இறங்கி வந்தார் ஜெயம் ரவி! ஏறி வந்தார் சுசீந்திரன்! ஸ்டார்ட் கேமிரா ஆக்ஷேன்ன்ன்ன்
விதை வைக்கும் போதே விலை வச்சாலும், சந்தைக்கு போகும் போதுதான் சறுக்கும். வழுக்கும்! விவசாயத்திற்கு மட்டுமல்ல, இப்போதெல்லாம் ஹீரோக்களுக்கும் அதே சூத்திரம்தான். இது சில நேரம் ஆத்திரத்தை கிளப்பினாலும், தொழில் நடக்கணுமே சாமீய்…?
‘‘சிவகார்த்திகேயன் சம்பளத்தை ஏத்திட்டாரு. என் கம்பெனியெல்லாம் அவருக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு வளரல…” என்று மீடியாவில் பேசி ஜாடையாக குத்துகிற தனுஷும் சரி, பாண்டிராஜும் சரி. அவரவர்கள் வாங்கிய முதல் பட சம்பளத்தையா இப்போதும் வாங்குகிறார்கள்? இந்த உண்மையை வசதிக்காக மறந்துவிடுகிற பலரால், ஹீரோக்களுக்கும் கெட்டப் பெயர். அப்படியொரு கெட்டப் பெயருக்கு ஆட்பட்டாலும், நிலைமை புரிந்து கீழே இறங்கி வந்திருக்கிறார் ஜெயம் ரவி. இது சுசீந்திரன் ரவி காம்பினேஷன் கசமுசா.
‘ரோமியோ ஜுலியட்’ ரிலீஸ் ஆனதுமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்றோம். அந்த படத்தை நானே தயாரிக்கிறேன்” என்று இரண்டு கோடி சம்பளம் பேசி ஒரு அட்வான்சையும் கொடுத்திருந்தாராம் சுசீந்திரன். அதற்கப்புறம்தான் ஹாட்ரிக் ஹீரோவாகி, உச்சாணிக் கொம்புக்கு போய்விட்டாரே ரவி? ஹீரோவாக இவரை தீர்மானித்த காலம் போய், டைரக்டரை அவர் ‘ச்சூஸ்’ பண்ணும் காலம் வந்தாச்சு. இன்னும் பழைய ஞாபகத்திலேயே எண்ணை வழியும் பேரீச்சம் பழத்தோடு போய் நின்றால், பொட்டலத்தை கூட சீண்ட மாட்டார் ரவி என்பது புரியாதா? இருந்தாலும் போட்டுப் பார்ப்போமே என்று பழைய சம்பளத்திற்கே டேட் கேட்டாராம் சுசீ.
“அண்ணே… நிலைமையை புரிஞ்சுக்கோங்க. இப்ப இருக்கிற நிலைமைக்கு பழைய சம்பளம் செட் ஆகாது” என்று கூறி அனுப்பி விட்டாராம் ஜெயம்ரவி. வருமா, வராதா? என்ற குழப்பத்தில் வேறு படங்களுக்குள் நுழைந்து கொண்ட சுசீ, தற்போது பிரச்சனையை புடவைக்கும் சேதாரமில்லாமல், முள்ளுக்கும் ஆதாரமில்லாமல் முடித்துவிட்டார். எப்படி? இதே படத்தை அவர் வேறொரு தயாரிப்பாளருக்கு எடுத்துத்தரப் போகிறாராம். அவர்? ஜெயம் ரவியின் தற்போதைய மார்க்கெட் சம்பளத்தை கொடுத்துவிடுவார். இந்த படத்தில் சுசீந்திரனுக்கும் லாபத்தில் ஒரு பங்கு என்று முடிந்திருக்கிறது பேச்சு வார்த்தை. முதல் கட்டமாக ஐந்து கோடி அட்வான்ஸ் கைமாறியிருக்கிறதாம்.
அட்வான்சே அம்புட்டுன்னா, சம்பளம் எம்புட்டு இருக்கும்?