இளைஞர் மரணம்! ஆம்புலன்சுக்கு வழிவிடாத ஜீவா? செய்தியும் ஜீவா தரப்பு விளக்கமும்!

கடந்த பல மணி நேரங்களாக இந்த செய்தி வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் விறுவிறுவென பரவிக் கொண்டிருக்கிறது. அது சொல்லும் விஷயம்? மனிதாபிமானமற்றவர் நடிகர் ஜீவாவும் அவரை சுற்றியுள்ள கூட்டமும் என்பதுதான்!

விஷயத்தை விரிவாக பார்ப்போமா?

திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில், செங்கிப்பட்டி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் விபத்திற்குள்ளாகி படு காயமாம். அருகிலிருந்தவர்கள் அவரை அள்ளிப் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். போகிற வழியில் அதாவது, வல்லம் அருகேயுள்ள தஞ்சை மருத்துவ கல்லுரி சாலையில் ஜீவா நடிக்கும் படத்தின் ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். அதனால் சாலையை அடைத்துக் கொண்டு படப்பிடிப்புக் குழுவினர் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்க, விபத்தில் படு காயமுற்ற அந்த இளைஞரை அந்த வழியாக அழைத்துச் செல்ல வேண்டிய நிர்பந்தத்திலிருந்தவர்கள் வழிவிட சொல்லி கேட்டிருக்கிறார்கள்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுமார் அரை மணி நேரம் கடந்திருக்கிறது. இளைஞரின் உறவினர்களுக்கும் படப்பிடிப்புக்கு குழுவினருக்கும் கை கலப்பும் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். அதற்கப்புறமும் வழி கிடைக்காததால், பத்து கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டு அந்த இளைஞரை எடுத்து சென்றார்களாம். துரதிருஷ்டவசமாக போகிற வழியிலேயே அந்த இளைஞர் மரணமுற்றிருக்கிறார்.

இதற்கிடையில் தங்களை தாக்க வந்ததாக படப்பிடிப்பு குழுவினர் , இளைஞரின் உறவினர்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார்களாம்.

நடந்தது என்ன என்பது குறித்து ஜீவா தரப்பில் விசாரித்தோம்- அவர்கள் சொல்லும் விளக்கம் இது.

ஜீவா நடிக்கும் ‘திருநாள்’ படப்பிடிப்பு அங்கு நடைபெற்றது உண்மைதான். அது மழைக்காட்சி என்பதால், சாலை முழுவதும் தண்ணீர் லாரிகளை நிறுத்தி வைத்திருந்தார்கள். முறையாக அனுமதி பெற்றிருந்த காரணத்தால் அந்த லாரிகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. படப்பிடிப்பும் மாலை நான்கு மணிக்கே முடிவுற்று ஜீவா மற்றும் படப்பிடிப்பு குழுவினர் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்கள். சம்பவம் நடந்தபோது அங்கு படப்பிடிப்பு குழுவினர் யாரும் இல்லை. சாலையில் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரிகளை அப்புறப்படுத்த தாமதம் ஆகியிருக்கலாம். இந்த விஷயம் ஜீவாவுக்கோ, மற்றவர்களுக்கோ தெரியவில்லை என்பதுதான் உண்மை. மற்றபடி விபத்தில் இறந்த வாலிபர், இந்த இடத்தை கடக்கும் முன்பே இறந்துவிட்டார் என்றுதான் அந்த ஊர் மக்களே கூறுகிறார்கள் என்று முடித்துக் கொண்டார்கள்.

யார் சொல்வது நிஜம்? அவரவர் மனசாட்சிக்கு மட்டும் தெரிந்த உண்மை அது.

Read previous post:
டிமான்ட்டி காலனி – விமர்சனம்

அக் மார்க் திகிலில் செய்யப்பட்ட ஆவிக்கதைதான் இதுவும். ஆனால் ஒன்று... மற்ற படங்களில் வருவது போல அஞ்சு நிமிஷம் சிரிச்சு, அஞ்சு நிமிஷம் பயந்து ஆற அமர...

Close