இறைவி – விமர்சனம்

பெண்ணெனப்படுவது பேரின்பம் எனவும், பெண்ணெனப்படுவது பெருந்துன்பம் எனவும், இருவேறு கருத்துக்களால் பிளவு பட்டுக்கிடக்கிறது உலகம். தாய், தாரம், மகள் என்று ஆண்களின் வாழ்வின் அசைக்க முடியாத ஆதாரமாக இருக்கும் பெண்ணை, அதே ஆண் சமூகம் எப்படியெல்லாம் கவலை கொள்ள வைக்கிறது? அட… சே…த்தூ… என்று காறி உமிழ்ந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். (எச்சில் பட்ட ஆண்களெல்லாம் துடைப்பதும் குளிப்பதும் அவரவர் விருப்பம்) ஜனங்க இதைதான் ரசிப்பாங்க என்று ஸோ கால்டு படைப்பாளிகள் ஒருபக்கம் விருந்து வைத்துக் கொண்டிருக்க, இதையும்தான் ரசிப்பாங்க என்று இவர் வேறொரு பக்கம் இலை போடுகிறார். இதை துணிச்சல் என்பதா? அசட்டு துணிச்சல் என்பதா? (ஒருவாரம் பொறுத்திருந்தா உண்மை தெரிஞ்சுட்டு போவுது?)

எஸ்.ஜே.சூர்யா, படத்திலும் ஒரு சினிமா டைரக்டராகவே வருகிறார். இவரது தம்பி பாபி சிம்ஹா. இவரும் விஜய் சேதுபதியும் பிரண்ட்ஸ். தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் இவரது படம் ரிலீஸ் செய்யப்படாமல் முடக்கப்படுகிறது. அதனால் முழு நேர குடிகாரர் ஆகிவிடுகிறார் எஸ்.ஜே.சூ. படத்தை ரிலீஸ் செய்யக் கேட்டு சண்டை போடும் இவரை கொலை செய்யவும் துணிகிறார் அந்த தயாரிப்பாளர். கோபம் தலைக்கேறும் விஜய் சேதுபதி, அந்த தயாரிப்பாளரை ஸ்பாட்டிலேயே போட்டுத்தள்ள, இளம் மனைவி அஞ்சலியை நிர்கதியாக விட்டுவிட்டு சிறைக்குப் போகிறார் அவர். நடுவில் விஜய்சேதுபதிக்கு ஒரு இளம் விதவையுடன் கள்ளக்காதல். (பெண் என்பவள், விதவையானாலும் செக்ஸ்சுக்காக இன்னொருவனுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்கிறது இந்த எபிசோட்) எஸ்.ஜே.சூர்யாவுக்கும் மனைவி கமலினி முகர்ஜிக்கும் ஏற்படும் ஓயா சண்டையால், விவகாரத்து வரை போகிறது அந்த ஜோடி. குடும்பத்தின் மூத்தவரான ராதாரவியும், மனைவியிடம் நடந்து கொள்ளும் விதத்தால் அந்தம்மா வடிவுக்கரசியும் படுத்த படுக்கையில்!

இப்படி எல்லாவகையிலும் ஆண்களால் அவஸ்தைப்படும் பெண், என்ன செய்ய வேண்டும்? ஒரு சிறுகதையின் கடைசி வரி போல படத்தை ஃபினிஷ் பண்ணுகிறார் கார்த்திக் சுப்புராஜ். “அடேய்… ஆணென்ற திமிரில் அலையும் பொட்டைப்பசங்களா? இறைவிகளை போற்றுங்கடா” என்பதுதான் அவரது திட்டவட்ட கையெழுத்து!

குறும்படங்களின் மூலம் வண்ணத்திரைக்குள் என்ட்ரி கொடுத்த கார்த்திக் சுப்புராஜ், கிட்டதட்ட இரண்டேமுக்கால் மணி நேரம் நீள நீள ஒரு படத்தை எடுத்திருப்பதே முரண்தான்! அவரது முந்தைய ஜிகிர்தண்டாவின் நீளமும் கிட்டதட்ட இதுவே. முதலில் சுருங்க சொல்லி விளங்க வைக்கிற வித்தையை பழகுங்க சுப்பு! முடியல…

எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, விஜய் சேதுபதி என மூன்று ஹீரோக்கள் இருந்தாலும், படம் முழுக்க நீக்கமற நிறைந்திருப்பது எஸ்.ஜே.சூர்யாதான். பிரமாதப்படுத்தியிருக்கிறார் அவரும். மனைவி குழந்தை மீது தீரா அன்பு கொண்ட ஒரு குடிகாரனின் அத்தனை சேட்டைகளையும், தொல்லைகளையும் அப்படியே திரையில் இறக்கி வைத்திருக்கிறது அவரது தேர்ந்த நடிப்பு. அடிக்கடி இளையராஜா பாடலை ரசிப்பதுடன், ராஜா ராஜாதாண்டா என்று கமென்ட் அடிக்கும்போது, “போன படத்திற்கான பிராயசித்தமா வாத்யாரே?” என்று கேட்க வைக்கிறார்.

தடித்த கண்ணாடி, அடர்ந்த தாடி, அதையும் மீறிய யதார்த்த நடிப்பு என்று மிரள வைக்கிறார் விஜய்சேதுபதி. குற்றவுணர்ச்சியுடன் அவர் அஞ்சலியை அணுகுவதும், அங்கிள் என்று அழைக்கும் தன் குழந்தையை வேதனையோடு கொஞ்சுவதுமாக அள்ளுகிறது அவர் நடிப்பு. ‘இந்தாளு ஏன்யா ட்ரெயினை விட்டு எறங்குறான்?’ என்று வாய்விட்டு ஏச வைக்கிறது அந்த ப்ரீ கிளைமாக்ஸ்.

பாபி சிம்ஹாவை டிபிக்கல் வில்லனாகவே சித்தரித்திருக்கிறார் டைரக்டர். திடீர் காதலுக்காக நட்பை காவு கொடுக்க துணியும் இதுபோன்ற கேரக்டர்களுக்கு வர வேண்டிய முடிவுதான் அது. சரியா சொன்னீங்க கார்த்திக் சுப்புராஜ்.

முதல் காட்சியில் பள்ளிக்கூட யூனிபார்மில் கையை அப்படியே வெளியில் நீட்டி மழையில் நனையும் அதே அஞ்சலி, இறுதிக்காட்சியில் அதே சுதந்திரத்துடன் மழையில் நனைவதோடு படம் முடிய…. “அஞ்சலி என்ற அல்டிமேட் நடிகையை என்னாத்துக்கு கவர்ச்சி பொம்மையாகக் காட்டி அவரது திறமையை வீணடிச்சானுங்க” என்ற கோபமே வந்துவிடுகிறது அவரை வைத்து (கவர்ச்சிப்)படம் எடுத்த முந்தைய இயக்குனர்கள் மீது.

இனிக்க இனிக்க அல்வா செய்து, அதை திறக்கவே முடியாத டிபன் பாக்சில் அடைத்த மாதிரி என்னவோ ஒன்றால் அமுக்கி வைத்த உணர்வை தருகிறது செல்வகுமார் விஜயனின் ஒளிப்பதிவு. ஆனாலும் படம் நெடுகிலும் ஆங்காங்கே வந்துவிட்டு போகும் அந்த மழைக்காட்சி அழகு!

சந்தோஷ் நாராயணனே பாடும் அந்த குத்து பாடலின் ட்யூனும் குரலும் நடன அமைப்பும் அழகு! பின்னணி இசையில்தான் வசனங்களை கேட்க முடியாதளவுக்கு சங்கு ஊதுகிறார்.

ஒரு படம் ஆரம்பிக்கிற இடத்தை தெரிந்து வைத்திருந்தாலும், முடிக்கிற இடத்தில் குழம்பியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ‘இந்த இடத்தில் படம் முடிந்திருக்கலாம்…’ என்று ரசிகன் நினைத்திருக்க, அதை கொஞ்சம் தள்ளிப்போட்டால் என்னாகும்? கொலை விழுகிறது!

படத்தில் மட்டுமல்ல…. படத்திற்கே!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எந்த தியேட்டர்ல என்ன படம் ஓடுது…? (03-06-2016)

Close