ஜிகிர்தண்டா- விமர்சனம்
முதுகு தண்டை ‘திகீர் தண்டா’வாக்குகிற மதுரை ரவுடியிடம், ஒரு அப்பாவி சினிமா டைரக்டர் சிக்கினால் என்னாவார்? அதுதான் ‘ஜிகிர்தண்டா’!
ரவுடி பற்றி சினிமா எடுப்பதற்காக மதுரைக்கு பயணமாகும் அறிமுக இயக்குனர் சித்தார்த், அங்கு சிக்கிக் கொண்டு சீரழிவதுதான் முழு படமும்! அதற்காக இரண்டு மணி நேரத்தில் சொல்ல வேண்டிய கதையை கிட்டதட்ட மூணு மணி நேரத்தில் சொல்லி அந்த மதுரை ரவுடியையே மகாத்மா ஆக்கிவிடுகிறார் டைரக்டர் கார்த்தி சுப்புராஜ். (சுருக்கமா சொல்லி நிறைவா கைதட்டல் வாங்க பழகுங்கப்பா…! ) அதிலும் படம் முடிந்து அதற்கப்புறமும் இருபது நிமிஷம் ஓடுகிறது. ஸ்….அப்பாடா!
படத்தின் ஹீரோவாக பாபி சிம்ஹாவும், குணச்சித்திர வேடத்தில் சித்தார்த்தும் நடித்திருக்கிறார்கள். கெஸ்ட் ரோலில் லட்சுமிமேனன் நடித்திருக்கிறார். அதனாலென்ன? அவ்வளவு சாக்லெட் மூட்டைகளையும் அசால்டாக சுமக்கிறார் அ.சேது என்கிற சிம்ஹா! இவரை ஹீரோவாக்குகிறேன் பேர்வழி என்று இனிமேல் வேறொரு கூட்டம் கிளம்பும். பிரதர் அதற்கெல்லாம் மயங்காமலிருந்தால் தமிழ்சினிமாவுக்கு கால்ஷீட் சொதப்பாத ஒரு பிரகாஷ்ராஜ் கிடைக்கலாம்.
சித்தார்த்தை சின்னாளப்பட்டி மண்ணுல போட்டு புரட்டி எடுத்தாலும், ‘இவன் நம்மாளுடா ’ என்கிற உணர்வு வருவதாக இல்லை. அதை நன்றாக உணர்ந்தே அரை உப்பாக சேர்த்திருக்கிறார் டைரக்டர். பலே அண்ணாத்த… அதே நேரத்தில் காட்சிகளின் கட்டுமானம் சித்தார்த் மீது ஒரு சிம்பதியை உருவாக்கவும் தவறவில்லை. இவருக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைக்கிற விஷயத்தையும், தனியார் சேனல்கள் டி.ஆர்.பிக்காக ‘போட்டுக்கொடுத்து’ வேலை வாங்கும் அழகையும் மிக துல்லியமாக சொல்லிவிட்டு போகிறார் கார்த்தி சுப்புராஜ். படம் நெடுகிலும் ஒரு ஹாஸ்யம் உலவிக் கொண்டேயிருக்கிறது. அதுவும் அவ்வளவு சீரியசான காட்சிகளிலும் கூட லேசாக கிச்சுகிச்சு மூட்டுவதை லாவகமாக செய்திருக்கிறார்.
அதுவரைக்கும் தட்டையாக செல்கிற கதை, ‘ஏன் சேதுவையே ஹீரோவா நடிக்க வைக்கலாமே, அவருக்கென்ன… நல்லாதானே இருக்கார்’ என்று லட்சுமிமேனன் திருவாய் மலரும் போது சடக்கென்று பற்றிக் கொள்கிறது. அதற்கப்புறம் சட்டி முழுக்க கொத்து பரோட்டாவும் அதன் கமகமக்கும் வாசனையும்தான்! தன்னை ஒரு ஹீரோவாகவே நினைத்துக்கொண்டு கேமிராவுக்கு முன்னால் அந்த ரவுடி பண்ணுகிற அட்டகாசங்கள் அதிர வைக்கிற வெடிச்சிரிப்பு. அதுவும், அவர்களுக்கு நடிப்பு சொல்லித்தர வருகிற கண்டிப்பு வாத்தியாரின் பர்பாமென்சும், அதற்கு ரவுடிகளின் ரீயாக்ஷனும் செம செம…!
இதற்கு முன்பு வருகிற பல காட்சிகளிலும் சிம்ஹா எப்படிப்பட்ட கொடூரமானவன் என்று காட்டிவிடுகிறார்களா? எந்த நேரத்திலும் யானை பட்டாசு வெடிக்கக் கூடும் என்கிற திகிலோடுதான் மிச்ச படத்தை நோக்க வேண்டியிருக்கிறது. அந்த ‘கெத் ’ கடைசி வரைக்கும் குறைந்தபாடில்லை சிம்ஹாவிடம்! எந்த மொழியில் பேசினாலும், அதை முக பாவம், அங்க அசைவுகளால் சொல்லிவிட வேண்டும் என்று தனக்கு கற்றுக் கொடுத்ததை அவர் க்ளைமாக்சில் செய்து காட்டுவது கைதட்டல் ஏரியா. சரக்கென்று லட்சுமிமேனனுக்கு அவர் ஸ்கெட்ச் போடும்போது, ஐயோ… கதையை வழக்கமான ரூட்ல திருப்புறாங்களே என்று பதற வைக்கிறார் டைரக்டர். நல்லவேளை…!
எடுத்த எடுப்பிலேயே சித்தார்த் மீது காதல் வந்துவிடுகிறது லட்சுமிமேனனுக்கு. அது அப்படிதான் போலிருக்கு என்று தொடர்ந்தால், ஸ்டீரியோ டைப் லவ்வுக்குள் தள்ளவில்லை அவர்களை. ‘நான் உன்னை ஒரு நல்ல பிரண்டாதான் நினைச்சேன்’ என்கிற சித்தார்த்திடம், ‘எனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க. யாருக்கு வேணும் உன் பிரண்ட்ஷிப்’ என்று கண்ணீரும் கம்பலையுமாக லட்சுமி கிளம்பும்போது ‘ஜோடிய சேர்த்துதான் வைங்களேன்ப்பா’ என்றே தோன்றுகிறது. (லட்சுமிமேனனும் மூலிகை சிகிச்சைக்கு உட்பட வேண்டிய நேரம் வந்தாச்சு என்கிறது அவரது உப்பிய கன்னங்களும் உடலமைப்பும்)
கருணாகரன், அந்த பிஎஃப் ரவுடி, ‘அண்ணே நான் செய்யுறண்ணே…’ என்று கொலை செய்ய துடிக்கும் அப்ரண்டிஸ் ரவுடி, எதற்காக இவ்வளவு துக்குணுன்டு கேரக்டர் என்று தெரியாமலே ரீ என்ட்ரி ஆன முன்னாள் ஹீரோயின் அம்பிகா, துட்டு வந்தால் போதும் என்று கமர்ஷியல் ஆக்ஷன் கதைக்கு ஆளாய் பறக்கிற தயாரிப்பாளர் கேரக்டரில் நடித்திருக்கும் நரேன், ‘இதுக்குள்ள மைக் இருக்குண்ணே. உன்னை வேவு பார்க்கிறவங்க இங்கதான் எங்கியோ ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கணும்’ என்று டெக்னிக் சொல்லித்தரும் சௌந்தர்ராஜா என்று அத்தனை பேரும் கொடுத்த கேரக்டருக்கு கோபுரம் கட்டியிருக்கிறார்கள்!
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மிட்டலோ மிரட்டல். அந்த ‘கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சா…’ பாடலில் தன்னை மீறிய துள்ளல். அதற்கு குரல் கொடுத்த பாடகரின் குரலும் அழகு! மழை… கொலைக்கான ஸ்கெட்ச்… ராத்திரி… இம் மூன்று கலவையுடன் கேவ்மிக்கின் கேமிராவும் திகில் சேர்கிறது ஒரு காட்சியில். இப்படி படம் நெடுக தன் ஒளிப்பதிவை சூழ்நிலைக்கு பொருத்தமாக்குகிறார் கேவ்மிக் யு ஆர்ரி!
நீ….ளம் ஒன்றே இப்படத்தின் பெரும் குறை. அதை ‘தலை கனம்’ இல்லாமல் குறைத்திருந்தால், ‘மகா கனம் பொருந்திய’ இயக்குனராக கொண்டாடப்பட்டிருப்பார் கார்த்திக் சுப்புராஜ்.
-ஆர்.எஸ்.அந்தணன்
Nijamana vimarshanam… next level of tamil cinema nu pala per solirukum nilayil… unmayana vimarshanam koduthu ulirgal.