அப்படி செஞ்சது தப்பு கார்த்திக் சுப்புராஜ்!

கற்று கொடுத்த பள்ளிக்கூடத்தின் காம்பவுன்ட் சுவரில் ஒண்ணுக்கு அடிப்பதே சுகம் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது கார்த்திக் சுப்புராஜ். அவரது இறைவி படத்தில் வரும் சினிமா தயாரிப்பாளர் ஒருவரை பற்றிய சித்தரிப்பு அப்படிதான் இருக்கிறது. தமிழ்சினிமாவில் கூட அப்படியொரு தயாரிப்பாளர் இருந்தார். இன்னமும் இருக்கிறார். தன்னிடம் கைகட்டி கதை சொன்ன ஒரு இயக்குனர், படப்பிடிப்பு முடிந்து இனி தயாரிப்பாளர் தயவு தேவையில்லை என்று தெரிந்ததும் அதே தயாரிப்பாளரை பற்றி சேற்றில் புரட்டி அடிக்காத குறையாக பிரண்ட்ஸ் வட்டாரத்தில் பேச, அது அப்படியே அவர் காதுக்கு போனது. அவ்வளவுதான்… படத்தை தூக்கி ஓரமாக வைத்துவிட்டார்.

ஒரு வருஷம் இரண்டு வருஷம் என்று அது அப்படியே பெட்டியிலேயே உறங்கியது. அதற்கப்புறம் அவர் தயாரிப்பில் உருவான படங்கள் கூட வெளிவந்தது. இந்த படத்தை கண்டுகொள்ளவேயில்லை. எப்படியோ… ஒருமுறை தயாரிப்பாளரை நேரில் சந்தித்து தன் தவறை உணர்ந்ததாக கூறிய இயக்குனர், பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கிறேன் என்று கூறியதும் படத்தை வெளியிட்டார். அது வந்த வேகத்திலேயே மீண்டும் பெட்டிக்குள் போனது தனிக்கதை. ஆனால் இவ்வளவு கதைக்கு பின்னால் கூட ஒரு நாகரீகம் இருந்தது.

ஆனால் இறைவியில், தன் தயாரிப்பாளரை தேவிடியா பையா… என்கிறார் எஸ்.ஜே.சூர்யா. மற்றவர்களுக்கு எப்படியோ? இந்த விஷயம் படத் தயாரிப்பாளர்கள் இடையே ஒரு பெருமூச்சை எழுப்பியிருக்கிறது இப்போது. சற்று உரக்கவே கவலைப்பட்டிருக்கிறார் கங்காரு, அமைதிப்படை பார்ட் 2, லட்டு போன்ற படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி.

உங்களின் இறைவி பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. எஸ் ஜே சூர்யாவின் நடிப்புக்கு ஒரு பூங்கொத்து. சிறிய வயதிலேயே இயக்குநராகும் அதுவும் தயாரிப்பாளர் ஒருவர் மனது வைத்ததால் இயக்குநராகும் பாக்கியம்பெற்றவர் கார்த்திக் சுப்புராஜ். அதுவும் மூன்றாவது படத்திலேயே முக்கியத்துவம் பெற்றுவிட்ட இயக்குநராவது எவ்வளவு பெரிய கொடுப்பினை? ஆனால் இதுக்கெல்லாம் காரணமான தயாரிப்பாளர் என்கிற ஒரு இனத்தை விஜி முருகன் என்பவரின் கதாபாத்திரத்தின் மூலம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தியுள்ளீர்கள்.

இதுக்கு முன்னாடி நான் என்ன பண்ணிக்கிட்டிருந்தேன்னு தெரியுமான்னு கேக்கிறதில் ஆரம்பித்து அவரின் கடைசி நிமிசம் வரை தயாரிப்பாளர் என்பவன் படு கேவலமானவன்… எந்த எல்லைக்கும் போவான். அவனால் ஒரு இயக்குநரோ படைப்பாளியோ அவன் குடும்பமோ வெகு சாதாரணமாக நசுக்கப்படும் என அடுக்கடுக்காக சேற்றை வாரியிரைத்துள்ளீர்கள். தயாரிப்பாளன் என்பவனுக்கு கதை ஞானமே கிடையாது என்பதைப் போன்ற எண்ணத்தை பார்ப்பவர்கள் மனதில் நன்றாகவே நஞ்சாகக் கலக்க முடிந்திருக்கிறது உங்களால் கா.சு. கொலைகாரனாகவும் மாறுவான். எடுத்துவைத்த படத்தை வேறொருவனை வைத்து புதுப்படமாக கொண்டு வரும் ஈனத்தனத்தையும் செய்வான் என்றெல்லாம் பெருமைப்படுத்திவிட்டீர்கள் கார்த்திக். இந்த படத்தைப் பார்த்தவனிடம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கைகுலுக்கையில் நான் ஒரு தயாரிப்பாளர் என அறிமுகப்படுத்த நேருமானால் அவனின் என்மீதான மரியாதை என்னவாக இருக்கும்? சொல்லுங்கள்.

எவனோ ஒருவன் உயிரைச் சிந்தி காசு எடுத்துட்டு வருவான். அவன் காசில் படமெடுத்துவிட்டு அவனையே காறி உமிழ்வது போன்ற காரியத்தை எப்படி செய்ய முடிந்தது உங்களால்? இத்தகைய காட்சிகளையும் வசனங்களையும் வைக்க உங்களின் தயாரிப்பாளர்கள் எப்படி சம்மதித்தார்கள்? ஏவிஎம் சரவணன் சார் மாதிரி பெரியவர்கள் இப்படத்தைப் பார்த்தால் எப்படி நொந்துபோவார்கள்? தயாரிப்பாளர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியதை ஒரு தயாரிப்பாளனாக வன்மையாகக் கண்டிக்கிறேன். எத்தனையோ பெரும் படைப்பாளிகளைக் கொண்டது இந்த இயக்குநர் சமூகம். அவர்கள் தயாரிப்பாளர்களை எப்படி மதித்து வந்திருக்கிறார்கள், இன்னமும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு இயங்குங்கள். இன்றைய சூழலில் கதை சொன்னவர்களை நம்பி பணம் போட்டு மீண்டும் வாழ்க்கையின் அடித்தட்டுக்கே வந்துவிட்ட தயாரிப்பாளர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஆனால் ஒரு தயாரிப்பாளரால் கிடப்பில் போடப்பட்ட படம் அல்லது நடுத்தெருவுக்கு வந்த இயக்குநர்களைச் சொல்லுங்கள் பார்ப்போம்? காட்சிப்படுத்துதல் முக்கியம் என்பதைவிடவும் காயப்படுத்துதல் கூடாது என்பதில் கவனமாக இருங்கள் கார்த்திக். அடுத்த படத்திற்கும் இன்னொரு தயாரிப்பாளரைத் தேடித்தான் போவீர்கள்.. என்பதுதான் இதில் மிகப்பெரிய முரண். போங்க. படம் பண்ணுங்க. ஆனால் கண்ணாடி வீட்டுக்குள்ளயிருந்து கல்லெறியாதீங்க. நல்லதல்ல!

இதுதான் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை.

இப்படியெல்லாம் சர்ச்சைகள் வரும் என்பதை உணராதவரா கார்த்திக் சுப்புராஜ்? இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறாரோ?

பின் குறிப்பு- நான் முதல் பாராவில் குறிப்பிட்ட அந்த தயாரிப்பாளர் யார்? இயக்குனர் யார்? படம் என்ன? என்றெல்லாம் உள் டப்பியில் வந்து கேட்கக்கூடாது. ஒரே ஒரு க்ளூ- படத்தின் பெயர் மா-வில் ஆரம்பிக்கும். ரி-யில் முடியும்!

1 Comment
  1. Mani says

    மாஸ்கோவில ஓடுது காவேரி

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இறைவி – விமர்சனம்

பெண்ணெனப்படுவது பேரின்பம் எனவும், பெண்ணெனப்படுவது பெருந்துன்பம் எனவும், இருவேறு கருத்துக்களால் பிளவு பட்டுக்கிடக்கிறது உலகம். தாய், தாரம், மகள் என்று ஆண்களின் வாழ்வின் அசைக்க முடியாத ஆதாரமாக...

Close