எங்களை படுத்தி வச்சேல்ல…? அண்ணனுக்கு ஜெயம் ரவி சாபம்!
‘நடிப்பா? ஆளை விடுங்கப்பா…’ என்று ஒவ்வொரு முறையும் தப்பித்து ஓடிய டைரக்டர் ராஜாவை ‘கரைக்க’ ஒரு சோப்பு கம்பெனி முதலாளியால் ‘முடியும்’ என்பதை நிரூபித்திருக்கிறார் ஏ.வி.அனுப். இவர் மெடிமிக்ஸ் சோப் கம்பெனியின் அதிபர். இவரது தயாரிப்பில் உருவாகும் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் ஜெயம் ராஜா.
நான் ஷுட்டிங்குக்கு நடிக்க கிளம்பும்போது ஜெயம் ரவி சொன்னான். ‘எங்க எல்லாரையும் படுத்தி வச்சேல்ல. இப்ப போய் பாரு. நடிப்புன்னா என்னன்னு தெரியும்’ என்று. நிஜமாகவே அங்க போன பிறகுதான் தெரிஞ்சுது எனக்கு. ஒவ்வொருத்தரையும் ரொம்ப பிழிஞ்சு எடுத்துருக்கோம்னு. இனிமே ரொம்ப பிழிய கூடாது. ஆனால் நான் ஏன் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று என் வீட்டிலேயே ரொம்ப பேருக்கு ஆச்சர்யம். வேறொன்றுமில்லை. இந்த படத்தில் நடிக்கும் நான்கு தெய்வங்களுக்காகதான்‘.
‘ஒரே பிரசவத்தில் பிறந்த நாலு பெண் குழந்தைகள் இதில் நடிச்சுருக்காங்க. அவங்களை நேர்ல பார்த்தப்போ இறைவனின் அற்புதம் என்னன்னு தெரிஞ்சுது. இந்த குழந்தைகள் கருவில இருக்கும் போதே, அவங்க அப்பாவிடம் மருத்துவர்கள் சொன்னார்களாம். அத்தனை குழந்தையையும் பெற்றுக் கொண்டால் ரொம்ப சிரமம் என்று. ஆனால் அவர்தான் எனக்கு அத்தனை குழந்தையும் வேணும்னு சொன்னாராம். அவங்களை இந்த மேடையில் அறிமுகப்படுத்துறதுல மட்டற்ற மகிழ்ச்சி’ என்றார். (தம்பதிகள் இருவரும் புகழ்பெற்ற தனியார் வங்கி ஒன்றில் அதிகாரிகளாக பணியாற்றுகிறார்களாம்)
ஜெயம் ராஜா சொன்னதை போலவே அந்த குழந்தைகளை பார்க்க அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. சுட்டிப் பூக்கள் நான்கும் வளவளவென தங்களுக்குள் பேசிக் கொண்ட அழகை பார்க்க வேண்டுமே! அழகு… அற்புதம். படத்தின் இயக்குனர் குரு ரமேஷ் ஒரு புதிய களத்தில் இந்த படத்தை இயக்கியிருக்கிறாராம். குழந்தை கடத்தல் கதையா என்று கேட்டால் இல்லை என்றார். (அதுவரை நிம்மதி)
நாலு குழந்தைகளும் ஒரே மாதிரி இருந்தது ஒரு சவுகர்யம். ஏதாவது ஒரு குழந்தை அங்க இங்க விளையாடிக் கொண்டிருந்தால் கூட, எதையாவது ஒரு குழந்தையை வைத்து குளோஸ் அப் எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் சந்தோஷப்பட்டதை அனுபவ ரீதியாக யோசித்துப் பார்த்தால், ‘அடடே…!’ என்றிருக்கும்.
குழந்தைகளின் சத்தம் குதுகலம்தான்.