இனிமே இப்படிதான்- விமர்சனம்

இனி பாக்யராஜே கிளம்பி வந்து பழைய சுவருக்கு சுண்ணாம்பு அடிச்சா கூட, இப்படியொரு கலர்ஃபுல் டச் கிடைக்குமா? டவுட்டுதான்! ஆனால் பாக்யராஜ் பாணி கதையில் சந்தானத்தை மிக்ஸ் பண்ணி வர்ணமடித்து வரவேற்பு தோரணம் கட்டியிருக்கிறார்கள் அறிமுக இயக்குனர்கள் முருகா-னந்த்! கதை ரொம்ப சிம்பிள். ‘ஆம்பூர் பிரியாணி உளூந்தூர்பேட்டை சொறிநாய்க்கு கிடைக்கணும்னு விதியிருந்தா அதை யாரால மாற்ற முடியும்?’ என்கிற சந்தான சித்தாந்தம்தான் அது. ஓப்பனிங்கிலிருந்து எண்ட் வரைக்கும் ‘நான்-ஸ்டாப்’ சிரிப்பை வரவழைத்து அனுப்புகிறார்கள். இனி சந்தானம்? வெறும் காமெடியன் அல்ல, கோடம்பாக்கத்தின் ராஜ முரசில் மேலும் ஒரு டும்ம்ம்ம்ம்ம்…..!

ரெண்டு வூட்டு விருந்தாளி கெண்டையேறி செத்தானாம் என்றொரு பழமொழி உண்டு. படத்தில் சந்தானத்தின் நிலைமையும் அப்படிதான். விரும்பிய ஒருத்திக்காக, கட்டிக் கொள்ளப் போகும் ஒருத்தியை கழட்டிவிட தீர்மானிக்கிறார். ஆனால் சொல்ல வேண்டியதை சொல்லி முடிப்பதற்குள் வருங்கால பொண்டாட்டியும், நிகழ்கால காதலியும் கூட்டு போட்டுக் கொண்டு சந்தானத்தை தவிக்கவிட, இறுதியில் யாருக்கு சந்தானத்தின் தாலி? என்பதுதான் க்ளைமாக்ஸ். அக்கம் பக்கம் திரும்ப விடாமல், ஆசுவாசப்படுத்திக் கொள்ளக் கூட நேரம் தராமல் கொளுத்திப் போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் சந்தானமும், தம்பி ராமய்யாவும் அவர்தம் கோஷ்டிகளும். அப்படியொரு ‘டைட்டான’ திரைக்கதைக்கு சலாம் போட்டுவிட்டு இரண்டரை மணி நேரத்தை சிட்டாக கழிக்கிறான் ரசிகன்.

கெட்டி சூடத்தை முழுங்குனாதான் முட்டிவலி போகும்னா, அதுக்கும் தயார்ங்கிற நிலையில்தான் இருந்திருக்கிறார் சந்தானம். படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் அவரது உழைப்பு தெரிகிறது. ஆள் ஸ்லிம் ஆகியிருக்கிறார். டான்ஸ்சில் புரபஷனல் ஹீரோக்களே மூக்கு விடைக்கிற அளவுக்கு ஆடித்தள்ளியிருக்கிறார். ஃபைட்? அதை மட்டும் விடுவானேன் என்று அதையும் கூட ஒரு கால்(?) பார்த்திருக்கிறார். சந்தானமண்ணே…. இதே ரூட்டில் நீங்கள் படையெடுக்க உலகமஹா தமிழ்சினிமா ரசிகர்கள் சார்பாக அன்பு வேண்டுகோள்!

எந்நேரமும் சிரிப்புதானா, படத்தில் சென்ட்டிமென்ட் சீன் இல்லையா? ஏனில்லை? காதலி ஆஸ்னா கொடுக்கிற ட்ரீட்மென்ட்டில் கழண்டு போய்விடுகிறார் சந்தானம். அதுவும் தன் கண்ணெதிரிலேயே ரிஜிஸ்தர் ஆபிசில் நடக்கும் அந்த திருப்பத்திற்கு பிறகு கண்கலங்கவும் வைக்கிறார் நம்மை. அதுவும் ஒரு நொடிதான். அதற்கப்புறம் இந்த சென்ட்டிமென்ட்டெல்லாம் நம்ம பாணிக்கு ஒத்துவராதுடா சாமீய் என்று அடித்து பிரித்து மேய ஆரம்பித்துவிடுகிறார். சந்தானத்திடம் சிக்கிக் கொண்டு தம்பி ராமய்யா படுகிற பாடு நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிற ரகம். ‘கோல்டன் ஃபிஷ்ஷோட, கொறவ மீனை கோத்துட்டா மாதிரியிருக்கும்’ என்றெல்லாம் பேச சந்தானத்தால் மட்டுமே முடியும்!

தான் மட்டுமல்ல, தன்னை சுற்றியிருக்கிற எல்லாருமே ரசிகர்களை ‘நன்கு கவனிக்க’ வேண்டும் நினைத்திருக்கிறார் சந்தானம். ‘ஆறு மாசமா இப்படி பண்ணிக்கிட்டிருக்கேன்’ என்கிற அந்த தாடி வாலாவில் தொடங்கி, தலையை புளோர் டைல்ஸ் போல நறுக்கிக் கொண்டு திரியும் கூல் சுரேஷ் வரைக்கும் ஒருவர் விடாமல் சதாய்க்கிறார்கள். சிரித்து சிரித்து, நிறைஞ்ச வயிறே நிமிடத்தில் செரித்துவிடுகிறதேய்யா… அதிலும் தம்பிராமய்யாவுக்கு தரப்பட்டிருக்கும் கேரக்டரும், அவரது பர்பாமென்சும் ஒரு வாரத்துக்கு தாங்க வச்சு அடிக்கிற அளவுக்கு விசேஷம்! கோவிலில் அருள் வரவழைத்தாவது பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கும் தம்பி ராமய்யாவுக்கு அருள் வந்த பின்பு நடக்கும் துரதிருஷ்டம் இருக்கே… யம்மாடி! இவர் போதாது என்று வி.டி.வி கணேஷ் வேறு! ‘துருப்பிடிச்ச தொண்டையன்’ என்று இவருக்கு புதுப்பெயர் வைத்திருக்கிறார் சந்தானம். இவருக்கு பெஸ்ட் பிரண்டாக இருந்து கணேஷ் கொடுக்கிற ஐடியாக்களும் ரசிகர்களை குலுக்கிப் போடுகிறது.

ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் லொள்ளு மனோகர் பஞ்சராக்கிவிட்டு போகிறார் நம்மை. ‘பாரு… லேப் டாப்ல ஈமெயில் பார்க்குற மாதிரியே உட்கார்ந்திருக்கிறான்’ என்று சந்தானம் கலாய்ப்பதெல்லாம் கற்பனைக்கும் எட்டாத களேபரம்.

சீனிப்பட்டாசை கொளுத்திப் போட்ட மாதிரி என்னமாய் நடித்திருக்கிறார் ஆஸ்னா சவேரி. கையில் கத்தியை வைத்துக் கொண்டு சந்தானத்திடம் விசாரணை மேற்கொள்ளும் அந்த குட்டிப்பிசாசு செய்கிற அதிரடிகள் உலுக்கிப் போடுகிறது மனுஷனை. இந்த கேரக்டருக்கு இவர்தான் பொருத்தம்! இவரும், இவருடன் தோழிகளாக வரும் குட்டிப்பட்டாசுகளும் கூட அழகு!

மற்றொரு ஹீரோயின் அகிலா கிஷோருக்கு அதிகம் வேலையில்லை. சமயங்களில் சந்தானத்தை விட உயரமாக அவர் வந்து நிற்கும்போது ஜோடிப்பொருத்தம் சோக்காயில்லையே என்றுதான் தோன்றுகிறது. ரசிகன் நினைத்தது இயக்குனருக்கும் கேட்டிருக்க வேண்டும். திருப்பம்… ‘மனசுல யாரையாவது நினைச்சுகிட்டாவது என்னை கட்டிப்புடி மாமா…’ என்று கெஞ்சுகிற வித்யூராமன் கலங்க வைக்கிறார்.

சந்தோஷ் தயாநிதியின் இசையில் எல்லா பாடல்களும் இனிமை. பின்னணி இசையிலும் கூட கவனிக்க வைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவில் வி.டிவி. கணேஷ் கூட கருப்பு லட்டாக மின்னுகிறார் என்றால் அவரது தொழில் நேர்த்தியை புரிந்து கொள்ள வேண்டியதுதான். இழுவையான காட்சிகள் எதுவுமே இல்லை என்பதைவிட சிறந்த ஆறுதல் என்னவாக இருக்க முடியும்? நன்றி எடிட்டர் ரூபன்.

மந்தரத்துல மாங்காயை வரவழைப்பது கூட ஈஸி. தந்தரத்துல தஞ்சாவூர் பெரிய கோவிலையை வரவழைத்திருக்கிறார் சந்தானம். உங்க ரூட்டை ‘இனிமே இப்படிதான்’னு தைரியமா கன்ட்டினியூ பண்ணுங்க புரோ!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நமீதாவாகிறார் அனுஷ்கா? கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்

‘மிஸ்டர் பிரமாண்டம்’ என்பார்கள் டைரக்டர் ஷங்கரை. தான் எடுக்கிற படங்களால் அந்த நற்பெயர் அவருக்கு. ஆனால் ஒரு நடிகையாக இருந்தும், உணவுக்கட்டுப்பாடுகள் இருந்தும், உடற்பயிற்சிகள் மேற்கொண்டும், நாளுக்கு...

Close