லிங்காவில் நன்றி சொல்லியிருக்கணுமா பென்னி குயிக்குக்கு? கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்
‘லிங்கா’ படத்தில் வரும் அந்த பிளாஷ்பேக்கும், அதில் ரஜினியின் நடிப்பும் இன்னும் பல வருஷங்களுக்கு பேசப்படும்! அதே நேரத்தில் அந்த கேரக்டர் யாரை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டது என்பதும் சொல்லாமலே புரிந்துவிடும் அவர் முல்லை பெரியார் அணையை கட்டிய பென்னிகுயிக்தான் என்று. ‘லிங்கா என்னுடைய கதை. அதை திருடிவிட்டார்கள்’ என்று ஒருவர் நீதிமன்றத்தை நாடியபோது கூட, ‘எல்லாரும் அறிந்த பென்னிகுயிக்கின் வரலாற்றை யார் வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். இதில் எங்கிருந்து வந்தது திருட்டு?’ என்று விளக்கம் அளித்திருந்தார் கே.எஸ்.ரவிகுமார். ஆனால் படத்தின் டைட்டில் கார்டில் பென்னிக்குயிக்குக்கு சிறிய அளவில் கூட கிரடிட் தரவில்லையே? இது பெரும்பான்மையான விமர்சகர்களின் கருத்தாக இருந்தது.
ரைட்… இப்போது கே.எஸ்.ரவிகுமார் என்ன சொல்கிறார்? ‘அப்படியே அது பென்னிகுயிக்கின் வரலாறு அல்ல. அவர் ஆங்கிலேயர். அதுவும் தன் சொந்த பணத்தில் அணை கட்ட துவங்கவில்லை அவர். ஆங்கிலேயர் கொடுத்த பணத்தில்தான் கட்ட ஆரம்பித்தார். ஆனால் அந்த பணத்தில் முடிக்க முடியாத சூழ்நிலை வந்த பிறகுதான் தன்னுடைய ஊருக்கு போய் எல்லாவற்றையும் விற்று கொண்டு வந்து அணையை கட்டி முடித்தார். இது ஓரளவுக்கு லிங்கேஸ்வரன் கேரக்டருடன் ஒத்துப் போயிருந்தாலும், அப்படியே அவருடைய கதை இல்லையே? அதனால்தான் கிரடிட் செலுத்தவில்லை’ என்றார்.
படத்தின் க்ளைமாக்சில் ரஜினி அந்தரத்தில் பறந்து பலுன் பைட் போடுவதெல்லாம் டூ மச்சாக இருக்கிறதே? என்ற கேள்விக்கு படக்கென்று வெட்டுக்கத்தி போல பதில் சொல்ல துவங்கினார் கே.எஸ்ரவிகுமார். ‘இதுவே ஆங்கில படமா இருந்தா கைதட்டி கொண்டாடுறீங்க, ஆனா தமிழ்ல எடுத்தா அது எப்படின்னு கேட்கிறீங்க? அது மட்டுமல்ல, ரஜினியின் தீவிர ரசிகர்கள் அப்படி ஒரு க்ளைமாக்சைதான் விரும்புறாங்க. என்னை லிங்கான்னு கூப்பிடாதே… லிங்கேஸ்வரன்னு கூப்பிடு என்று ரஜினி கூறிவிட்டு அந்த கல்வெட்டை தடவிக் கொடுப்பதோடு கதை முடிந்துவிடுகிறது. அதற்கப்புறம் நான் காட்டியது ரஜினி ரசிகர்களுக்கான படம். பிடிக்கிறவங்க இறுதி வரைக்கும் இருந்து பார்க்கட்டும். பிடிக்காதவங்க அந்த கல்வெட்டு காட்சியோடு கிளம்பட்டுமே’ என்றார்!
விளக்கம் நல்லாதான் இருக்கு. விமர்சகர்களுக்குதான் எப்படி இருக்குமோ, தெரியல…!
Universal Super Star Rajini in and & as ‘LINGAA’ IS Blockbuster