கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி! பொங்கி அழுத பிரதர்ஸ்! வெற்றின்னா சும்மாயில்லடா…

உன்னை கண்டு நானாட என்னை கண்டு நீயாட கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளியானது நேற்று! பிறகென்னவாம்? ஆனந்த கண்ணீரில் மிதந்தார்கள் ஜெயம் ரவியும், மோகன்ராஜாவும். (ஒரு பேச்சுக்கெல்லாம் இல்ல சாமி… நிஜமாகவே கண்ணீர் விட்டு அழுதார்கள் இருவரும்) “ஜெயம் ராஜாங்கிற பேர்ல பல ஹிட்டுகள் கொடுத்திருக்கேன். பத்து வயசுல என்னை தியேட்டருக்கு கூட்டிட்டு போய் ‘தி கிரேட் எஸ்கேப்’ படம் காட்டி, இதுதாண்டா சினிமான்னு எனக்கு கற்றுக் கொடுத்தவர் அப்பாதான். அவருடைய எடிட்டிங் ஸ்டூடியோவில்தான் ஓடியாடி விளையாடியிருக்கேன். எனக்கு சினிமாவ கற்றுக் கொடுத்த அப்பாவை முன்னாடி வச்சுக்கணும்னு தோணுச்சு. நான் மோகன் ராஜான்னு பெயர் மாத்திகிட்டேன்” என்று கூறும்போது தன்னையறியாமல் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார் மோகன் ராஜா.

‘தனி ஒருவன்’ படம் சும்மா வெற்றியில்லை. சற்றே அலட்சியமாக நினைத்த அத்தனை மனசையும் தூக்கிப் போட்டு மிதித்த வெற்றி. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னமும் எல்லா ஏரியாவிலும் ஹவுஸ்புல். இந்த சந்தோஷத்தை நேற்று பிரஸ்சோடு பேசி மகிழ்ந்தார்கள் அண்ணனும் தம்பியும். பேச்சென்றால் பேச்சு. அப்படியொரு பேச்சு.

“என்னை எல்லாரும் ரீமேக் ராஜான்னாங்க. ஒரு கட்டத்தில் நான் யார்னு எனக்கே குழப்பம் வந்திருச்சு. டைரக்டரா? இல்லையா? புத்திசாலியா? இல்லையா? இந்த சினிமாவுல இருக்கணுமா? வேண்டாமா? இப்படி நிறைய யோசிச்சேன். இந்த கதையை எந்த ஹீரோவிடம் சொல்லப் போனாலும், ஸ்ரெய்ட் பிலிம் வேணாம். நீங்க ரீமேக் பண்ணுங்கன்னு சொன்னாங்க. நீங்க ரீமேக் பண்ணக் கூடாது. நேரடியாக கதை பண்ணுங்க என்று சொன்னது ஏஜிஎஸ் அகோரம்தான். அவருக்கு நான் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கேன்” என்ற மோகன் ராஜா, “எந்த ஹீரோவும் இந்த கதையில் நடிக்க தயாரா இல்லாதப்போ, என் தம்பி என்னை நம்பி நடிக்க வந்தான். கதையை அவன் கேட்கவேயில்லை” என்றார். இந்த சமயத்தில் ஜெயம் ரவியும் தன்னையறியாமல் கண்ணீர் வடிக்க… பிரஸ் ஏரியாவில் நிசப்தம்.

வேடிக்கை என்னவென்றால், இந்த படத்தின் கதையை கேட்டு யாரும் இம்ப்ரஸ் ஆகியிருக்க முடியாது. திரைக்கதைதான் விசேஷம். அதன் காரணமாக இந்த படத்திற்கு மியூசிக் போடக் கூட முன்னணி இசையமைப்பாளர்கள் வரவில்லையாம். எனக்கு இந்த படத்துல ஹோப் இல்ல. அதனால் ஸாரி என்றார்களாம். அந்த நேரத்திலும் மனம் தளரா விக்ரமாதித்யனாக இருந்திருக்கிறார் மோகன் ராஜா. முழு படத்தையும் முடித்து அதை போட்டுக் காண்பித்துதான் ஹிப் ஹாப் தமிழன் ஆதியை இசையமைக்க வைத்திருக்கிறார்.

இறுதியாக பேசிய ஜெயம் ரவி, இத்தனை காலம் என்னை ஜெயிக்க வச்சு பார்த்து சந்தோஷப்பட்டார் என் அண்ணன். முதன் முறையா அவர் வெற்றி பெற்றதை நான் சந்தோஷமா பார்த்துகிட்டு நிற்கிறேன் என்றார் கண்ணீரும் கம்பலையுமாக!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
50 லட்சம் கூட வேணாம் ஆளை விடுங்க சாமீய்… நயன்தாரா ஓட்டம்!

“நீ வரும்போது நான் வர மாட்டேன். ஆனால் நான் கூப்பிடும்போது நீ வரணும்” என்கிற மென்ட்டாலிடி, எந்த வகையில் பார்த்தாலும் அட்ராசிட்டியில்லாமல் வேறென்னவாம்? அப்படியொரு சிட்டியில் சிக்கிக்கொண்டுதான்...

Close