இருவர் ஒன்றானால் / விமர்சனம்

‘காதல் போயின் சாதல் என்பதெல்லாம் சுத்த ஊத்தல் சமாச்சாரம்’ என்பதை இவ்வளவு லைவ்வாகவும் ஜாலியாகவும் ஒரு படம் சொல்லிவிட முடியுமா? புதுமுகங்களை வைத்துக் கொண்டு புரட்டி புரட்டி அடித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அன்பு ஜி. (வருங்கால கோடம்பாக்கம் உங்ககிட்ட நிறைய அன்பு செலுத்தும் ஜி)

கல்லூரிங்கிறாய்ங்க… காதல்ங்கிறாய்ங்க… ஒருகட்டத்துல போலீஸ் கமிஷனரோட சட்டையை பிடிச்சு, ‘ஸ்டூடன்ஸ் பவர் என்னன்னு தெரியுமா உனக்கு?’ ன்னு ஏதாவதொரு சுள்ளான் கேட்டுத் தொலைத்து வயித்துல உபாதை ஏற்படுத்துமோன்னு அச்சம் விலகாம உட்கார்ந்திருந்தா, அட….. (இந்த இடத்தில் ஏராளமான ஆச்சர்யக்குறிகளை போட்டுக் கொள்ளவும்) அந்தகாலத்து செல்வராகவன் படம் பார்த்த மாதிரி என்னாவொரு நடைப்பா திரைக்கதையில்?

இந்த கதைக்காகவோ, அது செல்லும் பாதைக்காகவோ அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை டைரக்டர். அப்படியே அது ஓடுகிறது. அதன் பின்னால் இவர் ஓடுகிறார். ஆமாம்… அப்படியென்ன பொல்லாத கதை?

கல்லூரியில் படிக்கும் ஹீரோ பி.ஆர்.பிரபு தன்னுடன் படிக்கும் சில மாணவிகளால் காதலிக்கப்படுகிறார். அவர்கள் தயங்கி தயங்கி இவரிடம் வந்து ஐ லவ் யூ சொல்ல, ‘ம்ஹூம்… உன்னை என் பிரண்டாதான் நினைச்சேன். அப்படியொரு நினைப்பு என் மனசுல இல்ல. வரவும் வராது’ என்று விலகிக் கொள்கிறார் அவர். ஆனால் சம்பந்தப்பட்ட கிளிகள், ‘நீயில்லேன்னா எனக்கு வாழ்க்கையே இல்ல. எத்தனை வருஷமானாலும் உனக்காக காத்திருப்பேன்’ என்கிறார்கள். பிளாஷ்பேக்கை கத்திரிக்கோலால் நறுக்கி விட்டு நிகழ் காலத்துக்கு வந்தால், அதே பெண்கள் வேறொரு பையனுடன் லவ்வாகி, இவரிடமும் அதே காம்பவுண்டில் உட்கார்ந்து கொண்டு, ஹாய் நண்பா என்று பழகிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி தன்னை தேடி வந்த லட்டுகளையெல்லாம் வேணாம் வேணாம் என்று ஒதுக்கிவிட்டு போன பிரபு, ஒரே ஒரு வதங்கிப் போன மல்லிகைப்பூ விடம் வழுக்கி விழுந்து காதலாகி லோ லோவென்று பின்னாலேயே அலைகிறார்.

இவர் எப்படி தன்னை தேடி வந்த எல்லாரையும் ஜஸ்ட் லைக் தட் வேணாம்னு சொன்னாரோ? அதே வேகத்தில்தான் அந்த வாடிப்போன பேஸ்கட்டும் இவரை போடா என்கிறது. அதற்காக வருத்தப்படாமல் கடும் முயற்சி எடுக்கிறார் பிரபு. கதாநாயகி கிருத்திகா இவரை கண்டு மனமிரங்கினாரா? இருவரும் சேர்ந்தார்களா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

சின்ன வயசு விஜய் ஆன்ட்டனி மாதிரி இருக்கிறார் பிரபு. நடிப்பு? சும்மா சொல்லக்கூடாது. அவரைவிடவும் பல மடங்கு நன்றாகவே வருகிறது. இந்த காலத்து பசங்க லவ்வை எவ்வளவு சீரியஸ் ஆக எடுத்துக்கிறாங்க என்பதை இவரது கேரக்டர் புட்டு புட்டு வைக்கிறது. நாள் கணக்காக பின்னாலேயே வந்து தொலைக்கிறானே என்ற எரிச்சலில் ஒரு நாள் நேரம் ஒதுக்கி அட்வைஸ் பண்ணுகிறார் கிருத்திகா. எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பழையபடியே இவர் வாலாட்ட…. ‘நீ ஒரு நாய்டா’ என்று கோபத்தில் எழுந்து போகிறார் அவர். கடைசியில் காதல் வந்த பின், ‘ஏன்… உன்னை யாரும் இதுவரைக்கும் புரப்போஸ் பண்ணலையா?’ என்று கிருத்திகா கேட்க, ‘நிறைய பேர் பண்ணியிருக்காங்க. அவங்கள்லாம் உன்னைவிட அழகாயிருந்தாங்க’ என்று பிரபு சொல்லும்போது, காதல் அழகினால் வருவதல்ல என்பது மட்டும் புரிந்த மாதிரியிருக்கிறது.

வசனங்களில் குறும்புகளை வைத்து தேய்த்த மாதிரி நிமிஷத்துக்கு நிமிஷம் சிரிக்க வைக்கிறார் இயக்குனர் அன்புஜி. யேய்… அவனை பார்க்க என்ன டிரஸ்டி போட்டுட்டு போறது? தோழியிடம் கிருத்திகா கேட்க, ‘டிரஸ்சே போடாம போ. அதான் புடிக்கும்’ என்கிறாள் அவள் அசால்ட்டாக! ‘அம்மா இவன் ஒரு பிச்சைக்காரியை காதலிக்கிறான்’ என்று தங்கை வெறுப்பில் போட்டுக் கொடுக்க, பிரபு அம்மா அப்பாவியாக, ‘ஏண்டா… அவ என்ன பிச்சைக்காரியா?’ என்று அப்பாவியாக கேட்பது ஆஹா….!

‘விரும்பி வந்தால் விலகிப் போகும். விலகிப்போனால் விரும்பி வரும்’ என்கிற காதலின் தத்துவத்தையே க்ளைமாக்ஸ் முடிச்சுக்கு பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். அந்த பகுதி சற்றே இழுவையாக இருந்தாலும், அவர்கள் மீண்டும் ஒன்று சேரும்போது, இளையராஜா ஆயிரம் வயலின்கள் கொண்டு வாசித்ததை போல நிறைவு தருகிறது.

இளையராஜா, வயலின் என்றதுதான் நினைவுக்கு வருகிறது. இந்த படத்திற்கும் ஒரு மியூசிக் டைரக்டர் இருக்கிறார். ஆனால் ஒரு பாட்டும் கேட்கிற மாதிரியில்லை.

பசங்களை புரிந்து கொள்ள பெற்றவர்களும், பெற்றவர்களின் சைக்காலஜியை புரிந்து கொள்ள பசங்களும் தனித்தனியாக போக வேண்டிய படம்!

ஹைவேஸ் சாலையில் காதை பிளக்கும் சப்தத்திற்கு நடுவில் இதுபோன்ற ‘லைட் வெயிட்’ வாகனங்களை பார்த்து எவ்வளவு நாளாச்சு? ஒருமுறைதான் டிராவல் அடிச்சு பாருங்களேன்…

-ஆர்.எஸ்.அந்தணன்

பின் குறிப்பு- இந்த படத்தில் காதலன் காதலியாக நடித்த பிரபு, கிருத்திகா இருவரும் நிஜமாகவே காதல் வயப்பட்டு திருமணமும் செய்து கொண்டார்கள். அவர்கள் திருமணம் செய்து கொண்ட சில மாதங்களுக்கு பின்புதான் இந்த படம் வெளியாகியும் இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மாஸ் என்கிற மாசிலாமணி- விமர்சனம்

சாமியார், சடாமுடி, சாம்பிராணிப் புகை, எதுமில்லாத ஆவிகள் படம்! ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்குரிய அத்தனை பலாபல திருப்பங்களுடன் அமைந்திருக்கும் படத்தில் ஆவியுலகத்தின் சென்ட்மென்ட்டையும் நுழைத்த விதத்தில் சமார்த்திய...

Close