பல்ஸ் பார்க்கிறாரா ரஜினி? உற்றுப் பார்க்குது உளவுத்துறை!

டிவியை திறந்தால், ‘அதிமுக, திமுக வுக்கு மாற்று தேடுகிறார்களா மக்கள்?’ என்கிற விவாதம்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. பால் வடியும் முகத்தோடு யாரை பார்த்தாலும், “அண்ணே… சி.எம் சீட்டுல நீங்க வந்து உட்கார்ந்துட்டா தேவலாம்” என்று கெஞ்ச ஆரம்பித்துவிடுகிறார்கள் இளைஞர்கள். “சகாயம் ஐஏஎஸ் மட்டும் நாளைக்கு ம்… னு ஒரு வார்த்தை சொல்லட்டும்… நாளைன்னைக்கு அவரு பின்னால தமிழ்நாடே நிக்கும்” என்று இமேஜ் கிளப்புது இன்னொரு கூட்டம். பேஸ்புக், ட்விட்டர், மற்றும் இணையதளங்கள் இந்த தேர்தலில் ஆற்றப் போகும் பங்கு, சத்தியமாக பழம் தின்று கொட்டை போட்ட கட்சிகளுக்கு பீதியை கிளப்புவது மட்டும் நிச்சயம். இந்த திடீர் இமேஜ்களையெல்லாம் ஒரு அறிக்கையோ, அல்லது ஒரு இலவசமோ சரி செய்துவிடும் என்ற நம்பிக்கை ஆளுங்கட்சிக்கும், அதற்கு சமமான எதிர்க்கட்சிகளுக்கும் இருந்தாலும் கூட, மக்களின் புதிய தேடல் என்கிற விருப்பம் அவ்வளவு லேசில் மறையப் போவது இல்லை.

இந்த நேரத்தில்தான் மக்களிடம் ‘பல்ஸ்’ பார்க்க விரும்பினாராம் ரஜினி. சில தினங்களுக்கு முன் வேலூரில் நடந்த ரஜினி ரசிகர்களின் ‘மலரட்டும் மனித நேயம்’ கூட்டம், ரஜினியின் பரிபூரண ஆசிர்வாதத்தோடு மட்டுமல்ல, அவரே விரும்பி செய்த விஷயம் என்கிறார்கள் சில திரையுலக பிரமுகர்கள். அதற்கேற்றார் போல, பெரிய விளம்பரங்கள் இல்லாமலும், பெரிய மெனக்கெடல்கள் இல்லாமலும் இருந்த நிலையில் கூட சுமார் ஒன்றரை லட்சம் பேர் திரண்டு வந்தது பல அரசியல் கட்சிகளை திகைக்க வைத்திருக்கிறது. அது வெறும் கூட்டமல்ல, மாநாடு என்கிற அளவுக்கு திரும்புகிற இடத்திலெல்லாம் ரசிகர்கள் கூட்டம்.

இந்த கூட்டத்தில் யார் யார் என்னென்ன பேசினார்கள் என்பதையெல்லாம் உளவுத்துறை நோட் போட்டு மேலிடத்திற்கு அனுப்பியிருக்கிறதாம். அதுமட்டுமல்ல, அந்த கூட்டத்தின் இஞ்ச் பை இஞ்ச் தகவல்கள் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே ரஜினி காதுக்கு போனதாகவும் கூறுகிறார்கள்.

எல்லாவற்றையும் விட பெரிய மேட்டர் என்ன தெரியுமா? கூட்டம் நடைபெறவிருக்கும் நாள் வரைக்கும் முறையான போலீஸ் பர்மிஷன் வரவில்லையாம். மேலிடம் வரைக்கும் பேசிய அதிகாரிகள் கடைசி நேரத்தில்தான் அந்த அனுமதியை வழங்கியிருக்கிறார்கள். தேர்தல் நேரம் அல்லவா? நிழலாக இருந்தாலும், ஸ்கேனர் வைத்து ஆராய்கிற கட்டத்தில்தான் இருக்கிறது ஒவ்வொரு கட்சியும்.

ரஜினி ரசிகர்களால் நடத்தப்பட்ட இந்த கூட்டம் இனிவரும் காலங்களில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ? காத்திருப்போம்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Cinematographer P.C.Sreeram 60th Birthday celebration

Close