‘காசு போட்டு பேரு கெட்டு… ’ இளையராஜா பாட்டும், கவிழ்ந்த கப்பலும்!

மானம் ‘கப்பல்’ ஏறிவிடும் போலிருக்கிறது.

எல்லாம் கப்பல் பட விவகாரம்தான். படத்தில் இசைஞானி இளையராஜாவின் ‘ஊரு விட்டு ஊரு வந்து’ பாடலை அப்படியே பயன்படுத்தியிருந்தார்கள். ‘கப்பல்’ சக்சஸ் மீட்டில் இது குறித்து கேட்ட பத்திரிகையாளர்களிடம், ‘அந்த பாடலை நாங்க ரைட்ஸ் கொடுத்துதான் வாங்கியிருக்கிறோம்’ என்று பதிலளித்தார் இயக்குனர் கார்த்திக் ஜி கிரீஷ்.

தமிழ்சினிமாவில் பீரியட் பிலிம் எடுக்கிற இயக்குனர்கள் அத்தனை பேரும் இளையராஜாவின் ட்யூனையும் பாடலையும் ஆங்காங்கே உருவி பயன்படுத்துவது வாடிக்கையாகி விட்டது. போனா போகட்டும் என்று நினைத்தாரா, அல்லது அடுத்த தலைமுறை, நம்மால் பிழைச்சு போகட்டும் என்று நினைத்தாரா தெரியாது. இப்படி வரும் பல படங்களை மன்னித்து அருளிய இளையராஜா இந்த முறை பொங்கி எழுந்துவிட்டார். அதற்கு காரணம், அவரது முழு பாடலையும் இந்த படத்தில் பயன்படுத்தியதுதான். அது மட்டுமல்ல, கடந்த சில மாதங்களாகவே இளையராஜாவுக்கும், அவரது பாடல்களை விற்க ரைட்ஸ் வாங்கியிருக்கும் அகி மியூசிக் நிறுவனத்திற்கும் இடையே மனக்கசப்பு. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.

இந்த நேரத்தில் கப்பல் படத்தில் வரும் அந்த பாடலை பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை அவர்களுக்கு வழங்கியது அகி மியூசிக் நிறுவனம்தான். இது சரியானதா, இல்லையா? என்பதை சட்ட வல்லுனர்கள்தான் விளக்க வேண்டும். இதற்கிடையில்…

இதுதொடர்பாக இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் ஜெயராம், இயக்குநர் கார்த்திக் ஜி கிரீஷ், இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் ஆகியோருக்கு இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர் அனுப்பியுள்ள நோட்டீசில், “கப்பல் படத்தில் எனது கட்சிக்காரர் இளையராஜாவின் ஊரு விட்டு ஊரு வந்து பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளீர்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவின் இசை – பாடல்களை இனி அகி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனை செய்யக் கூடாது என நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றுள்ள நிலையில், அந்த அகி மியூசிக்கிடமிருந்து இந்தப் பாடலைப் பெற்று பயன்படுத்தியிருப்பது நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும்.

ஊருவிட்டு ஊருவந்து பாடலின் காப்பிரைட் உரிமை இளையராஜாவுக்கு மட்டுமே சொந்தமானது. எனவே இந்தப் பாடல் திரையிலும், ரேடியோ, டிவி, விளம்பரங்களிலும் இதுவரை பயன்படுத்தியதற்கான ராயல்டியை இளையராஜாவுக்கு வழங்க வேண்டும். தொடர்ந்து இந்தப் பாடலைப் பயன்படுத்துவதையும் நிறுத்தும் வகையில் படத்திலிருந்து அந்தக் காட்சியே தூக்கப்பட வேண்டும். தவறினால் எனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் காப்பி ரைட் சட்டப்படி கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளைத் தொடர முடிவு செய்துள்ளார்,” என்று கூறப்பட்டுள்ளது

நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார் தன் சிஷ்யனுக்காக ‘கப்பல்’ படத்தை வாங்கி ரிலீஸ் செய்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்.

Read previous post:
சேனல் ஹெட்டுக்கு அடி உதை! படம் வாங்குவதாக கூறி பின் வாங்கியதால் வந்த வினை?

பேரு வச்சியே, சோறு வச்சியா? நிலைமைதான் பல படங்களுக்கு! படத்தை எடுத்து முடித்தாலும் அவற்றை வாங்க ஆள் இல்லை. அப்படியே முட்டி மோதி ரிலீஸ் செய்தாலும், கணிசமாக...

Close