இருக்கு ஆனா இல்ல -விமர்சனம்

சட்டியை அரைவேக்காட்டில் இறக்கியிருக்கிறார்கள். ஆனாலும் கூட ‘ஆவி’ பறக்கிறது. ஏனென்றால் கதையே ‘ஆவி’ சம்பந்தப்பட்டதுதானய்யா!

பாரில் தண்ணியடித்துவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் ஆக்சிடென்ட்! தன் கண்ணெதிரிலேயே ஒருத்தி செத்துப் போகிறாள். நடுநடுக்கத்தோடு அறைக்கு வருகிற ஹீரோவின் கண்களில் அதே பெண் தென்பட, அப்புறமென்ன…? விடிகிற வரைக்கும் ‘அவ்வ்வ்…’தான்! அதற்கப்புறமும் வருகிறாள் அவள். அலறுகிறான் அவன்.

அவளை பார்க்கும் போதெல்லாம் ஹீரோ தொடர்ந்து அலற, ஒரு கட்டத்தில் ‘ஏய், கத்துறத நிறுத்து’ என்று அதட்டுகிறது ஆவி. அவன் கண்களுக்கு மட்டுமே தெரிகிற அவள் பேசுவதும் தெளிவாக கேட்கிறது அவனுக்கு. மெல்ல பேச ஆரம்பிக்கிறான் அவனும். நட்பாகிறார்கள் இருவரும். ‘நீ யார்? ஏன் என்னை துரத்துறே?’ என்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல தெரியாமல் தவிக்கிறது ஆவி. ‘நான் யாருன்னே தெரியல. என்னை யாருன்னு கண்டு பிடிச்சு கொடேன்’ என்று கெஞ்சுகிறது. கண்டுபிடிக்க கிளம்புகிறான் ஹீரோ. அவளுக்காக அவன் செய்யும் வேலைகள்தான் மிச்ச சொச்ச படம்.

சற்றே உசத்தலான மேக்கப். அளவான உயரம், ஆளை இழுக்கும் கண்கள், மிதப்பான பார்வை. 34-24-34 சைஸ்! அது போதாதா? இத்தனை காலமும் பேய் என்ற பெயரில் காஞ்சனாக்களை மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களும் சொக்கிப் போகிறார்கள். ஹீரோவுக்கும் மனசுக்குள் லேசாக எட்டிப்பார்க்கிறது காதல். அதை அவளிடம் சொல்லாவிட்டாலும், நண்பனிடம் சொல்ல, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அவள் கேட்காமல் இருப்பாளா? ஆவிக்கும் அந்த பாசக்கார பாவிக்கும் நடுவே ஒரு டூயட்டும் வைத்து தமிழ்சினிமாவுக்கு ஹாலிவுட் கலரில் டிஸ்டெம்பர் அடிக்கிறார் அறிமுக இயக்குனர் கே.எம்.சரவணன். யார் கண்டது? இந்த படம் எந்த ஆங்கில படத்தின் தழுவலோ?

ஹீரோவாக விவந்த் என்ற இளைஞரும், ஆவியாக ஈடன் என்ற ஸ்மார்ட் கட்டையும் நடித்திருக்கிறார்கள். கொத்து பரோட்டா மாஸ்டரை ஹேர் டிரஸ்சர் ஆக்கியதை போல ஒருவித விநோதமான ஹேர் ஸ்டைலில் வருகிறார் விவந்த். நல்லவேளையாக ‘ஆவி’யின் அட்வைஸ் பேரில், சில ரீல்களுக்கு பிறகு அந்த கெட்டப்பை மாற்றி நார்மல் நிலைக்கு அவர் வருவதால் தப்பித்தோம். அதுவரை ஸ்கிரீனை அரைக்கண்ணுடனேயே நோக்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு கோரம்.

இவரும் ஆவி ஈடனும் ஒரு உடன்படிக்கைக்கு வந்து புலனாய தொடங்கியதும் கதை மீட்டரில் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. நடுநடுவே சென்டிமென்ட் பஞ்ச் வேறு. இதய பலகீனமானவர்கள் கலங்கிவிடக் கூடும். விபத்தில் இறந்த மகளுக்கு 16 ம் நாள் காரியம் செய்ய கிளம்புகிறார் அம்மா. அப்படி நடந்துவிட்டால், ஆவி மேலோகம் போக வேண்டியதுதான். அலறி அடித்துக் கொண்டு அதை தடுக்க ஓடிவருகிறார் விவந்த். ஆனால்? நல்லவேளையாக ஈடன் ஆவி சாந்தியாகவில்லை என்பதே ஆறுதலாக இருக்கிறது.

விவந்துக்கு நண்பராக நடித்திருக்கிறார் ஆதித்யா சேனல் ஆதவன். சில இடங்களில் மட்டுமே சிரிப்பு வருகிறது. சிரித்த சிரிப்புக்கு வட்டியும் முதலுமாக முதலிலேயே ‘போட்டு தள்ளி’விடுகிறார். நாகேஷ் பாலையாவை காப்பியடித்து சந்திரமுகியில் சீன் வைத்தால், ரஜினி வடிவேலுவை காப்பியடித்து இவரும் விவந்தும் சீன் போடுகிறார்கள். திம்சுகட்டைய பார்த்து கொழுக்கட்டை வெயிட் போட்டதை போல இருக்கிறது!

ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு மருத்துவர், ஆராய்ச்சியாளர். அதற்காக ரெங்கநாதன் தெருவில் பிச்சையெடுப்பவர் போல இருக்க வேண்டுமா என்ன? அவர் வந்து சீரியஸாக பேசினாலும், டரியல் ஆகிறார்கள் ரசிகர்கள். நல்லவேளையாக வெறும் அட்வைஸ் ஆறுமுகமாக இல்லாமல், மருத்துவமனைக்குள் போய், கோமாவிலிருக்கும் காஞ்சனாவை காப்பாற்ற உதவுகிறார். இவரை ‘செம பீஸ்’ என்று வேறொரு டாக்டர் போனில் பேசுவதுதான் சிரிப்போ சிரிப்பு.

இன்றைய காஸ்ட்லியான மருத்துவமனைகள் சிலவற்றின் கண்றாவி முகத்தை ‘போல்டாக’ சொன்ன இயக்குனருக்கு இந்த நேரத்தில் ஒரு சபாஷ்.

காவ்யாவை காப்பாற்றிய தங்கை திவ்யாவின் ஆவி மெல்ல மெல்ல கரைந்து காணாமல் போகும்போது, இன்னும் மெனக்கெட்டிருந்தால் இந்த காட்சியில் ரசிகர்களை அழ வைத்திருக்கலாமே என்றே தோன்றுகிறது.

இசையமைப்பாளர் ஷமீர் தன் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார். ஆவியுலக படங்களுக்கு இருட்டே முதலீடு. அந்த இருட்டிலும் தன் இருப்பை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் கிரிஸ் ஏ. சந்தர்.

ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மேஜிக் போட்டு மூடிவிடுகிறது புதுவிதமான கதையமைப்பு. எந்த மொழியிலிருந்து களவாடப்பட்டிருந்தாலும், அல்லது சுயமாக சிந்திக்கப்பட்டிருந்தாலும்….

திவ்யா என்ற பரிசுத்த ‘ஆவி’யின் பெயராலே… ‘பாராட்டிவிட்டுதான் போங்களேன்ப்பா!’

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. Old Monkey says

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தனக்கென ஒரு ‘பாணி’ அது தண்டபாணி!

அதற்குள்ளாகவா போய் சேர வேண்டும் தண்டபாணி? தமிழ்சினிமா விமர்சகர்கள் தனக்கென ஒரு பாணி என்று அடிக்கடி எழுதுவதுண்டு. அந்த ‘பாணி’ தண்டபாணி என்பதை காதல் படத்தில் அறிமுகமாகும்...

Close