உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகளுடன் ஜாமீன் பெற்றார் ஜெயலலிதா! 21 நாள் சிறைவாசம் முடிவு

டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடன் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதுதவிர தனிநீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் தண்டனையை நிறுத்தி வைக்க வலியுறுத்தியும் தங்கள் சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று கோரியும் தனித்தனியாக 4 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவர்களுடைய ஜாமீன் மனுக்களை நீதிபதி சந்திரசேகரா கடந்த 7-ந் தேதி நிராகரித்தார். குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கலாம் என்று அரசு தரப்பில் விரும்பினாலும் ஊழலின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு தனிநீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனுவையும், ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார். கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதால் ஜெயலலிதா சார்பில் 9-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு மறுநாள் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் சார்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜெயலலிதாவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் கடந்த திங்கட்கிழமை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஆஜராகி ஜெயலலிதாவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதேபோல் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி சார்பில் மூத்த வழக்கறிஞர் சுஷில் குமார் ஆஜராகி, அவர்களுடைய ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணைக்கான வேண்டுகோளை முன்வைத்தார். இந்த வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்று விசாரணைக்கு தேதி குறித்து உத்தரவு பிறப்பித்தனர். இதன்படி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு இந்த விசாரணை நடைபெற்றது. இந்த பெஞ்ச்சில் நீதிபதிகள் மதன் லோகுர், சிக்ரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் இருப்பதால் மருத்துவ வசதிகளைப் பெற முடியவில்லை. அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது நீதிபதிகள், 18 ஆண்டுகாலம் வழக்கை இழுத்தடித்த நீங்கள் இன்னும் இந்த வழக்கை எத்தனை ஆண்டுகாலத்துக்கு இழுப்பீர்களோ என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் பிரதான வழக்கை எப்போது முடிப்பீர்கள் என்றும் தலைமை நீதிபதி கேட்டதற்கு, விரைவில் முடித்து விடுவோம் என்றார். அப்போது சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது; அவர்கள் இத்தனை ஆண்டுகாலம் வழக்கை இழுத்தடித்தனர். தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்யக் கூடாது என்று வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து தலைமை நீதிபதி தத்து அதிருப்தி தெரிவித்தார். அப்போது, தமிழகத்தின் இனி வன்முறை நடைபெறாது. ஜெயலலிதா எங்கும் தப்பிச் சென்றுவிடமாட்டார் என்று உறுதி தருவதாக பாலிநாரிமன் வாதிட்டார். பின்னர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்து நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.

மேலும் நீதிபதிகள் மீதோ, சுப்பிரமணியன் சுவாமி மீதோ களங்கம் கற்பித்தாலும் வன்முறைகள் தொடர்ந்தாலும் ஜாமீன் வழங்கியதை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
From the desk of Akash AshokKumar – Cinematographer

This mail is with reference to our discussions regarding my father Shri Ashok kumar ( Cinematographer/Director ) As you are...

Close