எப்பவுமே இப்படியா? இல்ல… இப்ப மட்டும்தான் அப்படியா?

“எந்த இடத்தில் என்ன கேள்வி கேட்பது என்கிற விவஸ்தையே இல்லேயேப்பா?”

சமூக வலைதளங்களில் நடந்து வரும் இதுபோன்ற விவாதமே விநோதமாக இருக்கிறது! அரசியல்வாதிகள் போலில்லை, சினிமா பிரபலங்கள்! அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தாக வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அப்படியல்ல. தினம் தினம் கூவ வேண்டியிருக்கிறது. கூவ மறந்தால், ஓட்டு போடும்போது அவர்களை மறந்துவிடும் பொதுஜனம்.

இதில் கலையுலகம் எப்படி? சினிமாக்காரனாக இருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதிக்குரிய லட்சணங்கள் வேண்டும். அரசியல்வாதிக்கு கிடைக்கிற எல்லா மரியாதைகளும் தனக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படியென்றால் அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டுமல்லவா? அதுதான் நடக்காது. சந்திப்பதேயில்லை. அப்புறம் எப்படி கேள்வி கேட்பது?

விமான நிலையங்களுக்கு வரும் அவர்களை மறித்து கேள்வி கேட்கிறார்கள். சாவு வீட்டுக்கு வந்தாலும் சரி. சடங்கு வீட்டுக்கு வந்தாலும் சரி. இங்க விட்டுட்டா முடியாது என்கிற ஆவேசத்தோடு கேட்கிறார்கள். ரஜினி பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி பல்லாண்டுகளாகிறது. அவரிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. எங்கு கேட்பது? எப்படி கேட்பது? எங்காவது பார்க்கிற இடத்தில் வழிமறித்துதான் கேட்கிறார்கள். அதுவும் மின்னல் நிமிடத்தில் முடிந்துவிடுகிறது. ரஜினி நின்றால்தானே கேட்பதற்கு? ஆனாலும் பார்க்கிற இடங்களிலெல்லாம் கேட்பதும் தொடர்கிறது. இனிமேலும் தொடரும்.

சரி… இளையராஜா விஷயத்திற்கே வருவோமே! முன்பெல்லாம் ரஜினி போல ஒதுங்கியே இருந்தவர் இப்போதெல்லாம் அதிசயமாக பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அவர்களின் கேள்விகளுக்கு பதிலும் சொல்கிறார். ஆனால் எப்படியென்று நினைக்கிறீர்கள்?

இளையராஜாவின் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. ஒரு மாலை நாளிதழ் நிருபர் இப்படியொரு கேள்வி கேட்டார். “ஐயா. ஆயிரம் படத்துக்கு இசையமைச்சுட்டீங்க. எவ்வளவோ ஹிட் பாடலை கொடுத்திருக்கீங்க. அந்த பாடல்களிலெல்லாம் நம்ம ஊர் இசைக் கலைஞர்களின் பங்களிப்புதான் இருந்தது. ஆனால் இப்பவெல்லாம் ஹங்கேரியிலிருந்து இசைக்கலைஞர்களை அழைச்சுட்டு வந்து பயன்படுத்திறீங்களே, அதுக்கு விசேஷ காரணம் எதும் உண்டா?

இந்த கேள்வியில் பொதிந்து கிடக்கும் நியாயம் எல்லாருக்கும் புரியும். எவ்வளவோ ஹிட் பாடல்களில் உறுதுணையாக இருந்தவர்கள் நமது ஊரிலேயே இருக்கும்போது ஏன் இவர்கள் பிழைப்பை கெடுத்துவிட்டு எங்கிருந்தோ வருகிற சிலருக்கு கொட்டிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அது. அதற்கு இளையராஜா என்ன சொன்னார் தெரியுமா?

“நான் சொல்லிடுவேன். அதை புரிஞ்சுக்குற அளவுக்கு உனக்கு அறிவிருக்கா? சங்கீத ஞானம் இருக்கா?”

சுப்புடுவுக்கு சங்கீதப்புலமை உண்டு. சங்கீத கச்சேரிகளை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்வார். ஆனால் “நீ வந்து பாடு” என்றோ, “நீ வந்து ஆடு” என்றோ” என்று எந்த வித்வானும் சொன்னதில்லை. எந்த நாட்டியத் தாரகையும் கோபித்துக் கொண்டதில்லை. நிருபர்கள் எல்லாரும் சுப்புடு இல்லைதான். ஆனால் மேலே கேட்ட கேள்வியில் தவறில்லை அல்லவா? அதுமட்டுமல்ல, அந்த நிருபர் இளையராஜாவின் பதிலை எழுதி, அவர் மட்டுமே படிக்கப் போவதில்லை. அதை சங்கீதம் தெரிந்த பலரும் படிப்பார்கள். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி படிப்பார். கற்றறிந்த பேராசிரியர் படிப்பார். இளையராஜாவின் வார்த்தைகளை அப்படியே பிரதியெடுக்கும் நிருபருக்கு கூட அது புரியாமல் போகட்டும். படிப்பவர்களுக்கு புரியும் அல்லவா? அதற்கப்புறம் நிருபர் பேசவில்லை.

இதுபோல கேள்வி கேட்ட பலருக்கும் இளையராஜா சொன்ன பதில்… “நான் உன் எதிர்ல வந்து உட்கார்ந்துட்டா என்ன வேணும்னாலும் கேட்ருவியா? நீயும் நானும் சமம் ஆகிடுவோமா?”

அவ்வளவு ஏன்? “இளையராஜா இசையமைத்த சிம்பொனி இசை இன்னும் வெளியிடப்படவில்லை. அதை கேட்பதற்கு ஒவ்வொரு தமிழனும் ஆர்வமாக இருக்கிறான். அதை சீக்கிரம் வெளியிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டது ஒரு முன்னணி வார இதழ். உடனே அந்த இதழின் மீது வழக்கு போடப்பட்டது. இன்னும் கூட வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

இளையராஜாவிடம் கேள்வி கேட்கும் ஒவ்வொரு நிருபருக்கும் ஒவ்வொரு விசித்திர அனுபவம் இருக்கிறது. ஒரு பெண் நிருபர். “முன்பெல்லாம் நீங்க இசையமைச்சா அத்தனை பாடலும் ஹிட்டாகும். இப்போ அஞ்சு பாடல்கள் ஒரு படத்தில் வந்தால், அதில் ஒன்ணுதான் ஹிட்டாவுது?” என்றார்.

இப்படியெல்லாம் இளையராஜா போன்ற உலகம் போற்றும் இசையறிஞரிடம் கேட்கக் கூடாதுதான். ஆனால் 80களில் இருந்த இளையராஜாவின் பாடல்களுக்கு ஆசைப்படும் ரசிகர்களின் பார்வையில்தான் அந்த கேள்வியை கேட்டார் அவர். இதற்கு பதில் சொல்வது சங்கடமான விஷயம்தான். “நெக்ஸ்ட்?” என்று அடுத்த கொஸ்டீனுக்கு போயிருக்கலாம். ஏனென்றால் கேள்வியில் தவறில்லையே?

இளையராஜா என்ன செய்தார் தெரியுமா? “இதை கேட்கதான் இங்க வந்தியா? எந்திருச்சு போம்மா…!”

‘நந்தலாலா’ சமயத்தில் ஒரு பெண் நிருபர் கேட்டார். “மிஷ்கின் படத்துக்கு இசையமைக்கிறீங்க? அவர் வித்தியாசமான டைரக்டர். இந்த படத்தில் உங்க இசையில் வித்தியாசமா எதும் ட்ரை பண்ணியிருக்கீங்களா?”

“இதையேன் எங்கிட்ட கேட்கிற. போய் மிஷ்கின்கிட்ட கேளு…” என்றார் ராஜா. “என்ன சார் இப்படி பதில் சொல்றாரு?” என்று அந்த நிருபர் மிஷ்கினை தொடர்பு கொண்டார். “அவர் அப்படிதான். கோவிச்சுக்காதீங்க” என்றார் மிஷ்கின்.

இப்படி எல்லா பந்துகளையும் திருப்பி அடித்தே பழக்கப்பட்டவர் இளையராஜா. ஆனால் அவர்களெல்லாம் சற்றே சுரணை கெட்ட சினிமா நிருபர்களாக இருந்ததால், மறு பேச்சு பேசாமல் எழுந்து வந்திருக்கிறார்கள். ஆனால் அரசியல் நிருபர்கள் அப்படியல்ல. பல சந்தர்ப்பங்களில் ஜெயலலிதாவையும், கலைஞரையும், விஜயகாந்தையும், இன்னும் பல அரசியல் தலைவர்களையும் விரட்டி விரட்டி கோபப்படுத்தியிருக்கிறார்கள். அது இன்றளவும் தொடர்கிறது.

ஆரம்பகாலத்தில் இளையராஜாவுடன் பணியாற்றிய அத்தனை லெஜன்ட் டைரக்டர்களும் அவரை விட்டு ஓடியதற்கு என்ன காரணம்? இசைஞானிக்கு அந்த தனியார் தொலைக்காட்சி நிருபரும் ஒன்றுதான். தன்னிடம் வரும் இயக்குனர்களும் ஒன்றுதான்.

முன்பெல்லாம் நிருபர்கள் மட்டும இருந்தார்கள். இப்போது நிருபர்கள் கூட்டத்தில் ரசிகர் மன்ற தலைவர்களும் ஊடுருவிட்டார்கள். தப்பி தவறி வருகிற சிலரை ‘கேள்வி கேட்டதே குற்றம்’ என்று மட்டம் தட்டுகிற வேலை நடக்காமல் இருக்குமா என்ன? ஆனால் முன்பு போல பெரிய கலைஞர்களிடமும் மூத்த அறிஞர்களிடமும் மற்றவர்கள் வைத்திருந்த பயமும் பக்தியும் இப்போது இல்லை. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், ஒரு மிஸ்டருடன் பெயரை சொல்லி அழைக்கிற அளவுக்கு ஃபிரீக் ஆக வளர்கிறது இளைய சமூகம்.

மிஷ்கினை பேட்டியெடுக்கப் போனால், நீ அந்த ஆங்கில நாவலை படிச்சுருக்கியா? இந்த நாவல் பற்றி தெரியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்பார். “படமெடுக்கிற உங்களுக்குதான் அதெல்லாம் தேவை. என்னை போன்ற நிருபருக்கு, உன் படம் தொடர்பான பத்து கேள்வி கேட்க தெரிந்தால் போதும்” என்று பதில் சொன்ன நிருபர்கள் இங்கு உண்டு. இங்கு இளையராஜா என்ன? மிஷ்கின் என்ன? ஒரே பதில்தான்.

அது மட்டுமல்ல, இளையராஜாவும் ஒரு இசையமைப்பாளர்தானே? இவருக்கு முன்னால் ஜி.ராமநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன்கள் செய்த சாதனைகள் போலதானே இவரது சாதனையும். பிறகென்ன இவருக்கு மட்டும் தேவதூதன் இமேஜ்? வேறொன்றுமில்லை. பல்லாண்டு காலமாக மிதிபட்டு கிடந்த சமூகத்திலிருந்து எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு வீறு கொண்டு எழுந்த இசை சூறாவளி என்பதால் மட்டுமேதான் அந்த இமேஜ். அந்த மரியாதையை இன்றளவும் அவருக்கு கொடுக்க நினைக்கிறது சமூகம். ஆனால் அவர் பால் அன்பு கொண்ட ஒவ்வொருவரையும் அவரே விரட்டி விரட்டி அடித்துக் கொண்டிருக்கிறார் தன் செய்கையால்.

“எங்க அப்பா செத்தப்ப கூட நான் அழுததில்ல. இளையராஜா பாட்டை கேட்டுதான் அழுதேன்” என்கிறார் ஒருவர். “அவர்ட்ட போயி இப்படி கேட்டுட்டானே?” என்று பாய்கிறார் இன்னொருவர். “கடவுளின் அவதாரம் அவர்” என்கிறார் மற்றொருவர். “உனக்கு அறிவிருக்கான்னு கேட்டதுக்கு பதில் செருப்பை எடுத்து அடிச்சிருக்கணும்” என்கிறார் வேறொருவர். அடேய்… உங்களையெல்லாம் நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

‘ஆண்டை’ மனோபாவத்தோடு நடந்து கொள்வது இளையராஜாவின் வழக்கம். அதையெல்லாம் சகித்துக் கொண்டு கைகட்டி நிற்பவர்கள் நிற்கட்டும். அதற்காக எல்லாரும் நிற்க வேண்டும் என்று நினைப்பது சரியா?

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு செய்தி நிறுவனமும், தங்கள் அளவுக்கு தகுதியான நிருபர்களைதான் வேலைக்கு வைத்திருக்கிறார்கள். “அறிவிருக்கறதாலதான் கேட்கிறேன்” என்று பதில் சொல்கிற அளவுக்கு தைரியமும் அறிவும் இருந்தால் அதுவே நிருபர்களுக்கு யதேஷ்டம்!

இங்கே ‘நான்’ என்கிற எவரும் தப்பிக்கவே முடியாது.

பிடிக்காத கேள்விகள் வந்தால் “சேரை தூக்கி அடிப்பேன்” என்று சொல்கிற விஜயகாந்துக்கும் வேறு வழியில்லை. அவரை அன்றாடம் சந்திக்கும் நிருபர்களுக்கும் வேறு வழியில்லை. ஆனால் இசைஞானிக்கெல்லாம் நிறைய வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று வீட்டிலும் சரி. வெளியிலும் சரி. நிருபர்களை கண்டால் அந்தப்பக்கம் முகத்தை கூட திருப்பக் கூடாது.

இன்னொன்று…? ம்ஹூம்… வேணாம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

பின்குறிப்பு- திட்டுகிற இளையராஜா பக்தர்கள் வரிசையில் வரவும். பீப் வார்த்தைகளை பயன்படுத்தினால் உங்கள் வசவுகளை பதிவிட இயலாது. எனவே அதற்கேற்றார் போல திட்டவும்!

13 Comments
 1. மனோ says

  ஒவ்வொரு செய்தி நிறுவனமும், தங்கள் அளவுக்கு தகுதியான நிருபர்களைதான் வேலைக்கு வைத்திருக்கிறார்கள்.

  -ரொம்ப ரொம்ப தப்பா ஜட்ஜ் பண்ணிட்டீங்க. ஒரு புண்ணாக்கும் தெரியாத மடப் பயல்கள்தான் மைக்கைத் தூக்கிக் கொண்டு வருகிறார்கள். அது உங்க மனசாட்சிக்கே தெரியும். ராஜா மீது வரும் விமர்சனங்களில் பல அவருடனான தனிப்பட்ட கோபத்தின், வெறுப்பின் வெளிப்பாடுதான். உங்களுக்கும் ஜேம்ஸ் வசந்தனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

  1. Rajendran says

   Raja pera pottavathu naalu kaasu sambarikkalam enru thiribavarkalil Anthanan oruvar

 2. மனோ says

  https://www.facebook.com/vsuryakumar/videos/10208120246914387/?theater

  இந்த வீடியோவை முழுசா பாருங்க. இந்த சூழல்ல உங்ககிட்ட இப்படிஒரு கேள்வி கேட்டிருந்தா, சத்தியமா செருப்பால அடிச்சிருப்பீங்க

 3. jai says

  இசைஞானி இறந்துவிட்டார்….! இளையராஜா வாழ்கிறார்…!

 4. hari says

  ella pugazhum illayarajavukey!!!!!!

 5. bandhu says

  அதாவது, தகுதியில்லாத நிருபர்கள் வருவார்கள். தேவையில்லாத, சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்பார்கள். ஆனால், கோபப் படாமல் பதில் சொல்லியாக வேண்டும் என்று சொல்கிறீர்கள்!

  ஏன் சொல்லவேண்டும்? சென்னை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்திருக்கிறது. உண்மையான நல்லுள்ளங்கள், அவர் உள்பட, உதவி செய்திருக்கிறார்கள். அவர் ஒரு படி மேலே சென்று உதவி செய்த 1200 பேர்களுக்கு கைப்பட வாழ்த்தி எழுதி கொடுத்திருக்கிறார். 72 வயதில், நான்கு மணி நேரம் நின்றுகொண்டு!

  அந்த இடத்தில், உருப்படியில்லாத இருவர் பண்ணிய ஒரு குப்பை பாடலை பற்றி எந்த அறிவும் இல்லாத ஒரு நிருபர் கேட்பார். இவர் கோபப்படாமல் இருக்கவேண்டுமா?

  என்ன நியாயம் இது? இளையராஜாவை பிடிக்கவில்லை. அவர் என்ன செய்தாலும் தவறு என்று வெளிப்படையாக சொல்லிவிட்டுப் போங்களேன்!

  1. Muhsinthamby says

   Sariyana badhil

 6. Balakannan says

  வெள்ள நிவாரண நிதிக்காக பாடவந்த எம். எஸ். சுப்புலஷ்மியிடம் இவனுங்க சன்னிலியோன் நடிப்பைப்பத்தி அபிப்பிராயம் கேட்பானுங்களாம் …
  அதுக்கு அந்தம்மா கோபப்படாம பதில் சொல்லனுமாம் !

  ஏன்டா, அவங்ககிட்ட கேட்கிற கேள்வியா அதுன்னு கேட்டா,.. இவங்களும் பக்தமீரா படத்துல நடிச்ச நடிகைதான், சன்னிலியோனூம் நடிகைதான் , நாங்க கேட்டா என்ன தப்புன்னுவாங்யளாம்…
  , அது ஊடக சுதந்திரமாம். !

  வழக்கம்போல இதுக்கு நியாயம் பேச நாலு நடுநிலைவாதிகள் ..,,,.!

  நல்லா வருது வாயில !

  1. sandy says

   நெத்தியடி…
   ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல வேறுபட்ட சுபாவங்கள் இருக்கிறது. ஏன் உங்களுக்குள்ளும் நல்லவனும் இருப்பான்.. கெட்டவனும் இருப்பான்… பலபேர் நல்லவனாகவே நடிப்பார்கள்.. நடித்துக்கொண்டும் இருப்பார்கள்… ஆனால் சிலபேர் வெளிப்படையாக கட்டி விடுவார்கள்.. அதுதான் இங்கும் நடந்தது.. வெளியில் நடிப்பதை விட வெளிகட்டிவிடுவது எவ்வளவோ மேல்.. மொதல்ல இந்த பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு திமிர்… வயசு வித்தியாசம் இல்லை.. அவருடைய சாதனையின் வயசு கூட இவருக்கு இல்லை… அப்படி இருக்கும் போது சந்தர்ப்ப சூழ்நிலை பார்க்க கூட அருகதை இல்லாத இவனெல்லாம் பொதுமக்களுக்கு என்ன செய்தி சேகரிக்க போறான் .. இது என்ன அப்படி மக்களுக்கு ரெம்ப அவசியமான தல போற செய்தியா, வேற ஒரு சந்தர்ப்பத்துல கேட்ககூடதா.. இந்த விசயத்துக்கு கூஜா தூக்க பலபேரு….

 7. Muhsinthamby says

  Nice reply

 8. சந்திரசேகர் says

  அந்தணன் சார், இளையராஜா அவர்கள் கோபப்பட்டது, தவறு என்றே வைத்து கொள்வோம், ஆனால் நீங்கள் பதிவு செய்து இருக்கும் இந்த பதிவை வைத்து பார்க்கும்போது அந்த நிருபர் கேட்ட கேள்வி சரி என்பது போலவும், நீங்கள் இதை ஆதரிப்பது போல் இருக்கிறது, தயவுசெய்து நடுநிலையாக இருங்கள், ஒரு மூத்த கலைஞரிடம், அதுவும் அந்த சூழலில் கேட்க அவசியம் உள்ள கேள்வி தானா அது. உங்கள் சக நிருபரின் தவறை தட்டி கேட்க வேண்டிய பொறுப்பு மூத்த நிருபர்களான உங்களுக்கு உண்டு. தவறை மறைமுகமாக ஆதரிப்பதன் மூலம் ஊடகங்களின் மீதான மக்களின் நம்பிக்கையை குறைக்காதீர்கள்

 9. Arivelarasan says

  /இவருக்கு முன்னால் ஜி.ராமநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன்கள் செய்த சாதனைகள் போலதானே இவரது சாதனையும். பிறகென்ன இவருக்கு மட்டும் தேவதூதன் இமேஜ்? வேறொன்றுமில்லை. பல்லாண்டு காலமாக மிதிபட்டு கிடந்த சமூகத்திலிருந்து எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு வீறு கொண்டு எழுந்த இசை சூறாவளி என்பதால் மட்டுமேதான் அந்த இமேஜ். அந்த மரியாதையை இன்றளவும் அவருக்கு கொடுக்க நினைக்கிறது சமூகம்./….

  Ithellam oru polappa?….Yosichuthan éluthiringala?…..ungalukku vantha retham, engalukku vantha thakkali chettiniya?….

 10. பாலயோகா says

  உண்மையில் இளையராஜா செய்தது தவறுதான். திட்டி இருக்ககூடாது செருப்பை எடுத்து நாலு சாத்து சாத்தி இருக்க வேண்டும்.

  ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி கக்கூஸ் போயிட்டு வெளியே வருவார். அபோது செந்தில், “அண்ணே சாப்பிட்டீங்களா” என்று கேட்பார். அப்போது கவுண்டமணி கக்கூசையும் செந்திலையும் திரும்பி பார்த்துவிட்டு ஓங்கி ஒரு அரை விடுவார் பாருங்க……

  இளையராஜா, அப்படி ஓங்கி ஒரு அரை விட்டிருக்க வேண்டும் அந்த நிருபரை…. இடம் பொருள் அறிந்து கேள்வி கேட்க வேண்டும் என்று.
  கரகாட்டக்காரன் படத்தில் காரை தள்ளிக்கொண்டே செல்லுவார்கள், அப்போது செந்தில் , கவுண்டமணி காதில் ஏதோ கேட்பார், அவர் கேட்டதை நினைத்து, நினைத்து செந்திலை அடிப்பார் கவுண்டமணி. ராமராஜன் ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு செந்தில் சொன்னதை சொல்லிவிட்டு மீண்டும் ஒரு அடி கொடுப்பார்.

  அப்படி திரும்ப திரும்ப அந்த நிருபரை வெளுத்திருக்க வேண்டும்…… யாரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்ற அறிவு வேண்டும்.

  நீங்கள் எல்லாம் எப்படிப்பட்ட ஆட்கள் தெரியுமா, கற்பழிக்கபட்ட ஒரு பெண்ணிடம் போய், “உன்னை எப்படி கற்பழித்தார்கள், எங்கு தொட்டார்கள், எப்படி தொட்டார்கள், எத்தனை பேர் கற்பழித்தார்கள், எப்படி கற்பழித்தார்கள்” என்று கேள்வி கேட்கும் கூட்டத்தை சேர்ந்தவர்கள்.

  மேலும்,

  இளையராஜா செய்தது தவறுதான், என்ன பண்ண அவரு தன்மானமுள்ள இனத்தில் பிறந்ததால் கோபம் வந்துவிட்டது, அதனால் அவர் செய்தது தவறுதான்.

  உன் தாயைப் தவறாக பேசியவனைப் பற்றி உன்னிடம் கருத்துக் கேட்டால், நீ பொறுமையாக பதில் சொல்லுவாய். ஏனென்றால் உனக்க்கெல்லாம் தாய்க்கும், தாரத்துக்கும் வேறுபாடு தெரியாது. எங்களுக்கு அப்படியில்லை. பெண்கள்தான் எங்கள் வீட்டின் பிரதம மந்திரிகள். அதனால் எந்தப் பெண்ணைப் பற்றி தவறாக பேசினாலும் கோபம் வரும்.

  இசையை தாய்க்கும் மேலாக நேசிக்கும் ஒருவரிடம் அந்த இசையையும், பெண்களையும் கேவலப்படித்தியத்தை பற்றி கேள்வி கேட்கும் போது கோபம் வந்தால்தான் அவன் உண்மையான மனிதன், அப்படி வரவில்லை என்றால் அவன் ஒரு மானம்கெட்ட கெட்ட ஜென்மம்.

  அதனால் இளையராஜா செய்தது தவறுதான் மானம் கெட்டவர்களே….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அருவருப்பூட்டுகிறது…

தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர், வேறொரு நிகழ்ச்சிக்கு வந்த இளையராஜாவிடம் கேட்ட ஒரு கேள்வி அவரை கடும் ஆத்திரத்திற்குள்ளாக்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட நிருபரை காய்ச்சி எடுத்துவிட்டார். அவர் கேட்ட...

Close