விஜய்க்கு வைத்திருந்ததை கைப்பற்றிய ஜெய்! அடுக்குமாப்பா இதெல்லாம்?
நான் அஜீத் ரசிகன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் நடிகர் ஜெய். ஆனால் ஆசைப்படுவதெல்லாம் விஜய் இடத்திற்கு. அதுவும் எப்படி? ரொம்ப ரொம்ப நேரடியாக! எட்டு முழம் வேட்டியில பட்டுப்புடவை விழுந்த மாதிரி இந்த யோசனையும் ஆசையும் நல்லாதான் இருக்கு. ஆனால் விஜய் எங்கே… இவர் எங்கே… என்றுதானே சிரிப்பார்கள் அல்லவா? ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை ஜெய்.
விஜய்க்காகவே பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு தலைப்பை கைப்பற்றி இப்போது அதில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் ஜெய். இதன் ஆதி அந்தம் விபரங்கள் பின் வருமாறு-
என் என் 4 என்ற படத்தை இயக்கிய மணிமாறன், மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இதில்தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார் ஜெய். இந்த படத்திற்கு புகழ் என்று தலைப்பு வைத்திருந்தாராம் மணி. இது ஒருபுறமிருக்க விஜய்யிடம் மீண்டும் கால்ஷீட் வாங்கி ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். என்ன காரணத்தினாலோ அவருக்கு கால்ஷீட் கொடுக்காமலே இழுத்தடிக்கிறார் விஜய். இருந்தாலும் ‘புகழ்’ என்ற தலைப்பை விஜய்க்காக பதிவு செய்து வைத்து காத்துக் கொண்டேயிருந்தார் அவர். இந்த ஐ பட களேபரத்தில் அந்த ‘புகழ்’ தலைப்பை மீண்டும் ரினுவல் செய்யாமலிருந்துவிட்டாராம்.
விஜய்க்கு வைக்கப்பட்ட அந்த தலைப்பைதான் ‘ஜெய்’ படத்திற்கு வைத்துவிட்டார் மணி. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஜெய் துள்ளி குதித்தாராம். நான் இப்போ குட்டி விஜய் போல உணர்றேன். இப்போ தலைப்பு வந்திருச்சு. இனிமே அவரளவுக்கு என் மார்க்கெட்டும் வரணும் என்று வெளிப்படையாகவே கமென்ட் அடித்தாராம் ஜெய். நியாயமாக ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் பேசி அந்த தலைப்பை நாங்கள் வைத்துக் கொள்கிறோம் என்று கேட்பதுதானே முறை? அது நடக்கவேயில்லையாம்.
விஜய் அஜீத் மாதிரியான மாஸ் ஹீரோக்களுக்கு வைக்கப்பட வேண்டிய தலைப்பு. என்ன செய்வது? அழகழகான நாட்டு குஷ்புகளுக்கு செந்தில் மாதிரியான காமெடியன்கள்தானே புருஷனாக அமைகிறார்கள். அப்படி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் இந்த விஷயத்தையும்.