கார்ல கேட்கிறாங்க பார்ல கேட்கிறாங்க இளையராஜாவை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த விவேக்!
மண்டையில் ரத்த அபிஷேகம் வாங்கி இந்த படத்தை உருவாக்கியிருக்கேன். இனிமே இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உங்க கையில்தான் இருக்கு என்று கண்ணீர் முட்டிக் கொள்ளுமளவுக்கு ஒரு இயக்குனர் பேசுகிறார் என்றால், அவர் இயக்கிய படமும் அதன் பின்புலமும் எப்படியிருக்கும்? சொல்லவே வேண்டாம். இலங்கையில் இனப் படுகொலைக்கு ஆளான ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் கதையை படமாக எடுத்தவரின் வலி மிகுந்த வார்த்தைகள்தான் அவை.
‘போர் களத்தில் ஒரு பூ’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை பெங்களூர் தமிழரான கு.கணேசன் இயக்கியிருக்கிறார். ‘அங்கே தமிழன்னு சொன்னா அடிப்பான். அவனே இசைஞானி இளைராஜா பாடலை கேட்டால் அப்படியே சாந்தமாகிவிடுவான்’ என்று கணேசன் சொல்ல, இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கைதட்டல்களுக்கு கேட்க வேண்டுமே! இந்த இசை வெளியீட்டு விழாவை நடத்த அவர் தேர்ந்தெடுத்த தேதியான மே 18 இசைப்பிரியாவின் நினைவு நாள். அரங்கம் சில நிமிடங்கள் எழுந்து நின்று அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமர, வந்ததிலிருந்தே இறுக்கமாக இருந்தார் நடிகர் நந்தா. அதற்கான காரணம் அவரது பேச்சிலிருந்தது.
என் தங்கையை நான் இழந்துட்டு நிக்கிறேன். அண்ணா அண்ணா என்று வார்த்தைக்கு வார்த்தை என்னிடம் அன்பு காட்டிய ஜீவன் அது என்றார் குரலுடைந்து. இசைப்பிரியாவை இவர் பார்த்திருக்கிறாரா? எப்போது? எங்கே? எல்லா கேள்விகளுக்கும் விடையளித்தார் நந்தா. நான் ஆணிவேர் படத்தில் நடிக்கும்போது எனக்கு அறிமுகமானவர்தான் இசைப்பிரியா. அந்த படத்தில் எங்களோடு அவரும் பணியாற்றினார். அண்ணா இதை சாப்பிடுங்க. அதை சாப்பிடுங்க என்று ஆசையாக பரிமாறியிருக்கிறார். அவர் இறந்த செய்தியை படித்ததும் அப்படியே அவரது படத்தில் கர்சீப்பை போட்டு மூடிவிட்டு கதறி அழுதேன் என்றார் நந்தா உருக்கமான குரலில்.
‘நான் கூட இசை வெளியீட்டு விழா இப்போது வேண்டாம்னு சொன்னேன். ஆனால் கணேசன் பிடிவாதமா இருந்தார். அதற்கான காரணம் இப்போதான் தெரியுது. இன்னைக்குதான் இசைப்பிரியாவின் நினைவுநாள்’ என்று கூறினார் இசைஞானி இளையராஜா. படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள் சுமார் மற்றும் வழக்கமானவைதான் என்றாலும், இளையராஜாவின் குரலில் ஒலித்த அந்த இன்னொரு பாடல் உயிரை கரைக்கும். (எண்பதுகளின் இளையராஜா இனி எப்போது நமக்கு கிடைப்பார்?)
எவ்வளவு சோகமான மூவ்மென்ட்டையும் கலகலப்பாக்கிவிட ஒருவரால் முடியும் என்றால் அது விவேக்கால் மட்டும்தான் முடியும். அவர் மைக்கை பிடித்து அதை கீழே வைக்கும் வரை அந்த அரங்கத்தில் இன்னொரு திரைப்படமே ஓடி முடிந்த திருப்தி. நாம் பீத்தோவன் காலத்திலேயோ மொசாட் காலத்திலேயோ வாழல. இசைஞானி இளையராஜா வாழும் காலத்தில் வாழுறோம். அதுதான் பெருமை. அவர் சிம்பொனிக்கு நோட்ஸ் எழுதுனது எங்க வச்சு தெரியுமா? அவர் ஆபிஸ்ல வச்சு இல்ல. ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் வச்சு இல்ல. பிளைட்ல பறந்துகிட்டு இருக்கும்போது ஓரு பேப்பரை எடுத்து அதில் அப்படியே எழுதிட்டார்.
பொதுவாக ஒரு இசையமைப்பாளர்னா, முதல்ல வாசிச்சு பார்ப்பார். அப்புறம் அதை ஒரு பேப்பரில் நோட்ஸா எழுதுவார். ஆனால் இளையராஜா அப்படியல்ல. மனசுல நினைச்சு அவர் நோட்ஸ் எழுதுனா, அந்த நோட்ஸ் அப்படியே அந்த காட்சிக்கு பொருத்தமான இசையோடு போய் பொருந்தி நிக்கும். அதனால்தான் அவரை நாங்கள்லாம் சித்தர்னு சொல்றோம். அவருடைய இசையை கார்ல கேட்கிறவங்க இருக்காங்க. பார்ல கேட்கிறவங்களும் இருக்காங்க. அவருக்கு குடி பழக்கம் இல்ல. ஆனால் சாயங்காலம் ஏழு மணிக்கு மேல ரொம்ப பேருக்கு அவர்தான் கம்பெனி கொடுக்கிறார் என்று சொல்ல, இளையராஜாவின் முகத்தில் ஒளிர்ந்த சிரிப்பை பார்க்க வேண்டுமே! அற்புதம்!