாம் அந்த நிறுவனம்.

இதற்கப்புறமும் ராஜா சும்மாயிருப்பாரா?

அந்த நிறுவனத்தின் மோசடிக்கு தன் ரசிகர்கள் பலியாகக் கூடாது என்று ரசிகர்களுக்கு இளையராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உலகம் முழுதும் வசித்து வரும் அன்பான என் ரசிகர்களே, நான் இசைமைத்த பலவேறு படங்களின் பாடல்களை மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனத்தின் அகிலன் லட்சுமணன் என் அனுமதி இல்லாமல் முறைகேடாக விற்பனை செய்து வருகி்றார்கள். இப்படி பல ஆண்டுகளாக விற்று வரும் அகி நிறுவனம் எனக்கு சேர வேண்டிய ராயல்டியையும் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறது. இதனால் எனக்கு பெரிய அளவில் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் அகிலன் லட்சுமணன் நிறுவனத்திற்கு தடை உத்தரவு போட்டிருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து பாடல்களை விற்பனை செய்து வருவதாக அறிகிறேன். அதனால் ரசிகர்கள் யாரும் அகி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனை செய்யும் என் பாடல்களின் சிடிகளை வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது பாடல்களின் அதிகாரப்பூர்வ விற்பனை நிறுவனம் குறித்து விரைவில் அறிவிக்கிறேன். அதுவரை ஐட்யூனிலும் எனது பாடல்கள் எதையும் தரவிறக்கம் (Download) செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.”

-இவ்வாறு அந்த அறிக்கையில் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் இளையராஜா.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
லைக்கா பெயர் கட்! உடைக்கப்பட்ட தியேட்டர்! கப்சிப் விஜய், முருகதாஸ்!

கத்தி வருமா, வராதா? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இனிப்பாக வந்த அந்த செய்தி, அடுத்த கொஞ்ச நேரத்திலேயே இப்படி ஒரு கசப்பை தரும் என்று யாரும் நினைத்திருக்க...

Close