பார்த்தவிழி பார்த்தபடி… உயிர் இசை, மெய் இசை, உயிர் மெய் இசை – 7 – முருகன் மந்திரம்

இளையராசா, தன் தோளில் ஒரு மெல்லிய வெண்மையான குறுமேலாடை போர்த்தியிருப்பார். அந்த குறுமேலாடை மீது எனக்கு ஒரு கண்.

முதல்முறை இசைஞானியை மிக நெருக்கமாக சந்தித்த நிகழ்வு நடந்த அந்த இசைநாளின் இரவில்… ஒரு பெருந்திமிரும் பேரமைதியும் என்னுள் புகுந்திருந்தது. அடடா, அடுத்தமுறை இசைஞானியை சந்திக்கும்போது உறுதியாகவும் பிடிவாதமாகவும் அவர் பயன்படுத்தும் குறுமேலாடையில் ஒன்றை வாங்கி வந்தே ஆகவேண்டும் என்று எனக்குள் எழுதிக்கொண்டேன். முன்பாகவே தேனி கண்ணன் அண்ணனிடமும் சுகா அண்ணனிடமும் இதை தெரிவித்துவிடவேண்டும், என்பது இந்த திட்டமிடலின் முதல் புள்ளி. புள்ளி வைத்தாயிற்று.

இளையராசாவுக்கு எங்கள் ஊர் இளசுகள் வைத்திருந்த செல்லப்பெயரை, இந்த தொடரின் முன் பகுதி ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். “மொட்டை” என்பது அது.

எம்.ஜி.ஆர், சிவாஜியில் இருந்து ரஜினி, கமல் வரை…. அவன், இவன் என்று ஒருமையில் உறவு கொண்டாடி மட்டுமே பழக்கப்பட்ட… எங்கள் வாய்கள் இளையராசாவை பற்றி பேசும் போது… அவர், இவர் என்று மரியாதை பழகும்.

மொட்டை கொல்றாருப்பா, மொட்டை பின்றாருப்பா, மொட்டை பாடா படுத்துறாருப்பா… மொட்டை பின்னிட்டாருப்பா என்று எங்கள் தமிழ் நிகழ்காலத்திலோ, கடந்த காலத்திலோ இருந்தாலும் அதில் மொட்டை இல்லாமல் இருக்காது.

ஊருக்கே கருப்பு வண்ணம் அடிக்கும் அமாவாசை இரவுகள் ஆனாலும் சரி, பௌர்ணமி நிலவு வெளிச்சத்தை அள்ளி ஊரெல்லாம் தெளிக்கும் வெள்ளை இரவுகள் ஆனாலும் சரி… இடைப்பட்ட இரண்டுங்கெட்டான் இரவுகளாக இருந்தாலும் சரி, எங்களோடு ராசா இல்லாத நாள்களே இல்லை.

அந்த இசைஞானியை நேரில் பார்ப்பதும், அவரோடு பேசுவதும்… நாளை நிகழப்போகிறது என்றால்… இன்றைய இரவு அமைதியாக உறங்கி விடுமா என்ன?

காதலியின் வீட்டுக்குள் செல்வது போல பதட்ட பரபரப்பும், இன்பக் குறுகுறுப்பும் கூடவே நடக்க… பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தின் மையப்பகுதிக்கு செல்கிறோம். தும்பைப் பூவாய் நின்று அன்பாய் புன்னகைக்கிறார் ராசா.

பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தின் அந்த மையப்பகுதி, திருவண்ணாமலையின் ஒற்றைக்காட்சி ஒன்றை கண்களுக்குள் வீசியது. பூமியின் மையப்பகுதி என்று திருவண்ணாமலையை சொல்வார்களே… ஒருவேளை நான் நிற்கின்ற இடம்… இசையின் மையப்பகுதியாக இருக்குமோ… அதனால் தான் அந்த ஒற்றைக்காட்சி கண்ணுக்குள் ஓடோடி வந்ததோ… என்றொரு எண்ணம் வந்தது.

மரியாதை செய்வதன் நிமித்தமாகவும் ராசாவுடன் புகைப்படம் எடுத்தலில் நிமித்தமாகவும் வரிசையாகச் செல்கிறோம் நாங்கள். வரிசை நகர்கிறது. புகைப்படம் எடுத்தல் நிகழ்கிறது. ஆனால், எந்த சத்தமும் கேட்டதாய் நினைவில்லை. வார்த்தைகள் யாவும் எங்களுக்கு இப்போது எந்த வேலையும் இல்லை என்று… ஓரமாய் கை கட்டி நின்றிருக்கும் என்று நினைக்கிறேன்.

நகரும் வரிசையில் நானும்… என் முறைக்காக காத்திருக்கிறேன். அந்த நொடியில் நான் “குணா”வாக எனக்குள் தெரியாமல் மாற்றம் கொண்டது போல ஒரு நினைப்பு. என் விழிகளுக்கும் ராசாவின் முகத்திற்குமான இடைவெளியில் குறுக்கிடும் உருவங்களின் அசைவுக்கு ஏற்ப அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமாக விலகி விலகி… ராசாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறது என் விழிகள்…
உச்சி முதல் பாதம் வரை ராசாவை ரசிக்கும் மனம்… இசை இதயம்… ராசாவை நெருங்க நெருங்க சுற்றி இருப்பவர்களை மறந்துபோனது, என்னை மறந்து போனது. கடந்தவர்கள் அனைவரும் ராசாவின் அருகில் நின்று புகைப்படத்திற்கு புன்னகைத்துவிட்டு விலகுவது தெரிகிறது. என் முறை… புகைப்படம் எடுப்பதற்காக நிற்கும் மூளைக்கு இதயம் உத்தரவிடுகிறது.

சட்டென்று ராசாவிடம்… “உங்கள் கைகளை கொஞ்சம் முத்தமிட்டுக்கொள்கிறேன்…” என்று சொல்கிறேன். இல்லை செந்தமிழ் அங்கே வரவில்லை. “ஒங்க கையில ஒரு கிஸ் பண்ணிக்கிறேன்” என்றுதான் சொன்ன ஞாபகம். முகம் பார்க்க தைரியமில்லையா… இல்லை வெட்கமா?. ரெண்டும் தான். ஆனால், இதைக் கேட்டபோது நான் ராசாவின் முகம் பார்க்கவில்லை. அதுபோலவே ராசாவின் அனுமதிக்காக நான் காத்திருக்கவும் இல்லை. பிடித்தேன். குனிந்தேன். முத்தமிட்டேன். அந்த கணப்பொழுதில் நான் என் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், ராசா என் கட்டுப்பாட்டில் இருந்தார். அவரது ரெண்டு கைகளையும் நான் பிடித்துவைத்துக்கொண்டு முத்தமிட்டேன். என் கைளுக்கும் அவரது கைகள். கைகள் பிடித்ததும், முத்தமிட்டதும் எந்த முன்னேற்பாடும் இல்லாமல் நடந்தது. இன்னதென அறியாத ஏதோ ஒன்று… உயிர் முழுவதும் நிறைந்து வழிந்தது.

மாலையில் மின்னஞ்சலில் வந்த புகைப்படங்கள்… என் வாழ்நாள் முழுவதும் கொண்டாடும் புகைப்படங்களாக வந்து சேர்ந்தது. பார்தத விழி பார்த்தபடி ராசாவை நான் ரசித்தது எனக்குத் தெரியும். ஆனால் ராசாவின் கரங்களில் முத்தமிடும்போது, அவர் என்னையே அன்பொழுக பார்த்துக்கொண்டிருந்த காட்சி… புகைப்படத்தில் பார்த்தபோது பேரானந்தமானது புகைப்படம் எடுத்த நண்பர்களுக்கு என் வாழ்வின் நிரந்தர நன்றிகள்.

நெதர்லாந்தில் இருந்து அண்ணன் ஸ்ரீதர் இராமசுவாமியும், அண்ணன் வினோ ஜாசனும் இன்னும் பல நண்பர்களும் இளையராசா தொடரின் அடுத்த பகுதி எப்போது என்று உரிமையோடு விசாரித்துக்கொண்டே இருந்தார்கள். சற்றே… உரிமையோடும் கண்டிப்போடும் சீக்கிரம் எழுதுங்கள் என கட்டளையிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும்.
நேரப்பற்றாக்குறை காரணமாகவும், ராஜபந்தி ருசியாக இருக்கவேண்டும் என்பதற்காகவும்… தள்ளிவைக்க வேண்டியதாயிற்று.

தொடரின் இந்த பகுதியில் ராசாவை சந்தித்ததை எழுதலாம் என்று தோன்ற முதல் காரணம், “பார்த்த விழி பார்த்தபடி” பாடல்.

குணாவிற்கும் அபிராமிக்கும் எனக்கும் இளையராசாவிற்கும் “பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க” பாடலுக்கும்.. இவ்வளவு ஒற்றுமை இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. அய்யா வாலியின் வரிகளுக்கு வந்தனம். ஊன் உருக உயிர் பெருக இசைத்தேன் தரும் தடாகம்… என் ராகதேவனைப் பற்றி… இம்மி பிசகாமல் எழுதி வைத்திருக்கிறார் முன்னவர் வாலி அய்யா.

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
வழி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே

நம்புவீர்களா என்று தெரியவில்லை… இந்த தொடர் எழுதும்போது தான் யூடியூல் “பார்த்த விழி பார்த்த படி பாடலை” கூர்ந்து பார்த்தேன். ஆஹா… ஒரு நொடி மிரண்டுபோனேன். அபிராமியின் கைகளில் குணாவின் முத்தம்…. கூச்சம் குத்தகைத்தொகை கொடுக்காமலே என்னை வந்து சேர்ந்தது.
இதற்கு முன்னர் எத்தனையோ முறை அந்த பாடலை ரசித்து கேட்டிருக்கிறேன். சிலமுறை பார்த்தும் இருக்கிறேன் என்றாலும் முத்தமிட்டதெல்லாம் நினைவில் இல்லை.

எனக்கே வெட்கமாக இருக்கிறது. இந்த பாடலை இந்த தொடரில் எழுதுவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டது போலவே இருக்கிறது, இசைஞானியை நான் சந்தித்ததும், அவர் கரங்களின் நான் முத்தமிட்டதும்.

ஆனாலும் ஒரு பெருமகிழ்ச்சி, குதித்து கும்மாளம் போடுகிறது எனக்குள். காரணம், ராசாவை நான் சந்தித்த நிகழ்வு இயல்பானது என்பது சத்தியம் ஆகையால்… சத்தியம் ஆனதால்.

(இன்னும் இசை ஊறும்…)

பாடல் விவரம்:
படம் : குணா
பாடல் : பார்த்த விழி
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ்

5 Comments
 1. Sridhar Ramaswamy says

  அருமை. காத்திருப்பு வீண்போகவில்லை.

  மாசில் வீணையும் மாலை மதியமும்
  வீசு தென்றலாம் வீங்கிள வேனிலும்
  மாசில் வீணையும் மாலை மதியமும்
  வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
  மூசு வண்டறை பொய்கையை போன்றதே
  இசை எந்தை இணையடி நீழலே

 2. Murugan Manthiram says

  மிக்க நன்றி ஸ்ரீதர் அண்ணன், தொடரும் உங்கள் அன்பும் பாராட்டுகளும் என் தமிழை செழுமைப்படுத்துகிறது. “ஈசன் எந்தை இணையடி” என்பதை “இசை எந்தன் இணையடி” என்று நீங்கள் வார்த்தைகளில் நிகழ்த்தியுள்ள உற்சவம், சராசரிக் கண்களுக்கு புரியாது. உலகெங்கும் உள்ள கோடான கோடி ராசா ரசிகர்கன் ஒருவனாக என் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்துகொள்வதில் பெருமிதமும் சந்தோசமும் அடைகிறேன்.

 3. mahendrababu says

  சத்தமில்லா அந்த ஒற்றை
  முத்தம்
  நித்தம் உம் வாழ்வில் புது
  இரத்தம் ஓடும் . தமிழ் உலகம் பாடும். வாழ்த்துகள் நண்பா.

 4. Murugan Manthiram says

  Thanks. Thanks. Brother Mahendrababu. unmai thaan.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அதே நிறம்… அதே குணம்… அஜீத் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை

‘அதே நிறம்... அதே குணம்... அவரை போலவே வெற்றியும் புகழும் அடைய வாழ்த்துகிறேன் ’ சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அஜீத்தின் பிறந்த நாளன்று நாளிதழ் ஒன்றில்...

Close