அவ்வளவுதானா சந்தானத்தின் டக்கு?
ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் வாங்கி முதல் சாதனையை நிகழ்த்தியவர் வடிவேலு. அதற்கப்புறம் சந்தானம் தினப்படி சம்பளமாக 25 லட்சம் வரை போனதாக சொல்கிறது ஒரு வயிற்றெரிச்சல் ரெக்கார்டு! இன்று மொட்டை ராஜேந்திரனே நாளொன்றுக்கு இரண்டு லட்சம் வாங்குகிற அளவுக்கு போயிருக்கிறது காமெடி நடிகர்களின் போக்கு! அட… நம்ம பன்னிமூஞ்சு வாயன் யோகி பாபு கூட நாள் சம்பளத்தில் அக்ரிமென்ட் போடுகிற அளவுக்கு காமெடி நடிகர்களின் ராஜ்ஜியத்தில் ஒரே உய்யலாலாதான். இதில் சூரி பற்றியெல்லாம் சொன்னால் ஆஸ்பத்திரி செலவு படிக்கிற நமக்குதான்.
சந்தானம் நம்மள காப்பாத்துடுவாரு என்ற நம்பிக்கையில் படம் நடிக்க வரும் சுமார் மூஞ்சு குமார்கள் கூட, அவரது சம்பளத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் நடிப்பாசையை தொலைத்த கதையெல்லாம் கோடம்பாக்கத்தில் உண்டு. இவ்வளவு ஜபர்தஸ்துக்கும் பந்தாவுக்கும் பொருத்தமாக இருந்த சந்தானத்தின் நிலைமை இப்போது எப்படியிருக்கிறது? சார் இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் கிட்டதட்ட முக்கால் ஹீரோவாக நடித்த இரண்டு படங்கள் இன்னும் வியாபாரம் ஆகாமலேயே பெட்டிக்குள் முடங்கியிருக்கிறது. இந்த முரட்டு முரண்பாட்டை எப்படி சமன் செய்வது என்று புரியாமல் தவித்து வருகிறார்கள் அவ்விரு படம் சம்பந்தப்பட்டவர்கள்.
லட்டு தின்ன ஆசையா படத்தில் இவருடன் நடித்த டாக்டர் ஒருவர் முழு நேர ஹீரோவாகும் ஆசையில் எடுத்த வாலிப ராஜா படத்தில் சந்தானமும் ஒரு ஹீரோ. ஆனால் அந்த படத்திற்கு இதுவரை நூறு முறையாவது ரிலீஸ் தேதி அறிவித்திருப்பார்கள். ம்ஹூம்… குதிரை குழியை தாண்டினால்தானே? படத்துல சந்தானமெல்லாம் இருக்காருங்க என்று அவர் போட்டோவை குளோஸ் அப்பில் காண்பித்தாலும், படத்தை யாரும் சீண்டுவதாக காணோம். அதற்கப்புறம் நம்பியார். ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் சந்தானம் அரை ஹீரோ. படம் ஆரம்பித்த நாளில் இருந்தே இருவரும் இருக்கிற விளம்பரங்கள்தான் பட்டொளி வீசி பறந்தது. ஆனால் சந்தானத்தின் மார்க்கெட், நம்பியாருக்கு துளியும் உதவவில்லை என்பதுதான் நிஜமாம்.
இருந்தாலும் சிவகார்த்திகேயன் படத்தை விட ஒரு நாளாவது அதிகமாக ஓட வச்சு காட்றேன் என்று சபதம் எடுத்திருக்கிறாராம் மிஸ்டர் சந்த்! (பந்த் மாமூ… பரோட்டா கடைய மூடி அரை நாளாச்சு)