இது நம்ம ஆளு- விமர்சனம்

அப்பளத்தை டேபிள் வெயிட்டா வச்சுட்டு, ‘ஐயய்யோ பறக்குதே’ன்னு அலறுனானாம் ஒருத்தன்! வலுவே இல்லாத கதையும், தெளிவே இல்லாத திரைக்கதையுமாக பலமே இல்லாமல் பந்து விளையாட வந்திருக்கிறார் பாண்டிராஜ்! என்ன செய்வது? எதுய்யா நம்ம ஆளு? என்று விட்டேத்தியாக படம் பார்த்து, விடுதலைக்கு ஏங்க வைக்கிறது அந்த இரண்டரை மணி நேரமும். நல்லவேளை… சூரி இருந்தார். அவரும் இல்லையென்றால் இந்த படத்தின் கதி?

ஐடி யில் வேலை பார்க்கும் சிம்புவுக்கு ஆன்ட்ரியா மீது லவ். அவரும் ஒரு கட்டத்தில் இவரது லவ்வை அக்சப்ட் பண்ணுகிறார். அந்த நேரம் பார்த்து திருவையாறிலிருக்கும் நயன்தாராவை பெண் பார்க்க கிளம்புகிறார் சிம்பு. போன இடத்தில் ஆண்ட்ரியா லவ் பற்றி நயன் கேட்க, இதென்னடா வம்பா போச்சு என்று ஜர்க் ஆகிறார் சிம்பு. ஒரு வழியாக ஆன்ட்ரியாவை கழற்றிவிட்டது ஏன் என்று விளக்கி, நயனுடனான லவ்வை தொடர்கிற நேரத்தில்தான் அந்த படபட சடசட! சம்பந்திகளுக்குள் சண்டை.

இந்த கல்யாணம் நடக்காது என்று நயன்தாரா அப்பா சவால்விட, கட்டுனா உன்னைதான் கட்டுவேன் என்று நயன்தாரா போனில் அழ, எப்படியாவது அந்த பொண்ணை கட்டிட்டு வந்துருடா என்று சிம்புவின் அப்பா நெகிழ, சிம்பு என்ன செய்தார்? தற்கொலைக்கு முயன்ற நயன்தாரா பிழைத்தாரா? தலைய சுற்றி உடைக்க வேண்டிய தேங்காயை தலைநகரத்தையே சுற்றி வந்து உடைத்திருக்கிறார் பாண்டிராஜ். என்ன செய்வது? எடுக்கிற முடிவு சரியா இல்லேன்னா பக்கிங்காம் கால்வாய் கூட, பழக்க தோஷத்தில் கூவம்தான்! (‘உங்க ரெண்டு பேரையும் வச்சு ஒரு வழியா படத்தை முடிச்சுட்டேன்’ என்று இறுதியில் அவர் சொல்லிவிட்டு கடந்து போகிற காட்சி, நமக்கெல்லாம் சிரிப்பு. ஐயோ பாவம்… வலிக்கிற விரலுக்குதானே உரிக்கிற அவஸ்தை புரியும்?)

விரல் காட்டுகிற சிம்பு இல்லை. சவடால் டயலாக் இல்லை. ஒரு விரலால் வில்லன்களை ரத்தம் கக்க விடும் கோமாளித்தனம் இல்லை. இதையெல்லாம் இந்த படத்தில் வச்சே ஆகணும் என்று வற்புறுத்துகிற சிம்பு…இல்லவே இல்லை! அந்த வகையில் உங்களுக்கு கோவில் கட்டி குலவை போடணும் சிம்பு. அப்படியே அவருக்கு குலவை போட இன்னும் இன்னும் என்று படத்தில் கொட்டிக் கிடக்கிறது ஏராளம். முக்கியமாக சூரியின் மைண்ட் வாய்சில் மட்டுமல்ல, சமயங்களில் வாய்விட்டே அவர் பேசும் அந்த டயலாக்குகள் சிம்புவை இன்னும் தரை மட்டமாக்குகிறது. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டதற்கும் அந்த சிவனே காரணம் போல. நல்லது!

படத்தில் ஒரே கெட்டப்பில் வர வேண்டிய சிம்பு, கால ஓட்டத்தை கண்டபடி சிதைத்து சிதைத்து படப்பிடிப்புக்கு வந்திருப்பார் போலிருக்கிறது. பல காட்சிகளில் பல கெட்டப்புகளில் தோற்றமளிக்கிறார். அதுவும் ஒற்றை காலில் ஒரு ஆட்டம் ஆடுகிறாரல்லவா? பாதி தூக்கத்தில் தட்டி எழுப்பப்படும் ரசிகனுக்கு, ஆடுவது சிம்புவா, அவங்க அப்பா டி.ஆரா என்ற டவுட்டே வந்து தொலையும். அப்படியிருக்கிறார் எஸ்.டி.ஆர்! அந்த பாட்டு எந்த வகையிலும் தேவையில்லாத ஒன்று என்பதை தியேட்டரின் அமைதியே சொல்லிவிடுகிறது.

நயன்தாரா கிழவியானாலும், அந்த பொக்கை வாயை ரசிக்க ஒரு கூட்டம் வரும் போலிருக்கிறது. அப்படியிருக்கிறார் அவர். அந்த திமிரென்ன, குழைவென்ன, கொஞ்சல் என்ன? மிஞ்சல் என்ன, இன்னும் பத்து வருஷத்துக்கு நயன்தாராவின் கோட்டை பக்கம் நெருங்க முடியாது எவராலும். எதற்கெடுத்தாலும், ‘செருப்பால அடிப்பேன்’ என்று அவர் சொல்வது திகிலல்ல. அதை சிம்பு ரசிக்கிறாரே… அதுதான் செம தில் அண்டு திகில்! படத்தில் இவ்விருவருக்கும் வைக்கப்பட்டிருக்கும் பாடல் காட்சிகளை, ஈயம் பித்தளைக்கு போட்டு எலுமிச்சை தோல் வாங்கி பதப்படுத்தினாலும் ஒருவகையில் பிரயோஜனம் உண்டு. ஆங்…. சொல்ல மறந்தாச்சே? படத்திற்கு இசை, டி.ஆரின் வாரிசும், சிம்புவின் இளவலுமான குறளரசன். அவர்களை கடித்த கொசு கூடவா இந்த தம்பியை கடிக்கவில்லை? சுத்தம்!

சிம்பு, நயன்தாரா என்ற காஸ்ட்லி ஐஸ்கிரீம்களை கூட தன் தோளில் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் சூரி. படீர் திடீரென இவர் அடிக்கும் கமென்டுகளுக்கு திமிலோகப்படுகிறது தியேட்டர். அதுவும் சிம்பு நயன்தாரா லவ் காலங்களை இன்னும் மறக்காத வாலிப வயோதிக அன்பர்களுக்கு சூரியின் கவுன்ட்டர் ஒவ்வொன்றும் சூறைக்காற்று… மின்னல்… இடி! அதிலும் சிம்பு எப்படிப்பட்ட ஆள் என்று அவர் நயன்தாராவிடம் விளக்குகிற காட்சியில் டயலாக் புட்டு புட்டு வை டைப்!

ஆன்ட்ரியாவை அந்த காலத்து ஜோதிகா போல நடிக்க சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. எதற்கெடுத்தாலும் சிரிக்கிறார்… சிணுங்குகிறார். ஓவர் பர்பாமென்ஸ். நமக்குதான் எரிச்சல் ஏரோப்ளேனில் ஏறுகிறது.

வெட்டித்தள்ளி மிக சுருக்கமாக சொல்ல வேண்டிய படத்தை நீட்டி முழக்கிய எடிட்டருக்கு, இன்னும் நாலு வருஷத்துக்கு படம் கிடைக்காமல் போகட்டும்… சாபமய்யா சாபம்!

படத்தின் கேமிராமேன் பாலசுப்ரமணியெம் என்பதை மீண்டும் ஒரு முறை டைட்டிலை பார்த்துதான் உறுதி செய்ய வேண்டும். அப்படி டல்லடிக்கிறது பல காட்சிகள்.

யாரு சுயசரிதையை வேணும்னாலும் படமாக்குங்க. ஆனால் அதை டிராமாவா சொல்லி எங்க வேட்டியிலிருக்கிற சரிகையை உருவணுமா? இது நம்ம காசு…. பத்திரம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

4 Comments
  1. சீலன் says

    முதல் நாளே கோடிக்கணக்கில் வசூல்,அதைப்பொறுக்கமுடியாமல்,திருட்டு விசிடி.காம்ல போட்டுஇருகிறாங்க என்று படத்தை வெளியிட்டவங்க சொல்லுறாங்க…..

    அதில நீங்களும் ஒருத்தரா?????????
    விமர்சனம் இப்படி எழுதுறேங்க

    1. roja says

      முதல் நாளே கோடிக்கணக்கில் வசூல் so what? tell me whether this movie has any story?

  2. Rangava says

    I am not a fan of Andhanan’s review, But This time, Andhanan wrote the truth ! Honest review !

  3. roja says

    mokka padam. nowadays movies run for star value not for good story.
    this movie has no story.just running because nayanthara-simbu hype.i am a big fan of pndijaraj but he dissapoints.
    no time for good cinema

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வேந்தர் மூவிஸ் மதனின் தற்கொலை கடிதம் எதிரொலி! லாரன்ஸ் படத்திற்கு சிக்கல்! விநியோகஸ்தர்கள் சென்னை விரைவு?

அரவான், லிங்கா, பாண்டியநாடு, பாயும்புலி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை விநியோகித்தும், சில படங்களை நேரடியாக தயாரித்தும் வந்த வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் அதிபர் மதன், உருக்கமாக...

Close