சங்கடத்தில் கே.வி.ஆனந்த்! சிக்கலில் ஆர்யா! காரணம் யார்யா?
காதல் விவகாரங்களில் நின்று அடித்தாலும், கலெக்ஷன் விவகாரங்களில் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. ராஜா ராணி படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக ஐந்தாறு பிளாப் கொடுத்த நடிகர் அநேகமாக இவராகதான் இருக்கும். இருந்தாலும், தமிழ்நாட்டில் சோப்ளாங்கி ஹீரோக்களே கோடிகளில் சம்பளம் கேட்பதால், வேறொரு கருமத்திற்கு கொடுத்து அழுவதைவிட, அஞ்சு பத்து அதிகம் போட்டு ஆர்யாவையே ஹீரோவாக்கிவிடலாம் என்று நினைப்பது இயல்புதானே? அதுமட்டுமல்ல, கடைசி நேரத்தில் சம்பளத்தை முழுசாக விட்டுக் கொடுப்பது. ரிலீசுக்காக கடன் வாங்கிக் கொடுப்பது. பிரமோஷன்களுக்கு தவறாமல் வருவது என்று சில பல சிறப்பான காரணங்களால் எத்தனை தோல்விக்குப் பிறகும் அவர் பின்னால் திரிகிறது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் கூட்டம்.
கட்!
அப்படியாப்பட்ட ஆர்யாவுக்கே அடி மடியில் சோதனை?
கே.வி.ஆனந்த் ஆர்யா இணைந்து ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு படம் பண்ணுகிறார்கள் என்ற தகவலை கசிய விட்டதே ஆர்யாதானாம். தனக்கு நெருக்கமான ஆங்கில பத்திரிகை ஒன்றின் மூலம் அந்த செய்தியை அவரே பரவவிட, கே.வி.ஆனந்த் ஜெயம் ரவியை இணைத்துவிடும் திட்டத்திலிருந்த ஏஜிஎஸ்சுக்கு கடும் ஷாக் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஆறு பிளாப் கொடுத்த ஒரு ஹீரோவுக்கு எதுக்குய்யா ஐந்து கோடி சம்பளம் கொடுக்கணும்? ஆள விடுங்க என்கிறார்களாம். இந்த பிரஷர் அப்படியே கே.வி.ஆனந்த் தலையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அவரும் படமெடுக்கிற கம்பெனி சொல்வதை கேட்கிற மூடுக்கு வந்துவிட்டாராம்.
விஷயத்தை புரிந்து கொண்ட ஆர்யா, சம்பந்தப்பட்ட பட நிறுவனத்தையே தொடர்பு கொண்டு “என் சம்பளம்தான் உங்களுக்கு பிரச்சனைன்னா, அதை ஒரு பெரிய விஷயமாக நினைக்க வேண்டாம். நாலு கோடியை குறைச்சுகிட்டு ஒரு கோடி கொடுங்க போதும்” என்று கூறினாராம். அதற்கும் காரணம் இருக்கிறது. இஞ்சி இடுப்பழகி தவிர அவருக்கு வேறு படங்கள் இல்லை. இந்த படத்தையும் விட்டால் நிலைமை என்னாவது? பாய்ஞ்சு அடிக்கிற கழுகுன்னு நினைச்சா, இப்படி படக்குன்னு ஒழுகுற மெழுகா ஆகிட்டாரே என்று கம்பெனிக்கும் இன்ப அதிர்ச்சி.
இருந்தாலும் படப்பிடிப்புக்கு போகிற வரைக்கும் எதுவும் நிரந்தரமில்லை என்கிறது இப்போதைய நிலவரம்.