பைக் ரேஸ்… வேகம்.. உயிர்பலி… ஏற்கனவே ஏழரை! எட்டரையை கூட்டுமா இரும்புக்குதிரை?
‘விர்க்க்க்க்க்… ’ இடது காதில் புகுந்த சப்தம் வலது காதுக்கு சென்றடைவதற்குள், அந்த தெரு முனையை கடந்துவிடுகிற நடு ரோட்டு பைக் ரேஸ் ‘கொலகார பாவிகளை’ அன்றாடம் கண்டு அதிர்ச்சியாகிக் கொண்டேயிருக்கிறார் திருவாளர் பொதுஜனம். இந்த நேரத்தில் பைக் ரேஸ் சம்பந்தமாக ஒரு படம், அதுவும் குதிரை மாதிரி ஒரு பைக்கை வைத்துக் கொண்டு உருவாக்கினால், யூத்(தவர்கள்) மனசு என்ன குதி குதிக்கும். மூத்தவர்கள் மனசுதான் ‘லபோ திபோ’!
ஆனால் ‘துளி கூட கவலைப்படாதீங்க, நான் எடுத்திருக்கறது சாலை விதிகளை கடைபிடிக்க சொல்கிற பக்குவமான படம்தான்’ என்று பேச ஆரம்பிக்கிறார் யுவராஜ் போஸ். ‘இரும்புக் குதிரை’ படத்தின் இயக்குனர்.
அதர்வாவிடம் இந்த கதையை சொல்லும் போதே ‘ஹை’ என்று குதிக்க ஆரம்பித்துவிட்டார். சாதாரண பைக் என்றால் பயிற்சி தேவையில்லை. இது அசாதாரணமான பைக். அதற்காக ட்ரெய்னிங் எடுத்துக் கொண்டுதான் ஷுட்டிங்குக்கே வந்தார். சாலை விதிகளை மதிக்காமல் ஒரு நிமிஷம் செய்கிற தவறு, ஹீரோவின் வாழ்வில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துது என்பதுதான் இந்த படத்தின் கதை. இன்னும் சொல்லப் போனா அந்த சம்பவத்திற்கு முன்னாலும் பின்னாலும் நடப்பதுதான் கதையின் முக்கியமான ஏரியா. அவர் பைக் ஓட்டுற எல்லா காட்சிகளிலும் கட்டாயம் ஹெல்மெட் போட்டிருப்பார் . சத்தியமாக இளைஞர்களை கெடுக்கிற படம் இல்லை’ என்கிறார் யுவராஜ். (நல்லவேளை… பொதுநல வழக்கு புண்ணியவான்கள் பிடியிலேர்ந்து தப்பிச்சீங்க)
குதிரை இருக்கு, கொள்ளு வேணாமா? ராய் லட்சுமியும், ப்ரியா ஆனந்தும் இருக்கிறார்கள். அதர்வாவுக்கும் ப்ரியா ஆனந்துக்கும் ஸ்கிரீனுக்கு பின்னால் லவ் ஓடிக் கொண்டிருப்பதாக நாடெங்கிலும் கிசுகிசுக்கள் பறந்து கொண்டிருக்க, பச்சபுள்ள போல மைக்கை பிடித்தார் ப்ரியா. மருந்துக்கு கூட அதர்வா பற்றி சிலாகிக்கவில்லை. (உஷாரா இருக்காராமா…) ‘கொஞ்ச நாளைக்கு முன்புதான் அரிமா நம்பி வந்திச்சு. இப்படி என்னோட படங்கள் தொடர்ந்து வர்றது மகிழ்ச்சி’ என்றார்.
பைக்கை பின்னணியாக கொண்டு உருவாகிற கதை என்றால், அது பொல்லாதவன் படத்தை நினைவுபடுத்தாமல் விடாது இல்லையா? அந்த படத்திற்கும் நான்தான் மியூசிக். இந்த படத்திற்கும் நான்தான் மியூசிக். ஆனால் அந்த கதைக்கும் இந்த கதைக்கும் துளி சம்பந்தமில்லை என்று உத்தரவாதம் கொடுத்தார் ஜி.வி.பிரகாஷ்.
பிரபல பிளாக் எழுத்தாளரான நர்சீம் இந்த படத்திற்கு வசனங்கள் எழுதியிருக்கிறார். ஏழாம் அறிவு பட வில்லன் டாங்லிதான் இந்த படத்திலும் வில்லன். பாடல்கள் எழுதியிருக்கிற மரை ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டார். ‘இந்த படத்தின் கதையை எங்கிட்ட யுவராஜ் சொன்ன மாதிரி எடுத்திருந்தா அது இங்கிலீஷ் படம் மாதிரியே இருக்கும்’ என்று! இங்கிலீஷ் படம் மாதிரி இருந்தா தப்பில்லே. இங்கிலீஷ் படத்துலேர்ந்து ‘அடிச்சிருந்தாதான் ’ தப்போ தப்பு!