உங்களுக்கே நியாயமா இருக்கா சார்? கடும் அதிர்ச்சியில் ஜீவா!

ஜெயிக்கிற குதிரை மேலதான் சூதாட்டக்காரனின் கண் இருக்கும்! அப்படி பார்த்தால் கே.வி.ஆனந்த் ஒரு சூதாட்டக்காரராக இருப்பாரோ என்ற எண்ணம் வராமல் யாரும் இந்த விஷயத்தை கடந்துவிட முடியாது. தும்பிக்கை தேய்ஞ்சு தாம்புக்கயிறு ஆனது போல, கோ படத்தில் கொடி நாட்டிய கே.வி.ஆனந்த் அதற்கப்புறம் வருகிற எல்லா படங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து “தோல்வியும் கொடுப்பாரு… படுதோல்வியும் கொடுப்பாரு..” என்கிற நிலைக்கு ஆளானார்.

இனிமேலாவது உருப்படியா படம் எடுத்து பழைய இடத்தை பிடிக்கணும் என்று சூளுரைத்து, சூடம் கொளுத்தி கிளம்பியிருப்பார் போலும். நட்பாவது… வாக்குறுதியாவது… என்ற நிலைமைக்கு தள்ளியிருக்கிறது அந்த சத்தியம். யெஸ்… விரைவில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கக் கிளம்பியிருக்கிறார் கே.வி.ஆனந்த். ஆனால் முதலில் இந்த படத்திற்காக அவர் கதை சொல்லி நம்பிக்கை கொடுத்தது ஜீவாவுக்குதானாம். “நீங்க போக்கிரி ராஜாவை முடிச்சுட்டு வாங்க” என்று கூறியிருந்தாராம். கடைசியில் போக்கிரிராஜா, ஒரு மண்ணுக்கும் ஆகாமல் போய், சுமார் சுமார் ராஜாவானதில் ஜீவாவைவிட கடும் அப்செட் கே.வி.ஆனந்துக்குதான்.

அந்த நேரத்தில்தான் அதிர்ஷ்ட தேவதை தானாக வந்து கதவை தட்டினாள். ஏஜிஎஸ் நிறுவனத்தில் கமிட் ஆகியிருந்த விஜய் சேதுபதி, எனக்கு கே.வி.ஆனந்த் இல்லேன்னா ஏ.ஆர்.முருகதாஸ் கொடுங்க என்று கேட்க, இவர் பக்கம் தள்ளிவிட்டுவிட்டார்கள் கேவிஆனந்தை.

ஜீவா வெறும் பல்லில் முறுக்கு மென்று கொண்டிருப்பதாக தகவல்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Sawaari Movie Stills

Close