தள்ளிப் போனது ஜிகிர்தண்டா ரிலீஸ் தயாரிப்பாளர் மீது சித்தார்த் ஆத்திரம்!
இம்மாதம் 25 ந் தேதி வெளியாவதாக இருந்த ‘ஜிகிர்தண்டா’ கடைசி நேரத்தில் மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்களுக்கு இந்த தகவல் தயாரிப்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் ஹீரோவான சித்தார்த்துக்கும், டைரக்டரான கார்த்தி சுப்புராஜுக்கும் இந்த தகவல் அவர்கள் மூலம் தெரியவர, இருவருமே காச் மூச் ஆகியிருக்கிறார்கள்.
பின்னணியில் நடந்தது என்ன? பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன்தான் ஜிகிர்தண்டா படத்தின் தயாரிப்பாளர். ஒருவகையில் தனுஷுக்கும் இவருக்குமான ரிலேஷன் ஷிப் மற்றவற்றை விட ஆழமானது. இந்த ரிலீஸ் தள்ளிப் போன விவகாரத்திற்கும் அதுவே காரணம். வேலையில்லா பட்டதாரி படம் தியேட்டருக்கு வந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. லிங்குசாமி அண் பிரதர்ஸ் இருவராலும் சற்றே லோ லெவலில் கணிக்கப்பட்ட விஐபி, பிரதர்ஸ் வெளிட்ட சதுரங்க வேட்டையை சற்றே பின்னுக்கு தள்ளி வேக வேகமாக கலெக்ஷனை குவித்துக் கொண்டிருப்பதாக தகவல்!
இந்த ஹிட்டை இன்னும் இன்னும் மதிப்பு கூட்ட வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த தனுஷ், அடுத்த வாரமே ரிலீசாகவிருக்கும் ஜிகிர்தண்டா ரிலீசை தடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தாராம். உடனே கதிரேசனிடம் பேசியிருக்கிறார். ‘நம்ம படத்துக்கு இடைஞ்சலா உங்க படத்தின் ரிலீஸ் இருந்திடக் கூடாது’ என்று தனுஷ் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. தனுஷ் சொன்னால் மறு பரிசீலனை ஏது? உடனே படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துவிட்டார் கதிரேசன்.
உடனே பொங்கி எழுந்த சித்தார்த், தனது ட்விட்டரில் ஆ… ஊ… என்று கதறியிருக்கிறார். ‘சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்ததோடு இவர் கணக்கு முடிந்தது. அதே விதிதான் இயக்குனருக்கும். நாலா பக்கமும் பணத்தை கடன் வாங்கி கொட்டி படமெடுத்த தயாரிப்பாளர்தான் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய வேண்டுமே தவிர, இவர்களுக்கு என்ன வந்ததாம்?’ கதிரேசனுக்கு ஆதரவான தயாரிப்பாளர்களின் கேள்வியும் இதுதான்.
நியாயமும் அதானே?